Friday, March 9, 2018

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் 'ஃப்ரூட் மிக்சர்' குடிக்கத்தகுந்த பானம்தானா? 

VIKATAN 

இரா.செந்தில் குமார்

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் 'ஃப்ரூட் மிக்சர்' என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.




வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல பொருள்கள் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பேசினார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

" பெரும்பாலும் இந்தப் பானத்தில் வாழைப்பழம்தான் இருக்கும். பெயருக்கு, கொஞ்சம் அன்னாசிப்பழம், திராட்சை, சிறிதளவு ஆப்பிள் சேர்ப்பார்கள். வாழைப்பழத்தைக் கரைத்து பிற பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்ப்பார்கள். கூடவே, சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இனிப்புக்கு 'சாக்ரின்' எனப்படும் செயற்கை இனிப்பூட்டி பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சீனி தருகிற இனிப்பை, இந்த இனிப்பூட்டி ஒரு சிட்டிகையிலேயே கொடுத்துவிடும். ஆனால், இது வயிற்றுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். வாய் வெந்துபோகும். 'சாக்ரீன்' கலந்த பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே நம் உடலில் இன்சுலின் உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். தேவையில்லாத நேரத்தில் உற்பத்தியாவதால், தேவைப்படும்போது அதன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் சர்க்கரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் சுவைக்காக இதனுடன் பாதாம்பால் சேர்ப்பார்கள். இரண்டையும் கலந்து குடிக்கும்போது வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.



இது மட்டுமின்றி, இந்த பானத்தில் வீரியமுள்ள ஒருவகை எசன்ஸ் சேர்க்கிறார்கள். அதுதான் இந்தப் பானத்தின் வாசனைக்குக் காரணம். ஆனால், அதுவும் உடலுக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது. அதைவிட ஆபத்தானவை செயற்கை நிறமூட்டிகள். நம் உணவுப்பண்டங்களில் சேர்ப்பதற்காகவே ஏறத்தாழ 1000-த்துக்கும் மேற்பட்ட செயற்கை நிறமூட்டிகள் உள்ளன. இந்த நிறமூட்டிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட உணவுகள் செரிமானக்கோளாறை ஏற்படுத்தும். நரம்புக் கோளாறுகள், தோல் சம்பந்தமான பிரச்னைகளும் உண்டாகும். வாந்தி, குமட்டலையும் ஏற்படுத்தும்.மேலும் செயற்கை நிறமூட்டிகள் கலந்த உணவுகள் நம் குடலுக்குள் அப்படியே தங்கிவிடும் . இது குடலின் உட்கிரகிப்புத்தன்மையை குறைத்துவிடும்.

ஒவ்வொரு பழத்திலும் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. உதாரணமாக ஆப்பிளில் 'மால்டோஸ்' என்னும் சர்க்கரைப் பொருள் இருக்கிறது. இதனுடன் வெள்ளைச் சர்க்கரையோ, சாக்ரீனோ கலக்கும்போது அதனுடைய உண்மையான பலன் கிடைக்காது. அதேபோல், ஒவ்வொரு பழத்துக்கும் இனிப்பு,புளிப்பு, துவர்ப்பு என தனித்தனிச் சுவை இருக்கிறது. தனித்த சத்துகளையும். உடையது. ஒவ்வொரு பழத்தையும் தனியாகச் சாப்பிட்டால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடும்போது அஜீரணக் கோளாறுதான் உண்டாகும்.



பொதுவாக, இதுபோன்ற பானங்களைத் தவிர்த்து, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. அப்படிச் சாப்பிட்டால் பழங்களில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். அல்லது வீட்டுக்குப் பழங்களை வாங்கிச்சென்று ஜூஸாக்கி, சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.





வெள்ளைச் சர்க்கரையை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. பனங்கற்கண்டு, பனை வெல்லம், நாட்டு வெல்லம் பயன்படுத்தலாம், எழுமிச்சம்பழம், புதினா, பனங்கருப்பட்டி கலந்த பானத்தை தாகம் எடுக்கும் தருணங்களில் அருந்தலாம். இளநீர், தாளித்த நீர்மோர் அருந்துவதும் நல்லது. " என்கிறார் அவர்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...