Thursday, March 15, 2018

சென்னையில் சோகம்; மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் விபரீதம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி சிறுமி பலி

Published : 14 Mar 2018 15:05 IST

சென்னை



சென்னை சூளைமேட்டில் மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் ஒரு சிறுமி கார் மோதி உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தார். தாயின் பிறந்த நாளில் சிறுமி உயிரிழந்தது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் வசிப்பவர் துரைராஜ். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் பவித்ரா (7) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். பவித்ரா துரைராஜின் இளைய மகள். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது தாயார் ஜெயந்தியின் பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

தோழிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, அருகில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து பவித்ரா ஒளிந்திருந்த காரின் மீது மோதியது. இதில் நின்றிருந்த கார் பவித்ராவின் மீது ஏறி நசுங்கியது. இதில் சிறுமி பவித்ரா பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கம் உள்ளோர், சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வந்த சூளைமேடு போலீஸார் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சூளைமேடு வன்னியர் 2-வது தெருவில் வசிக்கும் டெனி (25) என்பவர் தனது மனைவி ப்ரீத்திக்கு (22) கார் ஓட்டக் கற்று கொடுத்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது. காரை ஓட்டிய ப்ரீத்தி மற்றும் அவரது கணவர் டெனி இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தனது மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பதற்காக வந்தாகவும் கார் ஓட்டும் பயிற்சி இல்லாத தனது மனைவி ப்ரீத்தி வேகமாக பதற்றத்தில் காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதாக டெனி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பவித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பவித்ரா உயிரிழந்ததை அடுத்து பவித்ரா பயின்ற பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ப்ரீத்தி மீது (279) பொதுவழியில் வேகமாக வாகனத்தை இயக்குதல், (304.A)கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ப்ரித்தீயிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் காருக்கான காப்பீடும் இல்லை எனவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்படக் காரணமாக இருந்து, மனைவிக்கு சட்டவிரோதமாக தெருவில் கார் ஓட்டப் பயிற்சி அளித்த கணவர் டெனி மீதும் அதே பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024