Friday, March 16, 2018

குறட்டையா? அலட்சியம் வேண்டாம்...!



தூங்கும்போது குறட்டை விடுவதை நாம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக நினைப்பதில்லை. ‘கொர்’ ‘கொர்’ என்ற குறட்டை சத்தத்தில் மற்றவர்களின் தூக்கம் தொலைவதுண்டு.

மார்ச் 15, 2018, 11:15 AM

வெளிநாடுகளில் குறட்டை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. குறட்டைவிடும் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்சினையாக குறட்டை உள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கும். குறட்டைக்கு பின் உள்ள ஆபத்தினை நம்மில் பலர் உணர்வதில்லை. குறட்டை எதனால் ஏற்படுகிறது? நாம் சுவாசிக்கும்போது மூச்சுக்காற்று மூக்கு, மேல் தொண்டை மற்றும் அடித்தொண்டை வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. இந்த பாதையில் எந்த இடத்திலாவது அடைப்பு இருப்பின் மூச்சுக்காற்று சீராக உள்ளே செல்ல முடியாது.

குறுகிய மூச்சுப் பாதையில் காற்று உள்ளே செல்லும்போது குறட்டை சத்தம் ஏற்படுகிறது. இதனால் என்ன தெரிகிறது? குறட்டை விடுபவர்கள் தூங்கும்போது சரியாக மூச்சு விடுவதில்லை. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் குறைவாக உடம்பில் செல்கிறது. அது மட்டுமல்ல. குறட்டை விடுபவர்கள் தொடர்ச்சியாக தூங்குவதில்லை. அவர்கள் விட்டு விட்டு தூங்குகிறார்கள்.

இவர்கள் பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறார்கள். இவர்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியாது. கார், பைக் ஓட்டும்போது கூட தூங்கி வழிந்து விபத்துக்குள்ளானவர்களும் உண்டு. இந்த பிரச்சினைக்கு தூக்கத்தில் வரும் மூச்சடைப்பு (ஓ.எஸ்.ஏ.) என்று கூறுவார்கள். இது வாழ்க்கையை பாதிப்பதோடு ரத்த கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், இதயக் கோளாறு ஏற்படவும் காரணமாக இருக்கிறது.

ஓ.எஸ்.ஏ. என்னும் வியாதியை கண்டறிவது எப்படி? இதற்கு ‘ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் தூக்கத்தில் நடத்தும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் ஒருவருக்கு தூக்கத்தில் எத்தனை முறை (சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு) அடைப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்படுகிறது.

“எனது கணவர் விடும் குறட்டை சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் அவர் தூங்கும்போது நாளுக்கு நாள் மூச்சு வருகிறதா? என்று சில நேரங்களில் பயமாக இருக்கிறது டாக்டர்” என்று எனது நோயாளி ஒருவரின் மனைவி கேட்டார். அந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

தூக்கத்தில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு சி.பி.ஏ.பி. என்ற கருவியை தூங்கும்போது பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த கருவியில் இருந்து வரும் அழுத்தம் மூச்சுப்பாதையின் அடைப்பை சீராக்குகிறது. இதன் விளைவாக தொடர்ச்சியான தூக்கம் கிடைக்கிறது. குறட்டை சத்தமும் கேட்பதில்லை. அடுத்த நாள் பகல் பொழுது கவனக்குறைவு ஏற்படுவதில்லை.

யார் யாருக்கு ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். நீங்கள் குறட்டை விடுபவரா? பகலில் அதிகமாக உறக்கம் வருகிறதா? இரவில் மூச்சடைப்பு வருகிறதா? தடிமனாக அல்லது அகலமான கழுத்தினை உடையவரா? ரத்த கொதிப்பு உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ஆணா? உங்கள் எடை அதிகமாக இருக்கிறதா? மேற்கூறியவற்றில் நீங்கள் பொருந்தி வந்தால், கட்டாயம் ஒரு நுரையீரல் மருத்துவரை அணுகவும்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு. குறட்டையை கட்டுப்படுத்த உணவு பழக்க வழக்கம் மாற வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மூச்சுப்பயிற்சி செய்வது அவசியம். சளி, மூக்கடைப்பு தொந்தரவு இருந்தாலும் குறட்டை வர வாய்ப்புண்டு. எனவே குறட்டை வியாதிகளை அலட்சியப்படுத்தாமல் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.

தூக்கத்தில் வரும் குறட்டை பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம். நாளை (மார்ச் 16) உலக தூக்க தினம்.

- டாக்டர் ஏ.சுரேஷ், நுரையீரல் சிறப்பு மருத்துவர், சென்னை

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...