Friday, November 1, 2019

`வேறு வழியின்றி போராட்டத்தைக் கைவிடுகிறோம்!’ - மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்

சத்யா கோபாலன்

கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.



மருத்துவர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஒரு வாரகாலமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அவர்கள் கூறிவந்தனர்.


மருத்துவர்கள் போராட்டம்

இதையடுத்து, நேற்று முன்தினம் மருத்துவர்கள் சங்கத்தின் சிலரைச் சந்தித்துப் பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதன் பின்னர் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர், அமைச்சரைச் சந்தித்த மருத்துவர்கள். ஆனால், `அமைச்சருக்கு ஆதரவான மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர், எங்களிடம் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை அதனால் போராட்டம் தொடரும்' என மற்றொரு தரப்பு மருத்துவர்கள் அறிவித்து நேற்றுவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையில், நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தனியார் மருத்துவமனைகளில் 30,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களுக்கு முதல் மாதத்திலேயே 80,000 ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறோம். ஆனால், மத்திய அரசு வழங்கும் சம்பளம் வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்க அரசு தயாராக உள்ளது. மருத்துவர்கள் போராட்டத்தினால் நோயாளிகளுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது என்பது மட்டுமே எங்கள் நோக்கம்
.

விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலைக்குள் (நேற்று) பணிகளுக்குத் திரும்ப வேண்டும். அப்படி பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்கும் பணி மாலை முதலே தொடங்கப்படும். இதுவே மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கை” எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அமைச்சரின் பேச்சுக்குப் பிறகும் போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.

``மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மக்களின் சேவையை முக்கியமாகக் கருதும் மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போதே அவசர சிகிச்சை நோயாளிகளைக் கவனித்துவந்தனர். ஆனால், தற்போது சாதாரண சிகிச்சைகளும் அவசர சிகிச்சைகளாக மாறும் அபாயம் உள்ளது.


லட்சுமி நரசிம்மன்

மேலும், புயல் காரணமாகக் காய்ச்சல் அதிகரிக்கும் நிலையும் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று வேறு வழியின்றி எங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாபஸுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவோம் என அரசு தரப்பிலிருந்து தகவல் வந்ததால் போராட்டம் கைவிடப்படுகிறது.

முதல்வர் இதில் தலையிட்டு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றக் கடிதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கடிதம் ஆகியவற்றை அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். முதல்வர் கோரிக்கையை ஏற்று மக்கள் நலன் கருதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024