சிரியாவில் நடப்பது என்ன? ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது! #SaveSyria
ஜெ.அன்பரசன்
சிரியா... பெயரை உச்சரிக்கும்போதே இதயத்தை சோகம் வாட்டி வதைக்கிறது இல்லையா? ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டில் பிரச்னை நிலவிவந்தாலும் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் கடந்துசெல்லமுடியாதவை. வீடற்றவர்களின் ஏக்கம்; நாடற்றவர்களின் அழுகுரல்; தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம்; குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மரணவலி. இவையெல்லாம் கடந்த சில நாள்களாக மனிதம் போற்றும் அத்தனை பேரையும் கண்ணீர்விட வைத்துவருகிறது.
சிரியாவில் நடக்கும் இந்தப் போர் இன்று நேற்று தொடங்கியதல்ல... போர் ஆரம்பித்தது வேண்டுமானால் 2011-ம் ஆண்டாக இருக்கலாம். ஆனால், இந்தப் போருக்கான பிள்ளையார் சுழி பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டு விட்டது. இன்று இறந்த 127 குழந்தைகளின் பிணக்குவியல்தான் சிரியாவில் நடக்கும் போரை உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.
இனி சொல்லப்போவதைப் படிப்பதற்கு முன்பு உங்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிளர்ச்சியாளர்களின் மையமாகச் செயல்பட்டு வந்த அலெப்போ நகரில் வீசப்பட்ட சுமார் 1900-க்கும் அதிகமான குண்டுகளில் 390 நபர்கள் பலியானார்கள். அதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கௌட்டா நகரில் வீசப்பட்ட ரசாயன குண்டுகளால் ஒரே நாளில் சுமார் 1400-க்கும் அதிகமானோர் பலியானார்கள். சிரியாவில் பலநாடுகளின் கூட்டுச் சதியால் உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டுப் போரினால் 2011 முதல் தற்போது வரை சுமார் 4 லட்சத்துக்கு அதிகமானோர் இறந்துள்ளனர். தினம் தினம் நரகத்தில் வாழ்ந்துவரும் சிரியா நாட்டு மக்கள் எப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவார்களெனக் கடந்த சில தினங்களாக உலகின் பல்வேறு நாடுகள் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
சிரியாவின் இந்த ரத்தம் உறையவைக்கும் போரின் பின்னணியில் பல சர்வதேசக் கரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் அவர்கள்? எதற்காக சிரியாவை துவம்சம் செய்கிறார்கள்? உண்மையில் சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர்தானா? அல்லது, கிளர்ச்சியாளர்களின் வெறியாட்டமா? இல்லை, தலைவிரித்தாடும் தீவிரவாத குழுக்களின் மனித வேட்டையா? அங்கு என்னதான் நடந்து வருகிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன் சில வரலாற்றுத்தடயங்களைத் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். இல்லையென்றால் உங்களால் சிரியாவில் என்ன நடக்கிறதென்றே யூகிக்க முடியாது.
சிரியாவும் ஹஃபீஸ் அல் - ஆஸாத்தும் :
சிரியாவில் மொத்தம் இருந்த 1 கோடியே 80 லட்சம் மக்களில் 74 சதவிகிதம் பேர் இஸ்லாத்தின் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 13 சதவிகிதம் பேர் ஷியா மற்றும் அதன் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். கிறித்துவர்கள் மற்றும் சிரியாவின் ஆதி இனத்தவர்கள் 10 சதவிகிதம் பேர். 3 சதவிகிதத்தினர் ட்ரூஸ் இனத்தவர். சிரியா சுதந்திரம் பெற்ற பிறகு 1971-ம் ஆண்டு அதிபரானார் ஹஃபீஸ் அல் -ஆஸாத் (Hafez al-Assad). இவர் ஷியாவின் உட்பிரிவில் ஒன்றான 'அலாவிட்(alawite)' பிரிவைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பசல் அல் ஆஸாத். இளையவர் பஷர் அல் ஆஸாத். ஹஃபீஸின் ஆட்சிக்கு ஓர் உதாரணம். 1990-ம் ஆண்டு 'எதிர்க்கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது' எனப் பகிரங்கமாக அறிவித்தவர் அவர். இதனால் மக்கள் அவர்மீது அதிருப்தியிலேயே இருந்தனர். இதற்கிடையே எதிர்க்கட்சிகளும், 'பெரும்பான்மைகொண்ட ஒரு மக்கள்கூட்டத்தை சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் எப்படி ஆளலாம்' என்று மக்களிடையே தங்களது கருத்துகளைத் திணிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் 1994 - ல் ஹஃபீஸ் அல் - ஆஸாத்தின் மூத்த மகன் கார் விபத்தில் சிக்கி இறந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் ஹஃபீஸும் இறந்துபோனார். எதிர்க்கட்சிகள், இனி தங்களுடைய சன்னிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை அதிபராக்க முயன்ற வேளையில் ஹஃபெஸ் அல் - ஆஸாதின் இளைய மகன் பசல் அல் ஆஸாத் சிரியாவின் அதிபரானார்.
சிரியாவும் பசல் அல் ஆஸாத்தும்:
பசல் அல் ஆஸாத் அதிபரானதும், நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் கருத்துரிமை வழங்கப்பட்டது. அதே கருத்துரிமையை மக்களுக்கும் வழங்கினார். சிரியாவின் அகராதியில் முன்பிருந்த ’அதிபர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம்; என்கிற தன்மையை பசல் உடைத்தார் . பசல் அல் ஆஸாத்தின் ஆரம்பகால நிர்வாகத்தை 'டமாஸ்கஸ் வசந்தம்' என்கிறார்கள் மக்கள். ஆனால், இந்தக் கருத்துரிமை பசல் அல் ஆஸாத்துக்கு எதிராக முடிந்தது. மக்கள் இவரைப் பற்றியும், இவர் தந்தை செய்த ஆட்சியைப் பற்றியும் கேள்விகேட்டு பதவி விலகச் சொன்னார்கள். தனக்கு எதிராகப் பேசியவர்களை பசல் கைது செய்தார். இதனால் ஆஸாத்துக்கு எதிராகப் பல இயக்கங்கங்கள் உருவாகவும், பொதுமக்கள் குரல் கொடுக்கவும் ஆரம்பித்தனர். 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸாத்துக்கு எதிராக சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் .அந்தச் சமயத்தில் எகிப்து, லிபியா, ஜோர்டான், சூடான், ஓமன், மொராக்கோ, பஹ்ரைன், துனிஷியா போன்ற அண்டை நாடுகளிலும் மக்கள்புரட்சி வெடித்துக்கொண்டிருந்தது. மக்கள்புரட்சியால் துனிஷியாவில் ஆட்சி மாற்றமே வந்தது. சிரியாவில் இந்தச் சூழலை இப்படியே விட்டுவிட்டால் நாளை துனிஷியாவின் நிலைதான் நமக்கும் என்று மக்கள்மீது பசல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். மக்களும் பசலுக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தனர்.
வல்லரசு நாடுகளின் சதித்திட்டம்:
சிரியா அதன் போக்கிலேயே சென்றிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது அல்லது மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் வந்திருக்கலாம். ஆனால், பூனைகளுக்கு நடுவே மீனைப் பிரித்துக் கொடுக்க வந்த குரங்கு அதனைத் தானே எடுத்துச்சென்ற கதையாக ஒட்டுமொத்த சிரியாவையும் ஆக்கிரமிக்கும் திட்டத்தை சில வல்லாதிக்க சக்திகள் தீட்டின. அப்படியென்ன சிரியாவை மையமாக வைத்து போர் உருவாக்கப்பட வேண்டிய காரணம் இருக்கிறது? அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்தது முதல் சதாம் உசேனைத் தூக்கிலேற்றியது வரை பசல் அல் ஆஸாத்துக்குப் பிடிக்கவில்லை. ஈராக் மண்ணிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வந்தார் அவர் . மத்தியக் கிழக்கு நாடுகளில் சவூதி அரேபியா, இஸ்ரேல், கத்தார், போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள். அமெரிக்காவைக் கேட்காமல் இந்த நாடுகள் எதுவும் செய்யாது என்பது அதன் செயல்பாடுகளிலேயே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.ஈராக்கைப் போலவே சிரியாவும் எண்ணெய்க் கிணறுகளால் வளம் கொழிக்கும் நாடு.இது ஒன்றே வல்லரசு நாடுகளுக்குப் போதுமானதாக இருந்தது. சிரியாவில் நமக்குச் சாதகமான சூழல் ஏற்பட வேண்டும். அதற்காக, சிரியாவின் எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு தனக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க நினைத்தது வல்லரசு. அதற்காகவே தற்போது சிரியாவில் நிலவிவரும் இனக்குழுப் பிரச்னையை வல்லரசு நாடுகள் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிரியாவில் இனக்குழு பிரச்னை :
ஆஸாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சிரியாவில் ஏற்கெனவே பல இயக்கங்கள் உருவாகின. அதில் முக்கியமானவர்கள் குர்து இனமக்கள். இவர்களுக்குக் குடியுரிமையே இல்லாத நிலை. அதனால் சிரியாவுக்கு எதிராகப் போராட எந்த நேரமும் தயாராக இருந்தார்கள், மற்றொரு பக்கம் 'சுதந்திர சிரியன் ராணுவம் (FSA - Free Syrian Army), 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸாத் ராணுவத்தில் பணியாற்றிய சில உயரதிகாரிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள். பல ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், இளைஞர்கள் எனப் பலரும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இதன் நோக்கம் ஆஸாத்துக்கு எதிராகச் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே. சிரியா அரசுக்கு எதிரான இயக்கங்கள் அத்தனை பேரும் துருக்கியில் கூட்டம் போட்டு 'சிரியன் தேசிய கவுன்சிலை' ஆரம்பித்தார்கள். இவர்களுக்கான அத்தனை ஆயுத உதவிகளும், பண உதவிகளும், அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளிடமிருந்து கிடைத்தன. அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆயுதப்போர் ஆரம்பமானது. இருபுறமும் துப்பாக்கித் தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஆனால், இவர்களால் இறந்தவர்களில் அப்பாவிப் பொதுமக்களே அதிகம். எந்த ஒரு போரிலும் இதுதானே விதிவிலக்காக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி சிரிய அரசும் கண்டுகொள்ளவில்லை கிளர்ச்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் சிரியாவில் எத்தனை கிளர்ச்சியாளர்கள் இயக்கம் இருக்குமென்றே யாருக்குமே சரியாகத் தெரியாது. அல்-நுஸ்ரா முன்னணி(al nusra front), தர்க்கிஸ்தான் இஸ்லாமிக் ராணுவம்(turkistan islamic party), அஹ்ரார் அல் ஷாம்(ahrar al-sham), அல் அப்பாஸ் பிரிகேட்(al abbas brigade), நூர் அல் தின் அல் ஜன்கி(Nour al-Din al-Zenki), சுதந்திரப் பங்குடியினர் ராணுவம்(Army of Free Tribes), சுதந்திர இஸ்லாத் ராணுவம்(Islamic Freedom Brigade)... கூகுளில் தேடினால் கிடைக்கும் இந்தப் பட்டியலைப் பார்த்தால் நிச்சயம் தலை சுற்றிவிடும். இதில் முக்கியமான ஒரு தீவிரவாத இயக்கமாக உருவெடுத்தது ஐ.எஸ்(I.S) இயக்கம். இவர்களின் முக்கிய வேலை அரசுக்கு எதிராகப் போரிடுவது. சண்டை வரும்போது பொதுமக்களையும் கொல்லுவது. இவர்கள்தான் தற்போது சிரியாவின் மிகப்பெரும் தலைவலி. இந்த இயக்கங்களுக்குள் யார் பெரியவன் என்கிற சண்டை அடிக்கடி நடந்துவருகிறது. இதுபோன்ற இயக்கங்களை வளர்த்துவிடும் வேலையைதான் வல்லரசு நாடுகளும் அவற்றுக்குத் துணைபோகும் துருக்கி போன்ற பிற நாடுகளும் செய்துவருவதாக அரசியல் ஆய்வுகள் கூறுகின்றன.
”அமெரிக்க ஆதரவு இயக்கமான சுதந்திர சிரியன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும் , நேட்டோ படைகளின் ஆயுதங்களும் தற்போது ஐ.எஸ் இயக்கத்திடம்தான் இருக்கிறது” என்று கள ஆய்வில் இருக்கும் அமினெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்டுள்ளது இதற்கான சான்று.
சிரியாவை அழிக்க மற்ற நாடுகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை :
சவூதி அரேபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பூமி வழியாக எரிபொருள் அனுப்புவதற்காகப் பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி பூமிக்கடியில் குழாய்களைப் புதைத்து அதன் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்தக் குழாய்கள் சிரியாவின் பெரும்பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் சிரியா அதற்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் சவூதி அரேபியாவுக்கு மிகப்பெரும் அளவில் நஷ்டம் ஏற்படும் சூழல்.
மற்றொரு பக்கம் இஸ்ரேல் நாடு உருவான ஆரம்பகாலத்தில் அங்கிருந்து பாலஸ்தீனர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்கள் உலகின் பல பகுதிகளில் அகதிகளாகக் குடியேறினார். அப்படிக் குடியேறப்பட்ட நாடுகளில் ஒன்று சிரியா. இங்கு லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் இயக்கங்களின் வழியாகத் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தலில் இஸ்ரேல் ஒருபக்கம், பருத்தி ஆடை உற்பத்தியில் சிரியா சிறந்து விளங்குவதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் துருக்கி இன்னொருபக்கம் எனச் சுற்றி இருக்கும் நாடுகளின் பொருளாதாரப் பசியில் சிக்கிக்கொண்டு சேதாரமாகிக் கிடக்கிறது சிரியா.
ரஷ்யா - அமெரிக்கா பலப்பரீட்சை :
இத்தனை நாடுகள் சிரியாவுக்கு எதிராக இருக்க ரஷ்யா மட்டும் சிரியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. ஏன்?. சிரியா என்கிற தேசம் அமெரிக்காவின் கைகளுக்குள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதில் ரஷ்யா எச்சரிக்கையாக இருக்கிறது. உலக வரைபடத்தில் ரஷ்யாவிற்குக் கீழ்தான் சிரியா இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யாவைக் கைப்பற்றும் நிலையில் அது தங்களுக்கே பிரச்னையாக முடியும் என்பது ரஷ்யாவின் எண்ணம். அதனால் வலிந்து சென்று சிரியாவுக்கு உதவி செய்கிறது. இரண்டு நாடுகளும் நேரடியாகவே தங்களது ஆயுதத் தளவாடங்களை சிரியாவில் குவித்துவருவது இதற்கான அத்தாட்சி.
பொருளாதாரப் பின்னடைவு!
2011-ம் ஆண்டுக்குப் பிறகு 90 சதவிகிதம் அளவுக்கு சிரியாவின் உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், கடந்த 2010-ம் ஆண்டுவரை 3,80,000 பேரல்களை உற்பத்தி செய்த சிரியா இன்று வெறும் 10,000-க்கும் குறைந்த பேரல்களையே உற்பத்தி செய்கிறது. எண்ணெய் உற்பத்தி பெருமளவில் சரிந்ததால், மின்சார உற்பத்தியும் சரிந்தது. ஒரு நாட்டில் மின் உற்பத்தி இல்லையென்றால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அடியோடு குறைந்தது. அதாவது, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிரியாவில் 11 சதவிகிதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தனர். ஆனால், இன்று 39 சதவிகித இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாகப் போரில் இறந்தவர்களுக்குச் சமமாக, பசியாலும், பட்டினியாலும் மக்கள் இறந்து வருகிறார்கள்.
யுத்தத்தால் பலியானோர் விவரம்!
இந்தச் சண்டையினால் கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ராணுவத்தினர் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கிளர்ச்சியாளர்கள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் தரப்பில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டு உள்ளனர். சண்டை உச்சநிலையில் இருந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், 42 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2011-லிருந்து இன்றுவரை அனைத்துத் தரப்பினர்களையும் சேர்த்து நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். சுமார் 70 லட்சக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் மேலானோர் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர், என்கிறது போர் விவர அறிக்கை.
உலக நாடுகளே...ஓர் இனம் வாழ வழித்தெரியாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வல்லரசுகளைப்போல பணமோ, பொருளோ அல்ல; அமைதியான வாழ்க்கை மட்டுமே. அவர்கள் வாழட்டும்... நிம்மதியாக வாழட்டும்... தங்கள் குழந்தைகளோடும், உறவினர்களோடும் மகிழ்ச்சியாக வாழட்டும். பூமி அவர்களுக்கும் சொந்தம்தானே!
படங்கள்: AP
No comments:
Post a Comment