Tuesday, March 20, 2018

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற ஐகோர்ட்டில் வழக்கு

Added : மார் 20, 2018 02:20

சென்னை: முதுகலை மருத்துவ பட்டய படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத இடங்களை ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் சுதன் உள்ளிட்ட, ஏழு அரசு டாக்டர்கள், தாக்கல் செய்த மனு:முதுகலை மருத்துவ படிப்புக்கு, மாநில ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற, எங்களுக்கு தகுதி உள்ளது. முதுகலை மருத்துவ கல்வி விதிமுறைகளின்படி, தொலைதுார, கடினமான பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் மற்றும் அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.அரசு பணியில் இருக்கும் டாக்டர்களுக்கான, ௫௦ சதவீத ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள், மாநில ஒதுக்கீட்டுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை.

 இதுகுறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சகம் மற்றும் சுகாதார பணிகள் இயக்குனர் ஜெனரலுக்கு, மனு அனுப்பப்பட்டது; அதை பரிசீலிக்கவில்லை. இது, நீதிமன்ற உத்தரவுக்கும், மருத்துவ கல்வி விதிமுறைகளுக்கும் எதிரானது.எனவே, முதுகலை மருத்துவ பட்டய படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், வெயிட்டேஜ் மதிப்பெண்கள், அரசு டாக்டர்களுக்கு, ௫௦ சதவீத ஒதுக்கீட்டை வழங்கும்படி, மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு விளக்கம் பெறும்படி, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௨௨ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024