அழகேசன்கள் மட்டுமா குற்றவாளிகள்?
Published : 12 Mar 2018 09:57 IST
அ. குமரேசன் THE HINDU TAMIL
சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட மறுநாள் சென்னையில் கல்லூரி வாசலிலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் அஸ்வினி. அவருடன் அவரது கனவும் கொலை செய்யப்பட்டுவிட்டது. அஸ்வினிக்கு இரங்கல்களும், கொலைசெய்த அழகேசனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கடும் ஆவேசமும் மக்களிடமிருந்து எழுகின்றன. ஒரு மனித உயிரை அழித்துவிட்ட குரூரச் செயலுக்கு அப்படிப்பட்ட தண்டனை தேவைதான். இதே இரங்கல்களும் கண்டனங்களும் கோடிட்ட காலியிடங்களோடு காத்திருக்கின்றன. வரும் நாட்களில் அந்தக் காலியிடங்களை யாருடைய பெயர்கள் நிரப்பப்போகின்றனவோ? அஸ்வினி, அழகேசன் பெயர்களும் ஏற்கெனவே அப்படிக் கோடிட்ட இடங்களில் நிரப்பப்பட்டவைதானே?
அழகேசன்கள் தங்கள் ஒருதலைக் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைக் குத்துகிறார்கள், வெட்டுகிறார்கள், அமிலம் ஊற்றுகிறார்கள், தீ வைக்கிறார்கள். அந்த வெறியின் வேராக இருப்பது வெறும் ஏமாற்ற உணர்வு மட்டுமல்ல, தங்களது உடைமைப் பொருள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆத்திரமும்தான். தங்களுக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற குதர்க்கமான மனப்பான்மையும்தான். எலும்பும் சதையும் ரத்தமும் உணர்வும் உள்ள மனிதப்பிறவி என்பதற்கு மாறாக, கையகப்படுத்த வேண்டிய உடைமைப் பொருளாகப் பெண்ணைக் கருதுகிற புத்தி ஆணுக்கு எங்கிருந்து வந்தது?
உடைமைப் பொருளா பெண்?
வரலாற்றில் உடைமைச் சமுதாயம் உருவானதைத் தொடர்ந்துதான் தற்போதைய அதிகாரத்தளம் சார்ந்த குடும்ப அமைப்பு உருவானது. மனைவி என்பவள் ஆணின் உடைமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டாள். ஆணின் ரத்த உறவு வாரிசைப் பெற்றுத்தருகிற உற்பத்திக் கருவியாகவும் பெண் பராமரிக்கப்பட்டாள். பாசம், நேசம், இணைபிரியா நெருக்கம் என்ற உணர்வுபூர்வமான உறவு உண்மையாக வளர்கிறது என்றாலும், அடிவாரத்தில் இந்த உடைமை ஏற்பாடு இருக்கிறது. திருமணச் சடங்கில் கன்னியாதானம் என்று ஆணிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.
பெண்ணின் சொத்துரிமையும் வாரிசுரிமையும் நிலைநாட்டப்பட்டுவிட்ட இக்காலத்தில் இந்தச் சடங்கின் அவசியம் குறித்த கேள்விகள், விமர்சனங்கள் ஏற்கப்படுவதில்லை. அது ஏன் தேவை என்று விளக்குவதற்கு மாறாக, “மதச் சடங்குகளைக் கேள்வி கேட்பதா?” எனும் எதிர்வினைகளைப் பார்க்க முடிகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட எந்த மதமும் ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருதவில்லை. ஆகப் பெரும்பான்மை மதங்களில் மதகுருக்கள் பெண்கள் இல்லை.
சமயங்கள் இப்படியென்றால் சாதிகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சாதிகளுக்கென்று போதனை நூல்கள் கிடையாது என்றாலும், நடைமுறைப் போதனையாக, எல்லாச் சாதிகளிலும் ஆணின் பின்னால் நிற்க வேண்டியவளே பெண் எனும் நிலையை சாதிக் கட்டமைப்புகள் உருவாக்கிவிட்டன. ஆணின் பெயருக்குப் பின்னால்தான் சாதிப் பெயர் ஒட்டப்படுமேயன்றி பெண்ணின் பெயருக்குப் பின்னால் தகப்பன் அல்லது கணவனின் பெயர்தான். தனக்கு அடங்காத அல்லது தனக்கு இணங்காத பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை ஆணிடம் வளர்ப்பதில் இவையெல்லாம் மௌனமாக ஆனால் வலிமையாகப் பங்களிக்கின்றன.
திரைப்படங்கள், ஊடகங்களின் தாக்கம்
பண்பாட்டுத் தளத்தில் விரிந்த செல்வாக்குச் செலுத்தும் திரைப்படங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டிருக்கும் திரைப்படங்கள், பரந்த அளவில் அறிவியல் கண்ணோட்டத்தைக் கையாளவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
விதிவிலக்காக வரும் படங்களைத் தவிர்த்து, பெரும்பாலான படங்கள் பெண்ணை அழகுப் பதுமையாகத்தான் சித்தரிக்கின்றன. சாகசக் கதாநாயனோடு இரண்டு காட்சிகளில் ஆடிப்பாடவும், அவன் வில்லன்களிடம் அடிபடுகிறபோது பதறித் துடிக்கவுமே கதாநாயகி. மற்றபடி கதையில் பெண்ணுக்கு நாயகப் பங்களிப்பு எதுவும் கிடையாது. இயல்பாகப் பார்க்கப்பட வேண்டிய பெண்ணை, உடல்சார்ந்த மட்டமான பார்வையுடன் திரையில் சித்தரிப்பது இன்னமும் கொடுமை.
‘கள்ளக்காதல்’, ‘விபரீத உறவு’, ‘ஓரினச் சேர்க்கை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, பெண்ணின் உறவுத் தேர்வுகளையும் வாழ்க்கை நிர்ப்பந்தங்களையும் இயற்கை நிலைமைகளையும் கொச்சைப்படுத்துவதில் ஊடகங்களுக்கும் பங்குண்டு.
பெண்ணின் ஆடைத் தேர்வு உரிமை பற்றிய விவாதம் அல்லது பேட்டித் தொகுப்பு என்றால், அதை ஆதரிப்போர் நான்கு பேர், எதிர்ப்போர் நான்கு பேர் என்று ‘சமநிலை’ பேணப்படும்! குறிப்பிட்ட பத்திரிகை அல்லது தொலைக்காட்சி ஊடக நிறுவனம் இந்த விவாதத்தில், தாங்கள் எந்தப் பக்கம் என்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
சட்டங்கள் என்ன சாதித்தன?
உலகளாவிய நெடும் போராட்டங்களின் நற்பலனாகப் பெண்ணுக்குப் பாதுகாப்பாகவும், சமத்துவத்தை நிலைநாட்ட உதவியாகவும் பல சட்டங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் ‘ஈவ் டீசிங்’ தடுப்புச் சட்டம் -1998, இந்திய அளவில் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் -1961 குழந்தை மணம் தடுப்புச் சட்டம்-2006, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் -2005, பெண்ணை இழிவுபடுத்தும் பரப்புரைத் தடுப்புச் சட்டம் -1986, பணியிட பாலியல் அத்துமீறல் தடுப்புச் சட்டம் -2013 என பல சட்டங்கள் பெருமைக்குரியவை. ஆனால் அவை வெறும் பெருமைக்குரிய ஏற்பாடுகளாக இருக்கின்றனவேயன்றி நடைமுறை வாழ்வியலோடு இன்னும் கலக்கவில்லை. அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதிய அளவு எடுக்கப்படுவதில்லை. பெட்ரோல் நிலையங்களில் பெரிய அளவில் பிரதமர் படங்களோடு அரசுத் திட்டங்கள் பற்றி விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன; ஆனால், பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றிய பொது ஞானத்தைப் பரப்புவதற்கான விளம்பரங்கள் வைக்கப்படுவதில்லையே!
பேருந்துகளில் மகளிருக்கான இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் ஆண்கள், நின்றபடி பயணிக்கும் பெண்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது. “லேடீஸ் மட்டும் ஆம்பளைங்க சீட்டுல உட்காருறாங்களே” என்று கொஞ்சம்கூட புரிதல் இல்லாமல் கேட்பவர்கள் பலர். பெண்களுக்கான சட்டங்கள் மக்களிடம் முறையாகக் கொண்டுசெல்லப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் பெண் ஒரு உடைமைப்பொருளல்ல என்ற அறிவையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் விரிவாகவும் வலுவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு எந்திரங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், வெகுமக்கள் அமைப்புகள், சமூக அக்கறை நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து சக்திகளும் இதைக் கடமை உணர்வோடு முன்னெடுக்க வேண்டும். பெண்ணின் உரிமைகள் குறித்த இந்த விழிப்புணர்வில்தான், “அழகேசன்களை அஸ்வினிகள் எதற்காகக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு பிறகு மறுக்க வேண்டும்” என்பதான குதர்க்க வாதங்களும், கொலை செய்யவும் துணியும் கொடூர நியாயங்களும் முற்றுப்பெறும்!
- அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: kumaresanasak@gmail.com
No comments:
Post a Comment