Thursday, November 15, 2018


கற்பிதமல்ல பெருமிதம் 31: நைட்டி நல்ல உடையில்லையா?

Published : 11 Nov 2018 10:19 IST






தீபாவளிக் கொண்டாட்டம் ஒருவழியாக முடிந்தது. சாப்பிட்டபோது, பட்டாசு வெடித்தபோது என வெவ்வேறு தருணங்களில் எடுத்த போட்டோக்களை வலைத்தளங்களில் போடத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். விடியற்காலையில் எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் தவிர மற்ற எல்லா போட்டோக்களிலும் அவன் அம்மாவும் மனைவியும் நைட்டி அணிந்தபடி இருந்தனர். சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. அம்மாவைத் திட்ட முடியாது. மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

எப்படித்தான் இந்தப் பெண்கள் எப்போதும் நைட்டியுடனே திரிகிறார்கள் என்று புரியவில்லை. அன்றைக்குப் பார்த்தால், அடுத்த வீட்டு அம்மா, அவர்கள் தெருவில் இருந்த பால் பூத்துக்குப் பால் வாங்க நைட்டியுடன் வந்திருந்தார். நைட்டிக்கு மேல் ஒரு துண்டு வேறு. பார்க்கவே சுரேஷுக்கு அருவருப்பாக இருந்தது.

இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அவன் மனைவி புடவை அணிந்திருந்தாள். அம்மா வழக்கம்போல் நைட்டிதான். சுரேஷ், மனைவியைப் பார்த்து, கட்டை விரல்களை உயர்த்திக் காண்பித்தான். மனைவியிடம் அம்மாவை சைகையால் காண்பித்து, கட்டை விரலை கீழ்நோக்கிக் காண்பித்தான்.

அம்மாவுக்குத் தெரியாமல் காண்பித்த தாகத்தான் நினைத்தான். ஆனால், அம்மா பார்த்துவிட்டாள்.

ஏண்டா, உன் பொண்டாட்டியைத் திட்டின மாதிரி என்னைத் திட்ட முடியலேன்னு வருத்தமா?

ஆமா, நீங்க எல்லாம் நைட்டுல மட்டுமே போட வேண்டிய டிரெஸ்ஸை ஏன் இப்படிப் பகல் முழுக்கப் போட்டுட்டுத் திரியறீங்கன்னு புரியலை. தீபாவளி போட்டோவுல நீங்க ரெண்டு பேரும் நைட்டிலதான் இருக்கீங்க. குடும்ப வாட்ஸ் அப் குரூப்லகூட அதைப் போடத் தோணலை.

நாங்க நைட்டியில இருக்கும்போது நீ ஏன் போட்டோ எடுத்தே? நான் காலையில புதுப் புடவை கட்டி இருந்தேனே?

அப்ப நான், அப்பா எல்லாரும் குளிச்சு புது டிரெஸ் போடலை.

நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம்தான் வேட்டி, சட்டையைப் போட்டிருந்தீங்க. கொஞ்ச நேரத்திலேயே நீ டீஷர்ட்டும் பெர்முடாவும் மாத்திக்கிட்டே. அப்பா பனியனுக்கும் லுங்கிக்கும் மாறிட்டார்.

சுரேஷின் மனைவி தன் மாமியாரை ஆச்சரியத்தோடு பார்த்தாள். தனக்கு இப்படிக் கேள்வி கேட்கத் தோணலையே என்று நினைத்தாள்.

சமீபத்தில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் ஆண் எழுத்தாளர் ஒருவர் நைட்டி போட்டு பெண்கள் வாக்கிங் வருவது பற்றிக் கிண்டல் அடித்திருந்தார். கூடவே அவரை ஆதரித்துச் சில குரல்களும் பதிவாகியிருந்தன.

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில்கூட, பகல் முழுவதும் பெண்கள் நைட்டி அணிந்து நடமாடுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்க்க வரும்போதுகூட நைட்டியும் அதற்கு மேல் சட்டையும் போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

என்னுடைய உண்டு உறைவிடப் பயிலரங்குகளில் நாள் முழுவதும் புடவையோடு இருக்கும் பெண்களை இரவு நேர பாடத்திட்டத்துக்கு வரும்போது நைட்டியோடு வரலாம் என்று கூறுவேன். அனைவரும் ஒரு சிறிய துண்டை மேலே போட்டுக்கொண்டு வருவார்கள்.

துப்பட்டாவாவது போடுவதற்கு வசதியாக நீளமாக இருக்கும். இந்த டவல் சும்மா சம்பிரதாயத்துக்குப் போட்டது போல்தான் இருக்கும். அதைப் போடுவதைவிடப் போடாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் .

ஏன் இவ்வளவு விமர்சனம்?

இரவு நேரத்தில் மட்டும் அணிய வேண்டிய உடையைப் பெண்கள் பகலில் அணிவதால் ஆண்களுக்குப் பாலியல் ரீதியான எண்ணங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லையா? பெரும்பாலான பெண்கள் குறைந்தபட்சம் கீழ்த்தட்டு, கீழ் மத்தியத் தட்டுப் பெண்கள், சினிமாக்களில் வருவது மாதிரியான மெல்லிய இரவு உடைகளையோ பளபளவென்று சாட்டின் துணியில் தைக்கப்பட்ட நைட்டி களையோ அணிவதில்லை.

பெரும்பாலும் கெட்டியான பருத்தி நைட்டிகளையே அணிகிறார்கள். நைட்டியில் தங்கள் உடல் எந்தவிதத்திலும் காட்சிப் பொருளாக ஆகாததாகவே அவர்கள் உணர்கிறார்கள். அதனாலேயே இன்று நைட்டி என்பது பெண்கள் மத்தியில் சுலபமாக, சௌகர்யமாக அணியும் உடையாகிவிட்டது. இது ஏன் ஆண்களின் கண்களை உறுத்த வேண்டும்?

ஆண்களுக்கு என்ன பிரச்சினை?

சின்ன டிரவுசர்/பெர்முடா போட்டுக் கொண்டு ஆண்கள் பொது இடங்களில் நடமாடுகிறார்கள். சில வேலைத் தளங்களில்கூட இன்று அரை (அ) முக்கால் போன்ட்டுகளைப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

லுங்கி கட்டுபவர்கள்கூட, பாதம் வரை அணிவதில்லை. முட்டிக்கு மேல் வருகிறபடிதான் மடித்துக் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஆபாசம் இல்லையா? ஆபாசமாக, ஊடுருவிப் பார்க்கும்படியாக நைட்டி இல்லை என்பதுதான் ஆண்களின் பிரச்சினையா?

நடைப்பயிற்சிக்கு நைட்டி அணிந்துவரும் பெண்ணோ, வீட்டில் பகலில் வேலை செய்வதற்குத் தோதாக நைட்டி அணியும் பெண்களோ, அதற்கு ஏற்றாற்போல் கெட்டியான, தடித்த நைட்டிகளைத்தான் அணிகிறார்கள். பலரும் உள்ளாடைகளை அணிந்துதான் நைட்டியையும் அணிகிறார்கள். உடலை இறுக்கிப் பிடிக்காத தொள தொள நைட்டிகளையோ அல்லது ஃபிரில் வைத்த நைட்டிகளையோதான் அணிகிறார்கள்.

மாற வேண்டியது மனப்பான்மையே

நைட்டி என்பதில் பொருளாதாரச் சிக்கனமும் அடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சில பெண்கள் வெளியே போட்டுச் செல்லும் உடைகளைக் கொஞ்சம் பழையது ஆன பிறகு வீட்டில் போடும் பழக்கம் இருந்தது. இப்போது 150 ரூபாயிலேயேகூட ஓரளவுக்கு நல்ல நைட்டிகளை வாங்க முடிகிறது. வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே நைட்டி போடுவது சவுகரியமாக இருப்பதோடு, சிறிது நேரமே அணிந்த வெளி உடைகளைக் காற்றாட விட்டுவிட்டு, திரும்ப மறுபடியும் அணிகிறார்கள் சில பெண்கள்.

இயல்பாக அணுகும் பெண்கள்

நைட்டி போடுவது பற்றி ஆண்களின் அசலான பிரச்சினை என்ன? அது இரவு நேரத்துக்கான உடை என்று மண்டைக்குள் ஊறி இருப்பதால், பெண்கள் நைட்டியோடு நடமாடினால் படுக்கையறையைத்தான் ஆண்களால் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றால், அது அவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் எண்ணம்.

மாற வேண்டியது நம் மனப்பான்மைதான். புடவையோ சுடிதாரோ நைட்டியோ, தனக்கு சவுகரியமாக உள்ள உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. அவர்கள் கண்ணியத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். பெண்களின் உடைக்கான கலாச்சாரக் காவலர்கள் பொறுப்பை ஆண்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்பினால், கோபப்பட்டால் அவர்கள் அணியும் உடைக்கும் அதை நீட்டிக்க வேண்டும். அதுதான் நியாயம்.

ஆண்கள் இறுக்கமான டிஷர்ட் அணிகிறார்கள். அரை டிராயரை அணிகிறார்கள். பெரிய தொப்பையை வைத்துக்கொண்டு சட்டையை டக் இன் செய்துகொள்கிறார்கள். டிரவுசருக்கு மேல் வரும்படி லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு லுங்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் சகஜமாகப் பார்க்கும் பக்குவத்தைப் பெண்கள் பெற்றுவிட்டார்கள். அதனால்தான் பெண்கள் இவற்றைப் பற்றி எல்லாம் எரிச்சல்படுவதும் இல்லை. புலம்புவதும் இல்லை.

கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தில் வாழும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஒரு சாராருக்கு மட்டும் வரையறைகள் விதிப்பது பெருமிதமல்ல; கற்பிதம். கற்பிதங்களை உடைப்பதில் பெருமிதம் கொள்வோம்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com | ஓவியம்: அ. செல்வம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024