110 முதியோர்களை சொந்த செலவில் விமானப் பயணம் செய்ய வைத்த தொழிலதிபர்: 5 ஆண்டு கனவு நிறைவேறியதாக பெருமிதம்
Published : 04 Feb 2019 08:07 IST
திருப்பூர்
சமூகத்தில் சுயநலம் என்பது மலிந்து விட்ட இக்கால சூழலில், விமானத்தை வானத்தில் மட்டுமே பார்த்து ரசித்துவந்த வசதியற்ற 110 முதியோர்களை தனது சொந்த செலவில் விமானப் பயணம் செய்ய வைத்து மகிழச் செய்துள்ளார் பின்னலாடை விற்பனையாளர் ஒருவர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ரவிக்குமார். இவர் பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நீண்ட நாட்களாக மாறுபட்ட ஆசை ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால், தனது கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் ஏற்றிப் பயணம் செய்ய வைத்து, அவர்களை மகிழ்விக்க வேண்டும் என விரும்பியிருக்கிறார்.
நினைத்ததோடு அதை செயல்படுத்தவும் முனைந்தவர், அதற்காக தனது நெருங்கிய நண்பர்கள் சிலரது உதவியை நாடியுள்ளார். நண்பர்கள் உதவியுடன் தனது கனவை நனவாக்கியுள்ளார். தனது கிராமத்தைச் சேர்ந்த 90 பாட்டிகள், 20 தாத்தாக்கள் என 110 முதியோர் மற்றும் அவர்களது பாதுகாப்புக்கு 10 பேர் என 120 பேரை கடந்த 2-ம் தேதி விமானப் பயணம் செய்ய வைத்து மகிழ்ந்துள்ளார்.
கோவையில் இருந்து சென்னைக்கு அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். பிப்.2-ம் தேதி பகல், 120 பேரையும் தனது கிராமத்தில் இருந்து வேன் மூலம் கோவை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்ற ரவிக்குமார், அங்கிருந்து 2 குழுக்களாக விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சென்னையில் வேன் ஏற்பாடு செய்து, அதன் மூலமாக மெரினா சென்று சுற்றிப் பார்த்த அவர்கள், நேற்று திருவண்ணாமலை சென்றனர். நிறைவாக இன்று தங்களது சொந்த கிராமமான தேவராயன்பாளையத்துக்கு திரும்பவுள்ளனர்.
இதுகுறித்து ரவிக்குமாரிடம் நாம் பேசியபோது, 'தொழில் நிமித்தமாக முதல்முறையாக விமானத்தில் நான் பயணித்தபோது எனக்கு இந்த ஆசை உண்டானது. தங்களது வாழ்நாள் முழுக்க எங்களின் கிராமத்திலேயே இருந்து, ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை வானத்தை அண்ணாந்து மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஒரு நாளேனும் விமானத்தில் ஏற்றி மகிழ்விக்க வேண்டும் என விரும்பினேன்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய எண்ணம் இது. அதைப் பற்றி தொடர்ந்து யோசித்து வந்தேன். தற்போது அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விமானத்தில் பயணிக்க விரும்பும் எங்கள் ஊர் முதியவர்களின் பட்டியலை தயாரித்தேன். என்னுடைய நண்பர்கள் அதற்கு முழுமையாக உதவினார்கள். 2 மாதங்களுக்கு முன்பு அனைவருக்கும் கோவையில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தேன். முதியோர்கள் அனைவரையும் விமானத்தில் ஏற்றி இருக்கைகளில் அமர வைத்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் சொல்ல முடியாதது. இந்த நாளுக்காகவே காத்திருந்தேன்.
விமானத்தில் ஏறி அமர்ந்து சென்னை சென்றடையும் வரை அனைவருமே குழந்தைகளாகிப் போனோம் என்றால் மிகையில்லை. மெரினாவில் உள்ள தலைவர்கள் சமாதி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்துள்ளோம். எங்களது கிராமத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அனைவரும் தாய் பிள்ளைகளாக சகோதரப் பாசத்துடன் பழகி வருகிறோம். எங்களது விமானப் பயணத்தில் சில இஸ்லாமிய தாத்தா பாட்டிகள் வந்துள்ளனர். அவர்களது விருப்பப்படி பிரபலமான மசூதிகளுக்கு அழைத்துச் சென்று பார்த்துள்ளோம். பிப்.4-ம் தேதி (இன்று) ஊர் திரும்பவுள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment