Tuesday, May 7, 2019

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் மனு தள்ளுபடி

Added : மே 06, 2019 23:48

புதுடில்லி : 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட பாலியல் புகாரில், எந்த ஒரு முகாந்திரமும் இல்லை' என கூறி, அந்த மனுவை, நீதிபதிகள் குழு, தள்ளுபடி செய்தது.நீதிமன்றத்தில் பணியாற்றிய, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது, பாலியல் புகார் தெரிவித்தார்; இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, நீதிபதிகள் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது.நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, பெண் நீதிபதிகள், இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழு, இந்த மனு தொடர்பாக, நீதிபதிகள் அறையில் விசாரணை நடத்தியது.

புகார் அளித்த பெண்ணும், நீதிபதிகள் குழு முன் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.மூன்று நாள் மட்டுமே, விசாரணை குழு முன் ஆஜரான அந்த பெண், அதற்கு பின், 'அச்சுறுத்தலான சூழல் நிலவுவதால், இனி, விசாரணைக்கு ஆஜராவது இல்லை என முடிவு எடுத்துள்ளேன்' என, அறிவித்தார்.இதற்கிடையே, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், விசாரணை குழு முன் ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.விசாரணை குழுவின் அறிக்கை, உச்ச நீதிமன்ற மூத்த அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குழு நடத்திய விசாரணையில், தலைமை நீதிபதிக்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.உள் விசாரணை குழுவில் நடந்த விபரங்களை, பொதுவெளியில் வெளியிட முடியாது. மூத்த நீதிபதியிடம், விசாரணை விபரங்கள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது .

.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், புகார் அளித்த பெண் கூறுகையில், 'நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, ஏமாற்றமளிக்கிறது. நான் அச்சப்பட்டது போலவே நடந்து விட்டது' என்றார்.அவசர வழக்காக விசாரிக்க மறுப்புஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, நீதிமன்றத்தில் ஏற்கனவே பணியாற்றிய பெண் ஊழியர், பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதுகுறித்து, நீதிமன்ற குழு விசாரித்தது. அந்த புகார் மனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், எம்.எல்.சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாலியல் புகாரில், தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடந்ததா என, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று பரிசீலனைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது:அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? மனு பட்டியலிடப்பட்டு, விசாரிக்கப்படும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...