Friday, November 9, 2018

மாநில செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 09, 2018 04:45 AM
மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது? என்பது குழப்பமாக இருந்து வந்தது. அதை உறுதிபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். அதன்பேரில், மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என்று கடந்த ஜூன் 20-ந் தேதி அரசு அறிவித்தது.

தமிழகத்துடன் சேர்ந்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன், அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் இங்கு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடந்ததாக தெரியவில்லை. ஏற்கனவே பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு விட்டது.

நிதி ஒதுக்க வேண்டும்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவதில் தாமதம் கூடாது. எனவே மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக மத்திய அரசு மந்திரிசபையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் எந்த மாற்றமும் இருக்காது” என தெரிவித்தார்.

எப்போது தொடங்கும்?

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவது எப்போது? இந்த பணிகள் எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டிசம்பர் 6-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024