Sunday, March 18, 2018

ஜெயலலிதா' சிலை பார்க்க கூட்டம் வருகிறதா? தொண்டர்கள் மனநிலை என்ன? #SpotVisit
ச.அ.ராஜ்குமார்   vikatan 18.03.2018



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கலச் சிலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் அன்று நிறுவப்பட்டது. அச்சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தலைமை தாங்கி திறந்து வைத்தனர்.

சிலை திறக்கப்பட்ட நாள் முதலே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அச்சிலை பார்க்க ஜெயலலிதா போன்று இல்லை என்றும் வேறு யாரோ ஒருவர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய அதிமுக தலைமை அலுவலக இடத்திற்கு ஒரு விசிட் சென்று தொண்டர்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டோம்.

அப்போது அங்கு நீண்ட நாட்களாக தொழில் செய்து வரும் முதியவர் ஒருவர் பேசியபோது, "இந்தச் சிலை பார்க்க எங்கேங்க அம்மா மாதிரி இருக்கு? ஃப்ளெக்ஸ் பேனர்ல இருக்க முகம் மாதிரி கூட இவங்க சிலையை செய்யல. பொதுமக்களான எங்களுக்கே கஷ்டமா இருக்கு. அதே மன நிலை கட்சி தலைமைக்கும் இருந்தால் விரைந்து செயல்படுவாங்க. எதாச்சும் செய்யணும்" என்றார்.

அதிமுக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த இன்னொருவரிடம் அச்சிலையைப் பற்றி கேட்டபோது," இது ஜெயலலிதா மாதிரி இல்லைங்க. இந்தச் சிலை திறக்கும் நேரத்தில் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் சிலையை காண ஆவலா இருந்தாங்க. ஆனால் சிலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைவரும் அதிருப்தி ஆகிட்டாங்க. இதைப்பற்றி சிலர் கட்சி மேலிடத்தில் முறையிட்டாதாகவும் சொன்னாங்க" என்றார்.

சிலை அருகில் இருந்த காவல்துறை பணியாளர்களிடம் பேசிய போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சிலை திறக்கப்பட்டபோது, கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிலையைக் காண கூட்டமாக வந்தனர். தற்போது மக்களே சிலையைக்காண ஆர்வம் காட்டவில்லை" என்றார்கள்.

சிலை வடிவமைப்பு பற்றி அவரிடம் கேட்டபோது," தற்போது பணி நேரத்தில் இருக்கிறோம், அதனால் மனதில் இருப்பதை பேசமுடியாது” என்றார். ஆனால், அவருக்கும் ஜெயலலிதாவின் சிலை சரியாக இல்லை என்ற எண்ணமே இருந்தது.

ஜெயலலிதா சிலை குறித்து விகடன் மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதன் முடிவு கீழே..






சிற்பக்கலைக்கு பெயர் போன தமிழகத்தில் ஜெயலலிதாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைக்க சிற்பி கிடைக்காத நிலையில். அதிமுக தலைவர்கள் , ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிற்பி பி.எஸ்.வி. பிரசாத்திடம் சிலை வடிவமைக்கும் பொறுப்பைக் கொடுத்தனர். அதுவும் 20 நாள்களில் சிலையை வடிவமைத்து தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். சிற்பியும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார். ஜெயலவிதாவின் சிலையும் நிறுவப்பட்ட நிலையில்தான் குறை கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிற்பி பிரசாத் தன் சொந்த செலவிலேயே சிலையை மாற்றி வடிவமைத்து தர முன் வந்துள்ளார். '' குறுகிய காலம் என்பதால் சில தவறுகள் நடந்திருக்கலாம். முதலில் களிமண்ணில் மாதிரி எடுத்து சரியாக இருந்த காரணத்தினால் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டது. இரவு பகலாக பாடுபட்டு, 20 பேர் கொண்ட குழு சிலையை வடிவமைத்தது.. சிலை வடிவமைப்பு முற்று பெற்ற பின், அதை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து அதிமுக தலைவர்களுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே, சிலையை அனுப்பினோம். எனினும் விமர்சனம் எழுந்திருப்பது என் மனதைப் புண்படுத்துகிறது. சிலையை என் சொந்த செலவில் செப்பனிட்டுத் தர தயாராக இருக்கின்றேன்'' என்று சிற்பி பி.எஸ்.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.

எனினும், இறுதி முடிவை அதிமுக தலைமைக் கழகம்தான் எடுக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024