Sunday, March 18, 2018

கைது... கலாட்டா... பில்லா! எம்.ஜி.ஆர் ஆட்சியில் ரஜினிக்கு நடந்தது என்ன?

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

ஆர்.எம்.முத்துராஜ்
ராஜமுருகன்


VIKATAN



கேள்வி: ''நீங்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே. உண்மையா?''

(ஏ.பி.பன்னீர்செல்வம், ஐ.சி.எப் காலணி, சென்னை)

ஜெயலலிதா: ''ஒரு படத்தில் அவருடன் நடிக்க மறுத்தது உண்மைதான். ஆனால், அதற்கு காரணம் என் வேடம். அந்த வேடம் என் மனதுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பொருத்தமாக அமையவில்லை. அதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. நல்ல படம் கிடைத்தால் அவருடன் நடிப்பதில் ஆட்சேபணை இல்லை.''

- 1979-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி 'மாலை முரசு' நாளிதழில் வெளியான ஜெயலலிதாவின் பதில் இது. வாசகர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில்கள் அளித்திருந்தார். அதில் ரஜினியைப் பற்றிய இந்த பதில் முக்கியமானது.



ஜெயலலிதா பதில்களில், எம்.ஜி.ஆர் பற்றிய பதிலும் இடம்பெற்றிருந்தது. மதுரை வி.எம்.பஷீர் அகமது என்பவர், எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ''எம்.ஜி.ஆர் மீண்டும் நடிக்க வந்தால், அவருடன் நீங்கள் இணைந்து நடிப்பீர்களா?'' என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

அதற்கு ஜெயலலிதா, ''அவர் மீண்டும் நடிக்க வந்தால், அவருடன் நடிக்க என்னை அழைத்தால், ஓ.எஸ்..'' என சொல்லியிருந்தார்.

சரி விஷயத்துக்கு வருவோம். அரசியலில் கால் பதித்திருக்கும் ரஜினி, இப்போது, எம்.ஜி.ஆர் புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி சிலாகித்து பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் தொப்பியை மாட்ட ஆரம்பித்திருக்கும் ரஜினி, இத்தனைக் காலம் அவரைப் பற்றி எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, இப்போது புரட்சித்தலைவருக்கு புகழாஞ்சலி செலுத்துகிறார்.

1979-ல் எம்.ஜி.ஆர், ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் ஜெயலலிதா. 2018-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முடிச்சுப்போட்டு பார்ப்போம்.

'ஜெயலலிதா பதில்கள்' வெளியான 1979-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1977-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்று, முதன்முறையாக ஆட்சியை பிடித்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது, ஜெயலலிதா அ.தி.மு.க-வில் இல்லை. சினிமாவில் நடிப்பதை குறைத்து, திரைத் துறையிலிருந்து கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்திருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு1980-ல்தான், ஜெயலலிதா நடித்த கடைசி படமான 'நதியைத் தேடி வந்த கடல்' திரைப்படம் ரிலீஸ் ஆனது.



இதே காலக்கட்டத்தில் ரஜினி, சினிமாவில் உயர தொடங்கியிருந்தார். 'முள்ளும் மலரும்', 'ப்ரியா' படங்கள் சூப்பர் ஹிட் ஆகி, நிறையப் பட வாய்ப்புகள் ரஜினியைத் தேடி வந்து கொண்டிருந்தன. 'ஜெயலலிதா பதில்கள்' வெளியான 1979 ஏப்ரல் 14-ம் தேதியில்தான், 'நினைத்தாலே இனிக்கும்' படமும் ரிலீஸ் ஆனது. அதற்கு முந்தைய மாதமான மார்ச் மாதத்தில், ரஜினியைப் பற்றி ஒரு செய்தி பரப்பரப்பாக பேசப்பட்டது. 'ரஜினிகாந்த் கைது' என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் முக்கிய தினசரிகளில் இடம் பிடித்தன. எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த ரஜினியின் கைது செய்தியின் பின்னணி இதுதான்.

ரஜினியின் கைதுக்கு காரணமாக இருந்தவர் ஜெயமணி. வாரப் பத்திரிகை ஒன்றில், சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி, போலீஸில் அதிரடியாக அளித்த புகாரில்தான் ரஜினி கைதானார். ''சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.'' என ஜெயமணி கொடுத்த புகாரில் 1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார். அப்போது ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் ஆகிய இருவரும்தான் ரஜினியை கைது செய்தவர்கள். ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலில் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நள்ளிரவு வரையில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



இ.பி.கோ 506 (மிரட்டுதல்), 336 (மற்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய காரியத்தில் கவனக் குறைவாக ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது வாக்குமூலமும் கொடுத்திருந்தார் ரஜினி. ''கார் ஓட்ட எனக்கு லைசென்ஸ் இல்லை. டிரைவர் இல்லாததால் காரை நானே ஓட்டினேன். ஜெயமணி என்னை தாக்கி நிறைய செய்திகளை எழுதினார். வழியில் அவரைப் பார்த்ததும் இதுபற்றி கேள்வி கேட்க நினைத்து, காரை நிறுத்தி பின்னால் இயக்கினேன். மோதவில்லை. அவரைக் கொலை செய்யும் நோக்கமும் எனக்கில்லை. காரைவிட்டு இறங்கியதும், ஜெயமணி செருப்பை கழற்றினார். அதனால் அவரின் சட்டையைப் பிடித்தேன். அவ்வளவுதான் நடந்தது. அவரை நான் மிரட்டவில்லை.'' என வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார். இந்த கைது ஐதராபாத்தில் நடந்தது. இதுபற்றிய செய்தியை 'மாலை முரசு' பதிவு செய்திருக்கிறது. அதில் வந்த செய்தி இதுதான். 'சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. ஜூன் 20-ம் தேதி சென்னை திரும்புவதற்காக இரவு 11 மணி விமானத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது ரஜினி மது அருந்தியிருந்தார். ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அங்கிருந்தவர்களுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த நண்பர்களிடமே ரஜினி சண்டை போட்டார். ஏர்போர்ட் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். அவரை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள் அதிகாரிகள். அங்கிருந்த கண்ணாடிகளை ரஜினி உடைத்தார். இதனால் போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவரது விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது' என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.



ரஜினிகாந்த்தின் இந்த இரண்டு கைது சம்பவங்கள் நடப்பதற்கு, முந்தைய ஆண்டு அதாவது, 1978 ஏப்ரலில் முதல்வர் எம்.ஜி.ஆர், அன்றை பிரதமர் மொரார்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். 'வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும். அதற்கு முதல்வராக இருந்து கிடைக்கும் சம்பளம் போதாது. அதனால், சினிமாவில் நடிக்க அனுமதி தாருங்கள்.' என கடிதத்தில் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். அரசியலில் முதல்வர் என்கிற உச்சாணிக்கு போனபோதும்கூட எம்.ஜி.ஆருக்கு சினிமா ஆசை போகவில்லை. சினிமாவில் நடிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சினிமாவில் தொடர்ந்திருந்தால் அது ரஜினி உட்பட பலரின் வளர்ச்சிக்கு பாதிப்பாககூட அமைந்திருக்கலாம்.

1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வை தொடங்கியிருந்த காலத்திலும்கூட சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். 1974 மார்ச் 9-ம் தேதி மோரீஸ் நாட்டுக்கு எம்.ஜி.ஆர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் பற்றி மார்ச் 6-ம் தேதி பிரஸ் மீட் ஒன்று கொடுத்தார் எம்.ஜி.ஆர். ''ஒரு நடிகரோ அல்லது டைரக்டரோ தன்னுடன் யாராவது ஒரு நடிகையையோ பெண்ணையோ அழைத்து சென்றால், அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியல்ல. நான் வெளிநாட்டுக்கு செல்லும்போது நடிகை லதாவை அழைத்து செல்வதில்லை. லதாவுக்கும் எனக்கும் ஒப்பந்தம் உள்ளது. என் அனுமதியின்றி வேறு படங்களில் அவர் நடிக்க முடியாது. கால்ஷீட் தருவதிலும் முதல் சலுகை எங்களுக்குதான் கிடைக்கும். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் கிடைத்த அனுபவம் இது.'' என அந்த பேட்டியில் விரிவாக பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.

நடிகை லதா எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தபோது வேறு படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அப்படி ரஜினியோடு நடிக்கவும் வாய்ப்பு வந்தபோது ஒப்பந்தம் காரணமாக அவருக்கு எம்.ஜி.ஆர் முட்டுக்கட்டைப் போட்டார். இது ரஜினிக்கு தெரிய வந்தது. ஆனால், அப்போது ரஜினியால் எதுவும் செய்ய முடியவில்லை.

எம்.ஜி.ஆர் கதாநாயகியான ஜெயலலிதா ரஜினியோடு நடிக்க முடியாமல் போய்விட்டது. ''அது எம்.ஜி.ஆரால் நடந்ததா?'' என்கிற விமர்சனத்துக்கு இன்று வரையில் விடை கிடைக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் கட்டுப்பாடு தளர்ந்த பிறகு லதா, ரஜினி கமல் படங்களில் நடித்தார். 'வயநாடு தம்பான்' என்ற மலையாளப் படத்திலும் 'நீயா' படத்திலும் கமலுடன் நடித்தார் லதா. ரஜினியோடு 'சங்கர் சலீம் சைமன்', 'ஆயிரம் ஜென்மங்கள்' 'வட்டத்துக்குள் சதுரம்' ஆகிய படங்களில் நடித்தார்.



ரஜினியோடு ஜெயலலிதா நடிக்க மறுத்த படம் 'பில்லா'.
'சினிமா வாய்ப்புகள் இல்லாமல் ஜெயலலிதா தவித்து வருகிறார்' என மும்பையில் இருந்து வெளிவரும் 'காஸ் பாத் பத்திரிகை செய்தி வெளியிட்டது. 1980 மே 25-ம் தேதி வெளியான அந்த செய்தியில் 'பில்லா' பற்றி விஷயமும் இடம்பெற்றிருந்தது. உடனே, ஜெயலலிதா மறுப்பு தெரிவித்தார். ஜூன் 10-ம் தேதி அன்று, 'காஸ் பாத்' பத்திரிகையின் ஆசிரியருக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை அனுப்பினார்.

''சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில், நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. 'பில்லா' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, என்னைதான் முதலில் அணுகினார். நான் மறுத்ததால் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிதான் 'பில்லா' படத்தின் ஹீரோ. ஆனாலும், நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே. ஆனால், எனக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் போய்விட்டது.'' என அந்த கடிதத்தில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.



அதற்கு அடுத்த ஆண்டான 1981-ல் அ.தி.மு.க-வில் இணைந்தார் ஜெயலலிதா. கொள்கைப் பரப்பு செயலாளர், ராஜ்ய சபா எம்.பி. என உயர்ந்தார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க. ஜெயலலிதா வசம் வந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவதாக சொல்லி அரசியல் களம் புகுந்திருக்கிறார் ரஜினி. அதோடு 'ஜெயலலிதா போற்றி' பாடியிருக்கிறார். ''இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவரைப் போல யாரும் கட்சியை நடத்தவில்லை.'' என சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இப்போது உயிருடன் இல்லை.

ரஜினிக்கு முன்பே கட்சி தொடங்கிவிட்டார் கமல். 'பில்லா' படத்தில் நடித்த ஶ்ரீபிரியா கமலின் கட்சியில் சேர்ந்துவிட்டார். லதாவோ எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினியோடு மேடையேறியிருக்கிறார்.

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது!

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...