Saturday, September 8, 2018

தலையங்கம்

தமிழக அரசும், கவர்னரும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்





1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 08 2018, 04:00

1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ்காந்தி விரும்பிய தமிழக மண்ணில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதில் ஆறாத சோகவடுக்களை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை செய்து 26 பேரை கைது செய்தது. பூந்தமல்லியில் தடா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த அப்பீலை உச்சநீதிமன்றம் விசாரித்து, முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்பதை உறுதிசெய்து, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, மற்ற 19 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தநேரத்தில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்து, கவர்னர் பாத்திமாபீவிக்கு அனுப்பிய நேரத்தில் முதலில் ஏற்றுக்கொள்ளாத கவர்னர், உயர்நீதிமன்றத்தில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு எதிராக கவர்னர் செயல்பட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்ட காரணத்தால், நளினியின் தூக்குத்தண்டனையை 2000–ம் ஆண்டில் ஆயுள் தண்டனையாக குறைத்தார். தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனும் 11 ஆண்டுகளுக்கு மேல் நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக, அவர்களது தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு அறிவிப்பு வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து அந்த வழக்கும் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். ராகுல்காந்தி தன் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாங்கள் காயப்பட்டுள்ளோம், மனக்கவலைக்கு ஆளாகி யுள்ளோம். ஆனால் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம் என்று கூறியது மிகவும் உணர்ச்சி கரமாக இருந்தது. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் நேற்றுமுன்தினம் உத்தரவு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் கருணை மனுமீது கவர்னர் முடிவெடுக்கலாம். அரசியல் சட்டத்தின் 161–வது பிரிவின்கீழ் தமிழக அரசு

7 பேரையும் விடுதலை செய்வதாக ஒரு முடிவெடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பலாம். அந்த பரிந்துரையின்மீது கவர்னர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்போது இந்த பிரச்சினை இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. தமிழக அரசு நாளை கூட்டியிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடு. எனவே, தாமதமில்லாமல் தமிழக அமைச்சரவை இதுகுறித்து உரிய முடிவெடுத்து கவர்னருக்கு அனுப்பும் என்பதால், அந்த 7 பேரின் விடுதலைக்காக சிறைச்சாலை கதவுகள் திறக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...