Thursday, March 22, 2018

பார்வை: அடக்கமும் ஒடுக்கமும் யாருக்கு வேண்டும்?

Published : 18 Mar 2018 10:50 IST

ரேவதிமுகில்

THE HINDU



‘வாழ்க்கை ஒரு துணிந்த வீரச்செயல், அல்லாமல் அதில் ஒன்றுமேயில்லை’ என்ற ஹெலன் கெல்லரின் வார்த்தைகளின் படியே அவர்கள் மலையேறினார்கள். சலிப்பூட்டுகிற இயந்திர வாழ்க்கையிலிருந்து ஒரு தற்காலிகத் தப்பித்தலுக்காக அவர்கள் மலையேறினார்கள். வாழ்வின் அடுத்த கட்டத்தைக் கொண்டாட, இன்னும் செம்மையாக வாழ, கூடுதல் தன்னம்பிக்கைக்காக, தன்னைத்தானே ஆழ்ந்து புரிந்துகொள்ள, புதிய அனுபவங்களின் பரவசத்தைப் பெற்றுவிட எனப் பல்வேறு காரணங்களுக்காகத் துணிந்து மலையேறினார்கள்.

காட்டு வாழ்க்கை பற்றிய அறியாமையோ தட்பவெப்ப மாறுதலோ அகாலத்து அனுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் காட்டுத்தீயில் கருகிப்போனார்கள் என்பது இனி எக்காலமும் நினைவில் நிற்கப்போகிற துயரங்களில் ஒன்று. அவர்கள் நிறைவான கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கொண்டவர்கள்; தற்சார்புடையவர்கள்; துணிச்சல் மிக்கவர்கள். அதில் ஒருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனை.

குரங்கணி விபத்து பற்றிப் பலரும் பலவற்றையும் பேசுகிறார்கள். மலையேற்றம், மலையேற்றக் குழுக்கள், மக்களின் பேராசை, விவசாயிகள், பழங்குடிகள், அரசின் மெத்தனம் என எதையெதையெல்லாமோ குறித்துப் பேசுகிறார்கள். அத்தனை இரைச்சலிலும், “இந்தப் பொம்பளப் புள்ளைகளுக்கு இதெல்லாம் தேவையா? மலையேற்றம் என்ன வேண்டிக் கிடக்கு? அடக்க ஒடுக்கமா வீட்டுல இருந்திருந்தா இந்தப் பிரச்சினை வந்திருக்குமா?” என்ற குரல்கள் மட்டும் சற்றே உரத்து ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

எது பாதுகாப்பு?

வீட்டுக்குள் அடைந்து கிடந்திருந்தால் மட்டும் பெண்ணுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விடுமா? அடிமையாக வீட்டுக்குள்ளேயே கிடந்த சூழல் மாறி கல்வி, வேலைவாய்ப்பு எனப் பெண்கள் பல உயரங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பள்ளியிலும் கல்லூரி வாசலிலும் பயணத்திலும் பொது இடங்களிலும் பணிச்சூழல்களிலும் பெண்கள் வன்முறைக்குள்ளாவது சாதாரணமாகியிருக்கிறது. தினந்தோறும் சாலை விபத்துகள் நடக்கின்றன என்பதற்காக யாரும் பயணத்தைத் தவிர்ப்பதில்லை. அதைப் போலவே பெண்ணுக்கு நிகழ்கிற இத்தகைய துயர் நிறைந்த சம்பவங்களின் காரணமாகப் பெண்களை முடக்கிப்போட நினைப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை. இத்தகைய அபத்தக் குரல்களை வலுவாக எதிர்க்க வேண்டியது காலத்தின் அவசியம்.

சமீபத்தில் காணொலியொன்று வலைத்தளங்களில் கவனம் பெற்றது. ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் கிடைமட்ட மரக் கம்பத்தின் மீது சிறிய திவான் போன்ற பஞ்சாயுதத்துடன் அமர்ந்திருக்கின்றனர். சமிக்ஞை ஒலித்ததும் அந்தப் பஞ்சாயுதத்தால் இருவரும் ஒருவரையொருவர் தாக்க முயல்கின்றனர். பெரும்பாலும் முதல் அடி ஆண் குழந்தையுடையதாகவே இருக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் தடுமாறிச் சாய்கிற அவள், கைகளாலும் கால்களாலும் மரக் கம்பத்தைக் கெட்டியாகப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு கீழே விழுந்துவிடாமல் சமாளித்து மீண்டும் கம்பத்தில் ஏறி அமர்கிறாள்.

இதைத்தான் ராணுவப் பயிற்சியில் Monkey Crawling என்கிறார்கள். மீண்டும் மீண்டும் அடி வாங்கிக்கொண்டும் ஓங்கிய திவானைத் தவறவிட்டும் மரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டும் மேலேறிக் கொண்டும் இருக்கிறாளே தவிர ஒருபோதும் தன் பிடியை விட்டுக் கீழே விழுந்துவிடவில்லை. சுற்றி நிற்கிற மக்கள் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கிடைத்த கணநேர வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரே அடியில் அந்த ஆண் குழந்தையைக் கீழே சாய்க்கிறாள்.

கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். இதுவே நம்மூராக இருக்கட்டும். “பாரு! பொம்பளப் புள்ளைக்கு எம்புட்டு அகராதி” என நாலு சாத்து சாத்தி, “ஆத்தாக்காரி புள்ளய எப்புடி வளத்து வச்சுருக்கான்னு பாரு” என்று அந்தப் பெண்ணின் தாயையும் குட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள்.

வீரமும் துணிவுமே தேவை

அவளின் போராட்ட குணம் இயல்பானது. வேட்டைச் சமூகத்தின் தலைவியாய் இருந்து தனது குழுவை வழிநடத்திய காலம்தொட்டு பெண்ணுக்குத் தலைமைப் பண்பும் போராட்ட குணமும் வீரமும் எவ்வித இக்கட்டான சூழலிலும் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிற இயல்பும் இயற்கையிலேயே அமைந்தது. இந்தியத் தொன்மக் கதைகளில் ஆண் தெய்வங்களெல்லாம் பழக்கப்படுத்தப்பட்ட கால்நடைகளுடன் காட்சி தருகையில் துடியான பெண் தெய்வங்களெல்லாம் சிங்கம், புலி, யானை போன்ற காட்டு உயிரினங்களின் மீது வலம் வருவதே இதற்கு சாட்சி.

எங்கும் எப்போதும் பாதுகாப்பில்லாத சூழலில்தான் அதே வேட்டுவ குணத்தின் கூடுதல் வீரியத்துடன் பெண்கள் புறப்பட்டுவர வேண்டியிருக்கிறது. அப்படி புறப்படுவதற்கும் தன்னையும் தன் இருப்பையும் துணிச்சலுடன் நிலைநிறுத்திக்கொள்வதற்கும் பல சாகசங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண்பிள்ளைகளுக்கு நடனம், பாட்டு, கோலம், அலங்கரித்துக்கொள்ளுதல் போன்ற மென்கலைகள் மட்டும் போதாது; தற்காப்புக் கலைகள், மலையேற்றம், நீச்சல், பேரிடர் காலத்தில் தற்காத்துக்கொள்ளும் போர்ப் பயிற்சி போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கிப் பயிற்றுவிப்பது அவசியம். அழிந்துவரும் இயற்கை வளங்களை வளர்ப்பதும் தக்கவைப்பதும் நேசிப்பதும் புரிந்துகொள்வதும் அதற்காகப் போராடுவதும் அவசியமே.

பெண்களுக்கு எதிரான போர்ச்சூழலில் பஞ்சாயுதம் மட்டுமல்ல பேராயுதமே எதிர்வந்தாலும் வீழ்த்தி வெற்றிகொள்கிற வீராங்கனைகளே இன்று தேவை. இதையெல்லாம் வசதியாக மறந்தும் மறுத்தும்விடுகிற தொனியில், “இந்தப் பொம்பளப் புள்ளைக… அடக்க ஒடுக்கம்…” என்று யாராவது பழைய வியாக்கியானங்களைத் தூக்கிக்கொண்டு வந்தால் புறக்கணித்துவிட்டுத் தொடர்ந்து நடப்போம். கட்டுரையாளர், குழந்தை வளர்ச்சித் திட்ட அ

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...