Thursday, March 22, 2018

சிட்டுக்குருவி நாள் அவசியமா?

Published : 20 Mar 2018 09:46 IST


ஆதி வள்ளியப்பன்



இதோ உலக சிட்டுக்குருவிகள் நாள் (மார்ச் 20) வந்துவிட்டது. சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றும் விழிப்புணர்வுச் செய்திகளை வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பகிர்ந்துவிட்டு, அப்பாடா நாமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்துவிட்டோம் என்று திருப்தி அடைந்துவிடுகிறோம். ஆனால், சிட்டுக்குருவிகள் நாள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஒன்று என்பது ‘நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?’

இந்தச் சிட்டுக்குருவிகள் நாளோடு சேர்த்து தவறாகப் பிரசாரம் செய்யப்பட்ட இன்னொரு விஷயம்: செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்து. இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இந்தக் காரணத்தை நிரூபிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் செல்போன் கோபுரங்களிலேயே கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் வேறு பறவைகளைப் பற்றி நிறைய பதிவுகள் உள்ளன. இப்படி இல்லாத ஒரு காரணத்தை, சிட்டுக்குருவிகளின் அழிவு சார்ந்து பிரபலப்படுத்தியவர் முகமது திலாவர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த இவர், ஒரு பறவை ஆர்வலர். 2010-ல் தனது பிறந்தநாளையே ‘உலகச் சிட்டுக்குருவிகள் நாள்’ என்ற பெயரில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். அதுதான் இன்றைக்கு நாடெங்கும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

கரிசனம் எப்படியானது?

அறிவியல்பூர்வமாக எந்த ஓர் உயிரினமும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது எனும் வரையறைக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. இப்படி நெருக்கடிக்குத் தள்ளப்படும் உயிரினங்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்தை இருப்பிடமாகவும் கொண்டிருப்பதில்லை. அதேநேரம், நெருக்கடிகள் மிகுந்த சென்னை நகருக்குள்ளேயே இன்னும் பல இடங்களில் சிட்டுக்குருவிகள் உயிர் பிழைத்திருப்பதே, அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படவில்லை என்பதற்கு முதன்மையான அத்தாட்சி.

சிட்டுக்குருவிகள் மீதான அக்கறை பெருகுவதால் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது, சுற்றுச்சூழல் கரிசனம் பரவலாவது நல்லதுதானே என்று கேட்கலாம். அங்கேதான் பிரச்சினையே. நாட்டில் இதுவரை முறையாகக் கணக்கிடப்படாலும் ஆராயப்படாமலும் பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஏன், அதிகம் பேசப்படும் வேங்கைப் புலிகள் தொடங்கி நமது மாநில உயிரினமான வரையாடு, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) வரை ஒரு சில ஆயிர எண்ணிக்கைக்குள்ளேதான் இருக்கின்றன. இவற்றின் மீது மக்கள் அக்கறையும் பெரிதாகத் திரும்பவில்லை. காட்டுயிர்கள், காடுகள் பாதுகாப்பு, ஆராய்ச்சிக்கு அரசும் உரிய நிதியை ஒதுக்குவதில்லை.

இந்தப் பின்னணியில் சிட்டுக்குருவிகள் மீதான அக்கறையை மேம்போக்கான சுற்றுச்சூழல் கரிசனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. நகர்ப்புறத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. ஆனால், இயற்கை சீர்குலைக்கப்படாத பகுதிகளில், இயற்கை கொஞ்சமாவது எஞ்சியிருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழவே செய்கின்றன.

திசைதிருப்பல்

சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படவில்லை. மாறாக, வேறிடத்துக்கு நகர்ந்திருக்கின்றன. இது தொடர்பாக மக்கள், அரசின் கவனம் இப்படி வலிந்து திருப்பப்படுவதால், மற்ற உயிரினங்கள்-பறவைகள் மீதான கவனம் திசைதிருப்பப்படுகிறது. இதே காரணத்தைச் சொல்லி வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருளாதார நிதியுதவிகளும்கூட திசைதிருப்பப்படலாம்.

இந்தியப் பறவைகளைப் பற்றி அறிவியல்பூர்வமாக ஆராய்வது, இயற்கையைப் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த இந்தியாவின் ‘பறவை மனிதர்’ சாலிம் அலியின் பிறந்த நாளை, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி ஆண்டுதோறும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், யாரோ ஒரு ஆர்வலரின் பிறந்தநாள், இல்லாத ஒரு காரணத்துக்காகப் பெரிதாகக் கொண்டாடப்படுவதுதான் குரூர நகைச்சுவை!

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...