Sunday, September 16, 2018

மாதவிடாய் கறை அவமானமா?

Published : 12 Sep 2018 09:23 IST

 

காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ நீங்கள் கழிவறை நோக்கி விரைகிறீர்கள் என்றால், உடல் கழிவுகளை அகற்றச்சொல்லி மூளை கட்டளையிடுகிறது என்று அர்த்தம். அதன் பின்பு கழிவறைக்குப் போகிறோம். ஆனால், எந்தக் கட்டளையையும் மூளை இடாமலே வெளியேறுவதுதான் மாதவிடாய். மாதத்தில் இந்த சில நாட்களில் மாதவிடாய் வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்குமே தெரியாது. சிலருக்கெல்லாம் சொல்லிவைத்தாற்போல் மாதம்தோறும் சரியான நாட்களிலும் வந்துவிடுவதில்லை. ஒரு வாரம் முன்பின்கூட ஆகலாம்.

முன்பெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டுச் செல்லாதவர்களாக இருந்தார்கள். எந்த நேரத்துக்கும் துணியை வைத்துச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது எப்போதும் வீட்டைத் தாண்டி வெளியில் பயணிக்கும் சூழல் பெரும்பாலான பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. எப்போதும் கைப்பையில் நாப்கின் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு இல்லாவிட்டாலும், நம் சகதோழி காதில் வந்து ரகசியமாய் சொல்லிவிட்டுப் போகும்போது கொடுக்கவாவது எப்போதும் இருப்பொன்று தேவையாக இருக்கிறது.

சரி... இதெல்லாம் முன்னேற்பாடுகள்தான். நாப்கின் இல்லாத சூழல் ஒன்றில் தன்னையும் அறியாமல் ஆடையில் குருதி படிந்துவிட்டால், அதென்ன உலக மகா குற்றமா என்ன? சில நேரங்களில் நாப்கினே வைத்தாலும் அதிகப்படியான உதிரப்போக்கால் கறை படிவதென்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால், நீல நிற மையை நாப்கினில் கொட்டிக் காட்டும் விளம்பரங்களெல்லாம் கறைபடிவதை அவமானத்தின் அடையாளமாகத்தானே சித்தரித்துக்கொண்டிருக்கின்றன! 'செக்... செக்.. செக்' என பகிரங்கமாகவே சின்னத்திரையில் வரும் நாப்கின் விளம்பரத்தில் வகுப்பில் இருக்கும் பெண் பிள்ளைகள் தங்களின் பின்புறத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் தயாரிப்பு நாப்கினை வாங்கினால் ஆடையின் பின்புறத்தை அடிக்கடி சரிபார்க்க வேண்டாமாம். இதில் எட்டு மணி நேரத்துக்கு மேலாகத் தாக்குப்பிடிக்குமென்று இன்னொரு தகவலையும் பரப்புகிறார்கள். ஒரு உயிர் திரவம் சிறிய நாப்கினில் 8 மணி நேரம் தேங்கிக் கிடந்தால் பெண்ணுறுப்பு எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை யோசிக்கிறோமா?

நாப்கின் இருந்தால் குதிரையில் சவாரி செய்யலாம். ஓட்டப்பந்தயத்தில் ஓடலாம்.. வெற்றிக் கோப்பையோடு வீடு திரும்பலாம் என்கிற போலிக் கற்பிதங்களைத்தான் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். விளம்பரங்கள் மாதவிடாயைப் பெண்ணுக்கான பெரும்பாவமாய் சித்தரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், பள்ளிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? ‘‘ம்மா.. எதுக்கும் இன்னிக்கு ரெண்டு நாப்கின் வச்சிட்டுப் போயிடுறேன். மிஸ் அடிக்கடி பாத்ரூம் போகவிட மாட்டேங்குறாங்க. பாய்ஸ் வேற பேக் ரோவுல இருக்காங்க’’ என்று சொல்லும் மகளிடம் எவ்வளவு புரிதலை ஏற்படுத்தினாலும் ‘‘மிஸ்... பாய்ஸ்’’ என இரண்டே வார்த்தைகளில் தயக்கம் காட்டிவிட்டு நழுவிக்கொள்கிறாள். ஏழாம் வகுப்பிலேயே பெரும்பாலான பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படியிருக்க இதுவரை மாதவிடாய் விழிப்புணர்வை இருபாலருக்கும் சொல்லித்தருவதைப் பள்ளிகள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

நீங்கள் சந்திக்கும் சகோதரியோ.. தோழியோ உங்கள் முன்னால் கறையோடோ இல்லை மெதுவாகவோ நடந்துசென்றால் நீங்கள் உடனடியாக ஓடிச்சென்று நாப்கின் வேண்டுமா என்று கேட்கிறீர்களோ இல்லையோ... பின்னால் இருந்து கிசுகிசுக்காமல் இருந்தாலே போதும். எங்களுக்குப் பயமெல்லாம் கறை மீது அல்ல... கரை சேர முடியாமல் பெண்களுக்கென புதிதுபுதிகாகக் கட்டவிழ்ந்துகொண்டிருக்கும் இத்தகைய காரணங்கள்தான்!

- பொன் விமலா, பத்திரிகையாளர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024