அபராதம் செலுத்தி புதிய தலைக்கவசம் பெறலாம்!
மைசூரில் தலைக்கவசம் அணியாமல் வந்து அபராதம் கட்டுபவர்களுக்கு இலவசமாகத் தலைக்கவசம் வழங்க போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சாலை விதிமுறைகளை மீறி அபராதம் கட்டுபவர்கள் மற்றும் பிரச்சினைகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாலை விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் பலர் அலட்சியமாக வருகின்றனர்.
அதனால், தலைக்கவசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர் போக்குவரத்து போலீஸார். இதற்காக பிரைவேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற 1,200 தலைக்கவசங்கள் பெறப்பட்டுள்ளன.
இதை வைத்துக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரூ.100 அபராதமாகப் பெற்றுக்கொண்டு, ரூ.500 மதிப்பிலான தலைக்கவசத்தை இலவசமாக வழங்குகின்றனர்.
இதற்காக வி.வி.புரம், சித்தர்தானகரா, கிருஷ்ணராஜா, நரசிம்மராஜா, தேவராஜா ஆகிய போக்குவரத்து காவல் நிலையங்களில் தலைக்கவசம் வழங்கப்பட்டது.
தலைக்கவசம் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் (மார்ச் 19) முதல் தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பை ஒருசிலர் தவறாகப் பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டனர். தலைக்கவசத்தை வேண்டுமென்றே வீட்டில் வைத்துவிட்டு, 100 ரூபாய் செலுத்திவிட்டு, புதிய தலைக்கவசத்தை வாங்கியும் சென்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் பி.ஜே.ராகவேந்திரா, “இலவச தலைக்கவசங்கள் அளிப்பது தவறு. போக்குவரத்து போலீஸாரே விதிமுறைகளை மீற வழி ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கக் கூடாது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment