Sunday, March 11, 2018

ஆதரவற்ற பெண் மனநோயாளிகளுக்கு அரசுக் காப்பகம் ! -” நாட்டிலேயே இது முதல் முறை! ” 

இரா.தமிழ்க்கனல்



மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழக அரசும் இணைந்து இந்த மையங்களை அமைக்கிறது.

மன அழுத்தம் போன்ற சாதாரண மனநலச் சிக்கல்களால் அவதிப்படுவோருக்கு தமிழக அளவில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரண சிக்கல் உடையவர்கள், தங்களின் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதில் பெரிய பிரச்னை இருப்பதில்லை. ஆனால் மனச்சிதைவு போன்ற தீவிர மனநோய் உடையவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அசைக்கமுடியாத சந்தேகமும் அமானுஷ்யமான குரல்கள் கேட்பதாகவும் கருப்பு உருவங்கள் பக்கத்தில் இருப்பதாகவும் உணரும் இவர்கள், அவற்றால் தங்களுக்கு ஆபத்து என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு உள்ளேயே பாதுகாப்பு இல்லை என வீட்டைவிட்டு வெளியேறி, நெடுந்தொலைவுக்கு நடந்தேசென்றுவிடவும் வாய்ப்பு உண்டு. இப்படியான நலச்சிக்கல் அடைந்தவர்கள், வீட்டார் மற்றும் உறவினர்களின் ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித்திரியத் தொடங்குவார்கள். தங்களின் உடை, தோற்றம் குறித்த அக்கறையின்றி காணப்படும் இவர்கள், தேவைப்படும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வார்கள்.

இரு பாலருக்கும் இந்த நோய் ஏற்படும் என்றாலும் இதனால் பாதிக்கப்படும் பெண்கள், கூடுதலான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பாலினரீதியில் இவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைக்கூட இவர்களால் உணர்ந்துகொள்ளக்கூட முடியாது என்பது பெரும் கொடுமை! சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இப்படியான பெண் மனநோயாளிகளுக்கு, எய்ட்ஸ் போன்ற உயிர்குடிக்கும் நோய்களும் தொற்றவைக்கப்படுகின்றன. இந்த அவலத்திலிருந்து பாதுகாக்க பல இடங்களில் அரசுக் காப்பகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மிக குறைந்த அளவே உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பெண் மனநோயாளிகளுக்கான பராமரிப்பு மையங்களைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. இந்தவகை மையங்கள் நாட்டிலேயே முதலில் தொடங்கப்படுபவையாக இருக்கும் என்று தேசிய சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி நம்மிடம் கூறினார்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களித்துவருகின்றன. இந்தத் திட்டமும் அதில் ஒன்று என்றாலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இது செயல்படுத்தப்படும்.

அவசரப் பராமரிப்பு மற்றும் மீட்பு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில், மூன்று எம்பிபிஎஸ் மருத்துவர்கள், ஒரு உளவியல் ஆலோசகர், 5 மனநல சமூகப்பணியாளர், ஒரு தகவல் பதிவாளர், 15 மனநல சிகிச்சை செவிலியர்கள், 2 பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளுநர், 2 பாதுகாவலர்கள் என 30 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இது செயல்படுத்தப்படும்.

இந்த ஐந்து மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பழைய மாவட்ட மருத்துவமனை கட்டடங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது; இதற்காக புதிய கட்டுமானங்களைச் செய்யவேண்டிய தேவை இல்லை என்பதால் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

முதலில், ஆதரவற்று சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளை மீட்புக்குழுவினர் கண்டறிவார்கள். மனநலச் சட்டப்படி நீதித்துறை நடுவரின் முன்னிலையில் நிறுத்தி, அவரின் உத்தரவைப் பெற்ற பின்னரே பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படவேண்டும். எனவே, அதன்படி கொண்டுவரப்படும் பெண் நோயாளிகளுக்கு மனநலச் சிகிச்சைக் குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள். மையங்களில் வைத்து பராமரிக்கப்படும் இவர்களுக்கு சிகிச்சையைத் தொடர்ந்து சராசரி வாழ்க்கை வாழ்வதற்கான தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும். சிகிச்சைப் பிந்தைய பராமரிப்பு எனப்படும் கட்டத்தில் நோயாளிகளை அவர்களின் குடும்பத்தினருடனோ சமூகத்தினருடன் கலந்துவாழவுமோ வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...