Thursday, November 8, 2018

தலையங்கம்

ரூபாய் கொடுத்து கச்சா எண்ணெய்



ஆதிகாலத்தில் மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

நவம்பர் 08 2018, 04:00

ஆதிகாலத்தில் மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் தன்னிடமில்லாத பொருள் மற்றவர்களிடம் இருக்கும்போது, அதைபெறுவதற்கு தன்னிடம் உள்ள பொருளை கொடுத்து அதை வாங்கிக்கொள்ளும் பண்டமாற்று முறையை கடைப்பிடித்தான். ஒருகட்டத்தில் இவ்வாறான நேரடியாக பண்டமாற்று முறையில் உள்ள சங்கடங்களை சமாளிக்க, ஒவ்வொரு பொருளையும் உரியமுறையில் மதிப்பீடு செய்து அதற்கான ஒரு மைய அடையாளத்தைவைத்து, அதன்மூலம் தேவையான பொருட்களை வாங்கத்தொடங்கினான். மதிப்பீட்டு அடையாளமாக முதலில் தங்க கட்டிகள் என்று தொடங்கி தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்று வட்டவடிவிலான காசுகளாக வெளிவந்தன. கி.பி.740 முதல் இந்த உலோக நாணயங்கள் காகிதப்பணமாக மாறின.


இந்தியாவில் 1862 முதல் காகிதத்தில் ரூபாய் நோட்டுகள் வெளிவரத்தொடங்கின. இந்தியாவில் ரூபாய் நோட்டு என்று சொல்வதுபோல, அமெரிக்காவில் டாலர் என்றும், ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் யூரோ என்றும், சீனாவில் யுவான் என்றும், இங்கிலாந்தில் பவுண்டு ஸ்டெர்லிங் என்றும், ஐக்கிய அரபு நாடுகளில் திர்ஹாம் என இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பணத்திற்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. இதில் அமெரிக்க டாலர்தான் வலுவுள்ளதாக இருப்பதால் அதற்கு இணையான மதிப்பை வைத்துத்தான் சர்வதேச வர்த்தகங்கள் நடக்கிறது. ஒரு நாட்டின் பணமதிப்பே அமெரிக்கா டாலருக்கு இணையாக அவர்களின் கரன்சி எவ்வளவு இருக்கிறதோ? அதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்கா, ஈரான் நாட்டின்மீது பொருளாதார தடைவிதித்திருந்தது. இந்ததடை இந்தியாவுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்பட்டது. ஏனெனில் ஈரானிலிருந்து, இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தியா உள்பட 8 நாடுகள் மட்டும் 180 நாட்கள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யலாம் என்று இப்போது அமெரிக்கா விலக்கு அளித்திருக்கிறது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள உறவு கசப்பாக இருப்பதால், டாலர் மூலம் வர்த்தகம் செய்யமுடியாது. இந்தநிலையில், ஈரானிலிருந்து முழுக்கமுழுக்க இந்தியப்பணத்தைக் கொடுத்தே கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடமிருந்து இந்திய ரூபாயாக ஈரான் கச்சா எண்ணெய்க்கு பெற்றுக்கொண்டு, அந்தப்பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சரிசெய்துகொள்ளும். இதுபோல, சமீபத்தில் பிரதமர் மோடி ஜப்பான் சென்றபோது இந்தியா–ஜப்பான் இடையே ரூ.7,500 கோடி மதிப்பிலான டாலர் தொகையை இந்திய –ஜப்பான் கரன்சிகளில் பரிவர்த்தனை செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் அன்னிய செலாவணி சந்தையிலும், முதலீட்டு சந்தையிலும் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும். இவ்வாறு ரூபாய் நோட்டுகள் மூலம் வர்த்தகம் செய்யும்முறை நிச்சயமாக வரவேற்புக்குரிய செயல். இதுபோல, சீனாவோடு நாம் மேற்கொள்ளும் வர்த்தகங்களிலும் ரூபாய் நோட்டு–யுவான் அடிப்படையிலேயே வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசாங்கம் முயற்சிக்கவேண்டும். ஏனெனில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகநாடு சீனாதான். அந்தவகையில், ரூபாய்நோட்டு மற்றும் யுவானில் வர்த்தகம் செய்யவும் முடிவுகள் மேற்கொண்டால், இருநாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். ஆனால், ரூபாய்நோட்டுகளிலேயே வர்த்தகம் நடக்கும்போது, அன்னிய செலாவணியின் இருப்பு குறையுமா?, அதன் விளைவுகள் என்ன என்பது போகப்போகத்தான் தெரியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024