அற்ப ஆசை ஆபத்து!
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 16th November 2018 02:35 AM
அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, உணர்ச்சி வேகத்தில் ஏதாவது சொல்லிவிட்டுப் பின்னர் அதனை மறுப்பதைப் பார்க்கின்றோம். நிலைமை முற்றினால் வேறு வழியின்றி வருத்தமோ மன்னிப்போ தெரிவித்துவிட்டு, பிரச்னையிலிருந்து தங்களை அவர்கள் விடுவித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
ஆனால், எப்போதாவது தங்கள் மீது விழும் ஊடக வெளிச்சத்திற்காக ஏங்கும் சாதாரண மக்களில் ஒரு சிலர் எக்குத் தப்பாக எதையாவது செய்துவிட்டுப் பிறகு மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், காவிரிப் பிரச்னை தொடர்பான போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது இவ்வருடத்திய ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயங்கள் தொடங்கின. காவிரிப் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். பந்தயத்தைத் தடைசெய்யக் கோரி பெரும் போராட்டம் நடந்தது.
அப்போது, தொழில்முறை குத்துச் சண்டை வீரரைப் போல் தோற்றமளித்த ஓர் இளைஞர், காவலர் ஒருவரை திடீரென்று சரமாரியாகத் தாக்கிய காணொளி ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த அக்காவலர் நிலைகுலைந்து விழுந்தவுடன், சட்டென்று அவ்விளைஞர் கூட்டத்தில் புகுந்து மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார். காவல் துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்ட அந்த இளைஞர் சில வாரங்கள் தலைமறைவாக இருந்துவிட்டுப் பின்னர் பிடிபட்டார்.
இன்னொரு காட்சி: சமீபத்தில் வெளிவந்து சர்ச்சைக்குள்ளான திரைப்படத்தின் விளம்பரப் பதாகைகள், அப்படத்தை எதிர்த்த அரசியல் கட்சியினரால் ஆங்காங்கே கிழிக்கப் பட்டன. சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பளர்களும், அதனை எதிர்த்த கட்சியினரும் அரசியலில் எதிரெதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆனாலும், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவதாக உடன்படிக்கையும் ஏற்பட்டுவிட்டது.
ஆனால், அத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகனின் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் இளைஞர்கள் இருவர், தங்கள் அபிமான நடிகர் நடித்த படத்தின் பதாகைகளைக் கிழித்தவர்களை எச்சரிக்கும் விதமாகக் கையில் கத்தியை வைத்துக்கொண்டு எச்சரிக்கும் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து ஒரு பரபரப்பு உண்டானது. தற்போது அந்த இளைஞர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகி விட்டனர்.
வேறொரு காட்சி: தென்மாவட்டம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர், கடந்த செப்டம்பர் மாதத்தில், தன்னுடைய அண்ணனுக்குச் சிறையில் நேர்ந்த அனுபவங்களால் ஆத்திரமடைந்து, சிறைக் கண்காணிப்பாளருக்கும், காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் (இருவரும் பெண்கள்) மிரட்டல் விடும் குரல் பதிவைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
காவல் துறைக்கே சவால்விடும் அளவுக்குப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று அவரைப் பற்றிப் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, மிரட்டல் விடுத்த ஓரிரு நாளிலேயே பிடிபட்டார் அந்த நபர்.
மேற்கண்ட நிகழ்வுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் சென்னை மாநகரில், ரயில் மற்றும் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக் கத்திகளுடன் அவ்வப்போது உலா வந்து பொதுமக்களைக் கலவரப்படுத்துவது வழக்கமாகியுள்ளது.
தங்களின் வீரசாகசத்தைக் கைப்படமாகவும் (செல்ஃபி), காணொளியாகவும் எடுத்துப் பதிவு செய்து அவர்கள் மகிழவும் செய்கிறார்கள்; காவல் துறையினரிடம் பிடிபடவும் செய்கிறார்கள்.
மேற்படி சாகசங்களைச் செய்வதன் மூலம் ஊடக வெளிச்சம் தங்கள் மேல் விழுவதை ரசிக்கின்ற மனோபாவமே இவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகின்றது.
ஆனால், அந்த ஊடக வெளிச்சம் இவர்கள் மேல் விழுவது சிறிது நேரமே என்பதையும், அந்த வெளிச்சத்தினால் சமூக விரோதிகள் என்ற எதிர்மறைப் பெயர்தான் இவர்களுக்குக் கிடைக்கும் என்பதையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இவை மட்டுமா? ஊடகத்துறையினர் முன்பு, எதையாவது ஆட்சேபகரமாகப் பேசிவிட்டுத் தப்பித்துக் கொள்ளும் அரசியல் கட்சியினர் போல் தங்களால் தப்பித்துவிட முடியாது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஐ.பி.எல். பந்தயத்தின்போது காவலரைத் தாக்கிய இளைஞர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டதோ, அந்தக் கட்சித் தலைமையே, அவர் தங்கள் கட்சிக்காரர் இல்லை என்று கூறிவிட்டது.
அந்த இளைஞர் மட்டுமன்றி, தங்களின் அபிமான நடிகருக்காகக் கத்தியைத் தூக்கிய ரசிகர்கள், காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த நபர் மற்றும் பேருந்து, ரயில் பயணத்தின்போது பட்டாக் கத்தியைச் சுழற்றிய மாணவர்கள் அனைவருக்குமே அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்கொள்ளவே இனி நேரம் போதாது. அவர்களது குடும்பத்தினர் மட்டுமன்றி, உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் எல்லாருமே அவர்களைச் சமூக விரோதிகளாகவே பார்ப்பார்கள்.
ஏதோ பெரிய சாதனை புரிவதாக நினைத்துக்கொண்டு, ஊடக வெளியில் அசட்டுத் துணிச்சலுடன் சில சாகசங்களைச் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் தங்கள் செயலை எண்ணிக் காலமெல்லாம் வருந்த வேண்டியிருக்கும்.
சமுதாய முன்னேற்றத்திற்கும், தேசத்தின் வளர்ச்சிக்கும் துணை புரியும் சாதனையாளர்களின் மீது புகழ் வெளிச்சம் தானாகவே பரவும். இதுவன்றி, ஊடக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டுச் செய்யப்படும் செயல்கள் எதிர்மறைப் பயனையே கொடுக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment