Sunday, November 18, 2018

விழாமல் காக்கும் விழாக்கள்

By உதயை மு.வீரையன் | Published on : 17th November 2018 01:43 AM |

தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில், தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பதால் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியன்று நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்தது. அதே நேரம் சப்தம் எழுப்பும் வெடிகளுக்குத்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது என்றும், மத்தாப்பு போன்ற சப்தம் எழுப்பாத பட்டாசுகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது எனவும் தீயணைப்புத் துறை விளக்கம் கூறியது.

தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டப்படி 6 மாதம் வரை சிறைத் தண்டனையோ, ரூ.1000 வரை அபராதமோ விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

இதன்படி உச்சநீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விழா நாளில் மகிழ்ச்சி மிகுதியால் குழந்தைகள் வெடித்ததற்கு பெற்றோர் மீது வழக்குப் போடுவது சரியா? இந்த வழக்குகளை விலக்கிக் கொள்வது சமூகப் பொறுப்புள்ள அரசுக்கு அழகாகும்.

பல காலமாகவே பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த ஆண்டு நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த போதிலும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஆனால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையினால் குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு 65 குறியீடு பதிவாகியிருப்பதாகவும், தில்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு எனவும் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான அளவில் இருப்பதாகவும், வடமாநிலங்களைவிட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்றின் மாசு பதிவாகியிருப்பதாகவும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ஏற்பட்ட மாசைவிட இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.

சென்னையில் சில இடங்களில் அளவிடப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லி, மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. தில்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். காற்றை வடிகட்டும் முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தில்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது.

தமிழ் நாட்டில் அண்மைக் காலமாக தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, வாகனப் புகை, சாலைகளை முறையாகப் பராமரிக்காததால் பறக்கும் தூசு என காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது. அத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களில் பட்டாசு வெடிப்பது அதிகரித்திருப்பதால் தீபாவளி நேரத்தில் காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்ததால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி முதலிய பெருநகரங்களின் பட்டாசு விற்பனையில் 40 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் வணிகர்கள் பெரும் இழப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.

தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் கேட்டுப் பெற வேண்டும் எனவும், அப்போதுதான் பட்டாசுத் தொழில் நிலைத்து நிற்கும் எனவும், தமிழகத்திற்கே உரிய பட்டாசுத் தயாரிப்புத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வணிகர்கள் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 232 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிடப் பல மடங்கு அதிகமாகும். இதனைத் தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.
பட்டாசு விபத்து பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் காவல்துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் தீயணைப்புத் துறையினர் இணைந்து செயல்பட்டனர். இதனால் பெரிய அளவுக்குப் பட்டாசு விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 விழுக்காடு குறைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரக் கட்டுப்பாட்டால் நிகழாண்டு பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் பட்டாசு ஆலைகளைத் திறப்பது கடினம் என்று கூறுகின்றனர். இதனால், பட்டாசுத் தொழில் பாதிப்படைவதுடன் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர்.

இந்த மூலப் பொருளைக் கொண்டுதான் கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி செய்ய முடியும். நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இதுபோன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 விழுக்காடு பாதிப்பு ஏற்படும். இதனால், தீபாவளி முடிந்து பட்டாசுத் தொழிற்சாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றே பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகையின்போது நான்கு நாள்கள் தொடர் விடுமுறையினால் டாஸ்மாக் கடையின் மதுமான விற்பனை ரூ.600 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் முதல் இரண்டு நாள்களில் ரூ.330 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இதனைச் சாதனை என்பதா? வேதனை என்பதா?
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏழாயிரமாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போது நான்காயிரமாகக் குறைந்து விட்டது. அதே நேரம், மதுபானத்தின் விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டதால் கடைகள் குறைந்தாலும் வருவாய் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ரூ.22 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் குதூகலிக்கும் மக்கள் அதனால் ஏற்படும் குப்பைகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தெருவும், பொது இடங்களும் சுகாதாரக் கேடாக மாறுவதால் பொது அமைதிக்குக் கேடாய் முடிகிறது. இதுபற்றி ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டும்.
தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதில் 19 ஆயிரம் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து 65 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி இதில் 9.04 டன் பட்டாசுக் குப்பைகள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலை வளாகத்திலுள்ள தொழிற்சாலைக் கழிவுகள் மேலாண்மைக் கூட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு விழாக்கள் முடிந்த பிறகும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பல நாள்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். பல நாள்களாக ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விழா சில நாள்களாவது தொடராமல் போகுமா? ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

எல்லா மக்களும் விழாக்கள் கொண்டாடும் நிலையில் இப்போது இல்லை. காரணம், விலைவாசி விண்ணைத் தொடுகிறது. மானியங்களை எதிர்பார்த்தே மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு விழாக்கள் கொண்டாட நேரமும் இல்லை. ஆனால், விழாக்கள் இவர்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன.

பெரிய வணிகர்கள் விளம்பரங்களால் வாழ்கின்றனர். சிறிய வணிகர்கள் விளம்பரம் இல்லாமலே வாழ்வதற்கு விழாக்கள் வழி வகுக்கின்றன. எளிய மனிதர்களாலும் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டு வாழ முடிகிறது. ஆம், விழாக்கள் அவர்களை விழாமல் காக்கின்றன.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024