Sunday, September 16, 2018

எழுவர் விடுதலை நம் கரிசனத்தின் தொடக்கம் ஆகட்டும்!

Published : 12 Sep 2018 09:02 IST

  hindu tamil

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு. முதல்வர் பழனிசாமியின் ஆட்சிக் காலகட்டத்தில், தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் வரலாற்று முடிவு இது என்று சொல்லலாம்.

ராஜீவ் காந்தி 1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ரத்தக்கறையாகவே படிந்துவிட்டது. பொதுவாக வன்முறைக்கு எதிரான பாதையிலேயே பயணித்து வந்திருக்கும் நவீன தமிழக வரலாற்றில், துயரமான ஒரு கரும்புள்ளி என்றே இந்த அரசியல் படுகொலையைச் சொல்ல வேண்டும். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள் தொடர்பான தமிழக மக்களின் பார்வையிலேயே மாற்றம் உண்டானது. பின்னாளில், ஈழப் போராட்டத்தின் மிக மோசமான தோல்விக்கும்கூட இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.

ராஜீவ் படுகொலையின் பிரதான குற்றவாளிகள் என்று இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாத நிலையில், அந்தக் கொலையின் முழுப் பின்னணியும்கூட பொதுச் சமூகத்தின் முன் கொண்டுவரப்படாமலேயே போனது இன்னொரு துயரம். இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத சூழலில், பிடிபட்டவர்களைக் கடும் குற்றவாளிகளாக்கும் போக்கு, இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே வெளிப்பட்டது. முன்னாள் பிரதமர் கொலை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் பார்க்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும் விடுதலைக்கான சாத்தியம் என்பது எழுவருக்கும் மறுக்கப்பட்டே வந்தது. ராஜீவ் கொலை வழக்கின் அடுத்தடுத்த நிலைக் குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்ட நிலையில், 26 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் சிறையிலேயே வாட வேண்டியிருப்பது இங்கு ஒப்பிடப்பட வேண்டியதாகிறது.

இந்நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உட்பட பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் ஒருமித்த முடிவை எடுத்திருப்பது ஆக்கபூர்வமான விஷயம். 2014-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய துணிச்சலான சட்ட மன்றத் தீர்மானம் இங்கு நினைவுகூரப்பட வேண்டியது. மறைந்த முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. தமிழக அரசின் இந்தப் பரிந்துரையைத் தாமதிக்காமல் ஆளுநர் செயல்படுத்த வேண்டும்.

இந்த எழுவரும் விடுவிக்கப்படுவது தமிழகத்தைத் தாண்டியும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னெடுக்கும் மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும். அது என்னவென்றால், சிறைகளில் உரிய விசாரணை இல்லாமலும் இந்த எழுவரைப் போலத் தொடர் மேல்முறையீடு, ஊடக கவனம், அரசியல் அழுத்தம் இல்லாமலும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கான கைதிகளின் எதிர்காலம் மீதான கரிசனம்.

விசாரணைகளை விரைந்து நடத்தி நீதி வழங்கும் அமைப்பாக இன்னும் நம்முடைய நீதித் துறை வளரவில்லை. நாடு முழுவதும் விசாரணைக் கைதிகளாக 2.8 லட்சம் பேர் சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய நீதிக் கட்டமைப்பின் மிக மோசமான நிலை என்றே இதைச் சொல்ல வேண்டும். நீதித் துறை விசாரணைக்காக சாமானியர்கள் கொடுக்கும் விலை இந்நாட்டில் இன்னும் கொடூரமானதாகவே இருக்கிறது. அவர்கள் மீதான கரிசனத்தின் தொடக்கப்புள்ளியாக இந்த எழுவரின் விடுதலை அமையட்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024