ரூ.13 ஆயிரம் லிமிட் கொண்ட எஸ்பிஐ கார்டில் ரூ.9 கோடிக்கு செலவு செய்த மும்பை இளைஞர்: சிபிஐ
By PTI | Published on : 13th March 2018 05:55 PM |
புது தில்லி: எஸ்பிஐயின் ரூ.13 ஆயிரம் வரை செலவு செய்யும் பண அட்டையைப் பயன்படுத்தி மும்பை இளைஞர் ரூ.9 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக சிபிஐ கூறியுள்ளது.
எஸ்பிஐ வங்கியால் வழங்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போது பயன்படுத்துவதற்கான (foreign travel card) ரூ.13 ஆயிரத்தை உச்சவரம்பாகக் கொண்ட பண அட்டையைப் பயன்படுத்தி மும்பை இளைஞர் பிரிட்டனில் ரூ.9 கோடிக்கு மோசடி செய்திருப்பது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
நவி மும்பையில் உள்ள என்ஆர்ஐ ஸீவூட்ஸ் கிளையில் மும்பையைச் சேர்ந்த இளைஞருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயண அட்டையைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. வெளிநாட்டு பயண அட்டை சேவையை எலமஞ்சில்லி சாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடட் நிர்வகித்து வருகிறது.
இந்த நிலையில், 13 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யும் வசதி கொண்ட அட்டையில் 9 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது குறித்து கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி எலமஞ்சில்லி சாஃப்ட்வேர் நிறுவனம் எஸ்பிஐ வங்கிக்கு தெரிவித்தது.
ஒரு தனி நபர் பயன்படுத்திய 3 வெளிநாட்டு பயண அட்டையில் பண மதிப்பை, சட்டவிரோதமாக வங்கியின் டேட்டாபேஸில் மாற்றி இந்த மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் 2017 பிப்ரவரி 12ம் தேதி வரை 374 பரிமாற்றங்கள் மூலமாக இ-காமர்ஸ் இணையதளங்களின் வாயிலாக இந்த 1.41 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9.1 கோடி) அளவுக்கு மோசடி நடந்துள்ளது.
இந்த பயண அட்டை சந்தீப் குமார் ரகு புஜாரி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் உச்ச வரம்பு ரூ.13 ஆயரம் மட்டுமே. அதன் பிறகு எந்த சலுகையோ, பண மதிப்பு கூட்டலோ செய்யப்படவில்லை. அட்டை வழங்கப்பட்ட மறுநாளே நெட்டெல்லர்.காம் உள்ளிட்ட இ-காமர்ஸ் இணையதளங்களில் ஏராளமான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது.
தகவல்தொழில்நுட்பத்தில் சட்டத்துக்கு விரோதமாக, இந்த அட்டையின் உச்சவரம்பு தொகையை மாற்றியக் குற்றத்துக்காக, அட்டையை பயன்படுத்திய புஜாரி மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது மோசடி, முறைகேடு செய்தல், விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment