Friday, March 16, 2018

உருவத்தை வெச்சு எடைபோடாதீங்க பாஸ்!’ - குறள் நீதி சொல்லும் கதை! #MotivationStory

பாலு சத்யா  vikatan  16.03.2018



ஜிசேலி பந்தென் (Gisele Bündchen)... பிரேசிலைச் சேர்ந்த பிரபல மாடல். 2012-ம் ஆண்டு, `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் அதிகச் சம்பளம் வாங்கும் மாடல்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். அவர் ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... `மனிதர்கள் என்னை எடைபோடும்போது, அவர்கள் என்னைச் சரியாக எடைபோடவில்லை என்பதை நான் அறிவேன். ஏனென்றால், நான் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது.’ இன்றைக்கு நேற்றல்ல... வள்ளுவர் காலம் தொட்டே இந்தப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது... `உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்றார் வள்ளுவர். `எனக்கு எல்லாம் தெரியும், அவனுக்கு என்ன தெரியும்’ , `அவனால வேற என்ன செய்ய முடியும்?’... இப்படி தோற்றத்தை வைத்து எடைபோடும் சுபாவம் மனிதர்களுக்கு உண்டு. இது எவ்வளவு பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்திலிருக்கிறது அந்த மனநலக் காப்பகம். வாரத்துக்கு ஒருமுறை காப்பகத்துக்கு ஒரு ட்ரக் டிரைவர்தான் மளிகைப் பொருள்களை சப்ளை செய்வார். அப்படித்தான் அன்றைக்கும் டெலிவரி கொடுக்க வந்திருந்தார். அவருடைய ட்ரக் திறந்திருந்த ஒரு சாக்கடைக்குப் பக்கத்தில் நின்றிருந்தது. அவர் திரும்பி வந்தபோதுதான், ட்ரக்கின் ஒரு டயர் பஞ்சராகியிருந்ததைக் கவனித்தார். நொந்துபோனவராக, ட்ரக்கிலிருந்த இன்னொரு ஸ்பேர் டயரை எடுத்துக்கொண்டு வந்தார். பஞ்சரான டயரைக் கழற்றினார். பிறகு, இன்னொரு டயரை மாற்ற ஆரம்பித்தபோது, தவறுதலாகத் தன் கையிலிருந்த நான்கு போல்ட்டுகளையும் நழுவவிட்டுவிட்டார். அவை திறந்திருந்த சாக்கடையில் போய் விழுந்துவிட்டன. அவ்வளவுதான். பதறிப்போய்விட்டார் அந்த மனிதர். `இப்போது என்ன செய்வது?’



அந்தப் பக்கமாக மன நலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நபர் வந்தார். திகைத்துப்போய் உட்கார்ந்திருந்த டிரைவரைப் பார்த்தார். ``என்ன ஏதாவது பிரச்னையா?’’ என்று கேட்டார். நிமிர்ந்து வந்தவரைப் பார்த்தார் டிரைவர். அந்த மனிதர் அணிந்திருந்த காப்பகச் சீருடை அவர் கண்ணை உறுத்தியது. அந்த மனிதரை ஒரு மூட்டைப்பூச்சியைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். `இந்த லூஸால எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?’ என நினைத்தார்.

``என்ன பிரச்னைனு சொல்லுப்பா... என்னால முடிஞ்ச உதவியை நான் செய்வேன்ல?’’

இப்போது ட்ரக் டிரைவருக்கு வேறு வழியிருக்கவில்லை. `சரி... சொல்லித்தான் பார்ப்போமே...’ என்றும் தோன்றியது. நடந்ததைச் சொன்னார்.

இதைக் கேட்டு அந்த மனிதர் சிரித்தார்... ``இந்தச் சின்னப் பிரச்னையையே உன்னால தீர்க்க முடியலைன்னா, வாழ்நாள் முழுக்க நீ இப்படியே ட்ரக் டிரைவராகவே இருந்துட வேண்டியதுதான்...’’

இதைக் கேட்டுத் திகைத்துப் போனார் டிரைவர். ``சரிங்க... ரொம்ப நல்லது. இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம்... உங்களால ஒரு யோசனை சொல்ல முடியுமா?’’



``வேற ஒண்ணும் செய்ய வேணாம். இந்த ட்ரக்குக்கு மொத்தம் நாலு டயரு. மீதி இருக்குற மூணு டயர்ல இருந்தும் ஒரேயொரு போல்ட்டை மட்டும் கழற்று. அந்த மூணு போல்ட்டையும் இந்த நாலாவது டயர்ல மாட்டு. அப்புறம் மெதுவா, பக்கத்துல இருக்குற வொர்க்‌ஷாப்புக்கு ட்ரக்கை ஓட்டிட்டுப் போ. அங்கே போனதும், டயருக்கு ஒண்ணா, புதுசா ஒரு போல்ட்டை மாட்டிடு. பிரச்னை தீர்ந்துது. அவ்வளவுதான்...’’

இதைக் கேட்டு பிரமித்துப் போனார் அந்த டிரைவர். அவருக்கு ஒரு சந்தேகமும் வந்தது. தயக்கத்துடன் அதைக் கேட்கவும் செய்தார்... ``இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க... அப்புறம் ஏன் இந்த மன நலக் காப்பகத்துல வந்து இருக்கீங்க?’’

அவர் பதில் சொன்னார்... ``நண்பா... எனக்கு மன நலம் சரியில்லைங்கிறதுனால இங்கே இருக்கேன். உண்மைதான். ஆனா, நான் முட்டாள் இல்லை.’’

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...