Wednesday, November 14, 2018

'கஜா' நாளை இரவுக்குள்  கரை கடக்க வாய்ப்பு

dinamalar 14.11.2018

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், 'கஜா' புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.



வங்க கடலில், நவ., 9ம் தேதி இரவு உருவான, கஜா புயல், தமிழகத்தை நோக்கி மிகவும் மெதுவாக சுழன்ற வண்ணம் உள்ளது. இந்த புயல் நேற்று, மேலும் வலுவாகும் என, கூறப்பட்ட நிலையில், நேற்றிரவு வரை, அதேநிலையில் தான் இருந்தது. புயல் நகரும் வேகம், மணிக்கு, 25 கி.மீ.,லிருந்து, 15 கி.மீ., ஆக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம், தென்மேற்கு திசையில் வேதாரண்யத்தை நோக்கி சுழன்ற புயல், நேற்று வடமேற்கு திசைக்கு மாறி காரைக்காலை நோக்கி சுழன்ற வண்ணம் உள்ளது. எனவே, கடலுார் மற்றும் பாம்பன் இடையே, எந்த இடத்தில் வேண்டுமானாலும், புயல் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன், 'நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கும்' என தெரிவித்துள்ளார். அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின் படி கஜா புயல் நாளை பிற்பகல் முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.

ராமேஸ்வரம் தீவுக்கு ஆபத்து?

'கஜா' புயல் அறிவிப்பால் 2500 விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. 100 கி.மீ., வேகத்தில் புயல் கரையை கடக்கும் போது படகுகள், மீனவர் குடிசைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. புயல் பாதிப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் ஆய்வு செய்தார்.ஆனால், நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் சூறாவளிக் காற்று, கடல் கொந்தளிப்பு, ராட்சத அலை ஏதும் இன்றி கடல் குளம்போல் காட்சியளித்தது.

9 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

கஜா புயல் காரணமாக, புதுச்சேரி, கடலுார், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு 16ம் தேதி வரை 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் சீற்றத்துடன் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். 10 மீட்டர் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளது. கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் வங்க கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலில் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள கரைகளில், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024