Sunday, March 18, 2018

தேர்வு நேரம்: தேர்வு நேரத்தில் விளையாடலாமா?

Published : 13 Mar 2018 10:49 IST

முகமது ஹுசைன்

THE HINDU TAMIL


உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். உதாரணத்துக்கு, கால்பந்து என வைத்துக்கொள்வோம். உங்கள் கால்களுக்குப் பந்து கிடைத்துவிட்டது. லாவகமாகப் பலரைத் தாண்டி அதைக் கடத்திச் செல்கிறீர்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்று நினைத்து அப்போது பதற்றமடைந்தால் உங்கள் மூளையாலும் உடம்பாலும் முழுத் திறனை வெளிப்படுத்தி பல கால்களைத் தாண்டி அந்தப் பந்தைக் கடத்திச் செல்ல முடியுமா?

யோசிக்க வேண்டாம். ஏனென்றால், அந்தக் கணம் மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கும்போது மட்டும்தான் உங்கள் முழுத் திறனும் வெளிப்பட முடியும். தேர்வில் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சத்தான உணவைச் சாப்பிடுதல்

காலை உணவு எப்போதும் முக்கியம், அதுவும் தேர்வு நாள் அன்று அது மிக அவசியம். சத்தான அதே நேரம் எளிதில் செரிக்கும் உணவைச் சாப்பிடுங்கள். பொங்கல், தயிர்ச் சோறு, தயிர் வடை போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு முடிந்தால் ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்களைச் சாப்பிடலாம்.

காபி, டீ தவிர்த்தல்

காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவை பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பழக்கமாக இருந்தால், கொஞ்சமாக அவற்றைக் குடிக்கலாம். தேர்வுக்குச் செல்லும் முன் பழச்சாறு அருந்துவதால் சத்தும் சுறுசுறுப்பும் கிடைக்கும்.

அரக்கப் பறக்கச் செல்ல வேண்டாம்

வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், தனியாகவோ நெருங்கிய நண்பருடனோ காலாற சிறிது நடைபோடுங்கள். ஆனால், அப்போது தேர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிருங்கள்.

கேள்வித் தாள் வாசிப்பில் கவனம்

பதிலை எழுத ஆரம்பிக்கும்முன் நிதானமாகக் கேள்வித் தாள்களின் குறிப்புகளைக் கவனமாகப் படியுங்கள். அதன்பின் கேள்விகளைக் கவனமாக வாசியுங்கள். இது தவறாகப் பதில் எழுதுவதைத் தவிர்க்க உதவும்.

பதில் பாதியில் நின்றுவிட்டதா?

தெரியாத கேள்வி இடம்பெற்றாலோ தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்துபோனாலோ ஒருவிதமான பதற்றமும் பயமும் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழ்நிலையில், கேள்வித் தாளையும் பதில் எழுதும் தாளையும் மூடிவையுங்கள். ஒரு எட்டு நடந்து கழிவறைக்குச் செல்லுங்கள், பின் சிறிது தண்ணீர் குடியுங்கள். உங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு ஆழமாகப் பத்து முறை மூச்சை இழுத்துவிடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுத ஆரம்பியுங்கள். பாதியில் நின்ற பதிலை இறுதியில் ஒருகை பாருங்கள்.

கை கால்களுக்கு ஓய்வு

தேர்வு எழுதும்போது கை கால்களை அவ்வப்போது நீட்டிமடக்குவது கொஞ்சம் ஓய்வு தரும். முடிந்தால் அவ்வப்போது எழுந்தும் உட்காருங்கள். கூடுதல் தாளை வாங்கும்போது வாய்ப்பிருந்தால் எழுந்து நின்று வாங்குங்கள்.

மூன்று மணி நேரம்தான்

உங்களின் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக ஆறு லட்சம் மணி நேரம் வாழப்போகிறீர்கள். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப்போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லையா?

தேர்வு என்பது ஒரு விளையாட்டுதான். அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு ரசித்து அனுபவித்து ஜாலியாக விளையாடுங்கள்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...