Tuesday, February 5, 2019

தலையங்கம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாணவர்கள் நாடுவதற்கு என்ன காரணம்?



அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை உறுதிசெய்யவேண்டும் என்ற சீரியநோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.

பிப்ரவரி 05 2019, 04:29

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் 3,100 பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருக்கிறது. 812 பள்ளிக்கூடங்களில் 15 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. 2014-15-ல் அரசு பள்ளிக்கூடங்களிலுள்ள மாணவர்களின் சேர்க்கை 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 ஆக இருந்தநிலையில், 2018-19-ல் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது.

தற்போது ஏறத்தாழ 59 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இது ஒரு அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் சேருவதற்குத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்குகாரணம், ‘நீட்’ தேர்வுதான். ‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பு 10-ம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ்-2-வில் அதிக மார்க் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை விட்டுவிட்டு, மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்வார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறவேண்டுமென்றால், மாநில கல்வித்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பில் படித்தால் போதாது. சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்ந்தால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற மனோபாவம் மாணவர்களிடம் வந்துவிட்டது. இதன்காரணமாக, இந்த ஆண்டு 61 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் போய் சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பல பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 வகுப்பில் பயோலஜி பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. வணிகவியல் பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம், மாணவர்கள் மத்தியில் மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர வேண்டுமென்றால், தனியாக ‘கோச்சிங்’ வகுப்பில் சேர தங்களால் முடியுமா?, அதற்கு நிறைய பணம் செலவாகும். அந்தளவு நமக்கு பணவசதி இல்லை என்ற தயக்கத்தால், வணிகவியல் பிரிவில் படித்து கலைக்கல்லூரியில் சேர்ந்தால்போதும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். இந்தநிலை தொடர்வது நல்லதல்ல. இதற்கு காரணம், அரசு பள்ளிக்கூடங்களில் கல்வித்தகுதி சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிக்கூடங்களைவிட, தனியார் பள்ளிக்கூடங்களில்தான் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணம் பரவலாக இருப்பதால்தான், அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை வீதமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமென்றால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்ற சீர்த்திருத்தங்களை எல்லாம் செய்வதில் முனைப்பு காட்டுவதுபோல, கல்வித்தரத்தை உயர்த்துவதில் அதிக முனைப்பு காட்டவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024