Friday, November 9, 2018

தலையங்கம்

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி


பழைய திரைப்பட பாடல் ஒன்றில், ‘நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?, இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?’ என்று வரிகள் வரும். இது இப்போது புதிதாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்– தெலுங்குதேசம் கட்சி உறவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 09 2018, 04:00

பழைய திரைப்பட பாடல் ஒன்றில், ‘நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?, இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?’ என்று வரிகள் வரும். இது இப்போது புதிதாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்– தெலுங்குதேசம் கட்சி உறவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நடிகர் என்.டி.ராமராவ் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவில் தன்னிகரற்று ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தெலுங்குதேசம் கட்சியை தொடங்கினார். 1983–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றிபெற்று, என்.டி.ராமராவ் முதல்–மந்திரி ஆனார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றநிலை இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வில்லை, சிறப்பு நிதி உதவிகள் அளிக்கவில்லை என்பதற்காக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகினார். 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், பா.ஜ.க. அல்லாத அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் மற்றும் பல எதிர்க்கட்சி களுக்கும் இருக்கிறது. இந்தநிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்றமுறையில் காங்கிரஸ் கட்சியோடு சந்திரபாபு நாயுடு உறவுகொள்ள நினைத்து, சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். இது ஒரு ஜனநாயக நிர்ப்பந்தம் என்று இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்தார். நம் நாட்டை காப்பாற்றி ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும். ஜனநாயக நிர்ப்பந்தத்தால் நாட்டை பாதுகாக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று சந்திரபாபு நாயுடு இந்த அபூர்வ சந்திப்பு பற்றி கூறினார். இந்த பின்னணியில் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஒரே அணியில் திரட்ட முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமி என்று பல தலைவர் களோடு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து இன்று மாலையில் சந்தித்து பேச இருக்கிறார். பா.ஜ.க. அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் தி.மு.க. தலைமையில் தமிழ் நாட்டிலும் ஒன்றிணைக்க முயற்சி நடக்கிறது. அப்படி யொரு கூட்டணி அமைந்துவிட்டால் 2019 பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட இந்த கூட்டணி உருவாகிவிடும். இந்த புதிய கூட்டணிக்கு யார் தலைவர்? என்பதில்தான் கண்டிப்பாக சிக்கல் ஏற்படும். ஏனெனில், இந்தப்படையில் எல்லோருமே தலைவர்கள் தான். சந்திரபாபு நாயுடு, ராகுல்காந்தி, சரத்பவார், மாயாவதி, மம்தா பானர்ஜி என எல்லோருமே தலைமை பொறுப்புக்குவர ஆசைப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த ஒரு பிரச்சினையில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சுமுகமான தீர்வு ஏற்படுமா? என்பது போகபோகத்தான் தெரியும். இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் வேகமாக தொடங்கிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024