Wednesday, March 7, 2018

பள்ளிக்கரணையில் சுவாரஸ்யம்; குறைவான தொகை மாமூல் கேட்டதால் சந்தேகம்: வசமாக சிக்கிய போலி ஐடி அதிகாரி

Published : 06 Mar 2018 20:31 IST

சென்னை



பள்ளிக்கரணையில் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து கம்ப்யூட்டர் விற்கும் கடை உரிமையாளரை மிரட்டிய நபர் சிக்கினார். குறைவான தொகையை மாமூலாக கேட்டதால் சந்தேகமடைந்த கடைக்காரர் போலீஸில் பிடித்துக் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை, மேடவாக்கம், ஜெய் பிரகாஷ் நாராயணன் தெருவில் வசிக்கும் கந்தன் (35) என்பவர் மேடவாக்கம், பேருந்து நிறுத்தம் அருகில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை கந்தன் கடையிலிருந்த போது அங்கு வந்த டிப்டாப் நபர் ஒருவர், தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். இதனால் அரண்டு போன கந்தனும் அவரை வருமான வரித்துறை அதிகாரி என நம்பி தனது கடையிலுள்ள விற்பனை ரசீதுகளை காண்பித்துள்ளார்.

நாளைக்கு முழு டீமும் வரப்போகுது, இன்று முன் கூட்டியே நான் வந்துவிட்டேன் எதற்கு தெரியுமா? என்று அதட்டலுடன் கேட்டு அனைத்து ஆவணங்களையும், ரசீதுகளையும் சோதனை செய்த அவர் பல கேள்விகளை கந்தனை துருவித்துருவி கேட்டுள்ளார்.

அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்று அவர் கேட்டதையெல்லாம் கொடுத்துள்ளார். 'உங்கள் கடையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. நாளைக்கு டீம் வராமல் இருக்க நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறி ஒரு தொகை தருமாறு கேட்டுள்ளார்.

கடை உரிமையாளர் கந்தன், எவ்வளவு கேட்கப்போகிறாரோ என்று பயந்தபடி, 'சார் கொஞ்சம் டைம் வேண்டும்' என்று கேட்டுள்ளார். அதெல்லாம் முடியாது. இப்போதே நான் கேட்கும் தொகையை தராவிட்டால் அவ்வளவுதான் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.

அவரின் தோரணையைப் பார்த்து மிரண்டு போன கந்தன், அவர் கேட்கும் தொகையைப் பொறுத்து பேசி தொகையை குறைத்துக்கொள்ளலாம் என்று தயங்கியபடி 'சார் எவ்வளவு என்று சொல்லுங்கள்' என்று கேட்டுள்ளார். 'மூன்று ரூபாய்' கொடுங்கள் என்று அந்த நபர் கூறியுள்ளார்.

'மூன்று ரூபாய்' பெரிய தொகை சார் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கந்தன் கேட்டபோது அந்த நபர் 3000 ரூபாய் கொடுக்க கசக்குதா என்று கேட்டுள்ளார்.

'3 ஆயிரம் ரூபாயா?' என்று கேட்ட கந்தன் இவர் இவ்வளவு குறைவாக கேட்பதால் நிச்சயம் இவர் வருமான வரித்துறை அதிகாரியாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

பணத்தைத் தரும் முன் சார் உங்கள் அடையாள அட்டையைக் கொஞ்சம் காட்டுகிறீர்களா? என்று அவரிடம் கேட்டுள்ளார். அடையாள அட்டையை கேட்டவுடன் அந்த நபர் முகம் மாறியுள்ளது.

'நான் நாளைக்கு டீமோட வந்து வச்சிக்கிறேன்' என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு வெளியே செல்ல முயன்ற அந்த நபரை, கந்தன் மடக்கிப் பிடித்தார். உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வருமான வரி அதிகாரி போல நடித்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீஸாரின் விசாரணையில், பிடிப்பட்ட நபரின் பெயர் பழனிவேல் (45) என்பதும் கீழ்ப்பாக்கம் ஓசாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் கடந்த 2001 முதல் 2003 வரை மூன்று ஆண்டுகள் வணிகவரி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவத்தில் அதிகாரிகள் மிரட்டுவதை நேரில் பார்த்ததை வைத்து தனக்கு அந்த அனுபவம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

அதேபோல் போலி வருமான வரி அதிகாரி போல நடித்து கந்தனிடம் பணம் பறிக்க முயன்றேன், ஆனால் கேட்கும் தொகையை குறைவாகக் கேட்டேன். அதில் அவருக்கு சந்தேகம் வந்ததால் சிக்கிக்கொண்டேன் என்று கூறியுள்ளார். அவர் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா? என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் பழனிவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024