Tuesday, May 7, 2019

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அட்சய திருதியை ஸ்பெஷல்

Added : மே 07, 2019 02:15


அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அட்சய திருதியை ஸ்பெஷல்



அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.

* மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.

* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம்.

* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.

* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கைத்தாயே! மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.

* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயக்கமலத்தில் வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.

* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே! குறையில்லாத வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!

* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெலாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.

அட்சய திரிதியை வழிபாடு:

'அட்சய' என்றால் 'குறைவில்லாதது' என்பது பொருள். குறைவில்லாத செல்வம் பெற இன்று லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்றி வழிபட்டால் அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய நற்பண்புகள் உண்டாகும். இன்று அன்னதானம் செய்ய லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இன்று என்ன வாங்கலாம்:

அட்சயதிரிதிய நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் மக்கள் தங்கம் வாங்க விரும்புகின்றனர். நம் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிப் பயனடையலாம். உப்பு, அரிசி, மஞ்சள் போன்ற பலசரக்கு சாமான்கள், ஆடைகள், பாத்திரங்கள் என வாங்கலாம்.

அள்ளினாலும் குறையாது:

துரியோதனனின் சூழ்ச்சியினால், பாண்டவர்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்போது, உணவுக்கு கஷ்டப்படாமல் இருக்க, தவுமிய மகரிஷி ஆலோசனையின் படி தர்மர் ஆதித்ய மந்திரம் ஜெபித்தார். அதன் பயனாக ஒரு அட்சயதிரிதியை நாளில் சூரியதேவன் காட்சியளித்து அட்சய பாத்திரம் அளித்தார். அதன் மூலம் தேவையான நேரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் உணவு பெற்றனர். இதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நமசிவாய சொல்லுங்க!

காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் 'உணவு' என்று பொருள். பூரணி என்றால் 'முழுமையாக உடையவள்' என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள் தான் அட்சய திருதியை. எனவே, இந்நாளில்'ஓம் நமசிவாய' சொன்னால் சிவனருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...