Sunday, March 21, 2021

தந்தையின் இரண்டாவது திருமணத்தை மகள் எதிர்க்கலாம்' - மும்பை உயர் நீதிமன்றம்


தந்தையின் இரண்டாவது திருமணத்தை மகள் எதிர்க்கலாம்' - மும்பை உயர் நீதிமன்றம்


புகுந்த வீட்டுக்கு வரும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் முழுபொறுப்பு என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சுக்ராம் என்பவர் தன் மனைவியை வரதட்சணை விவகாரத்தில் கொலை செய்துவிட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுக்ராம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் ஜாதனா ஜாதவ் மற்றும் போர்க்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி ஜாதனா ஜாதவ், 'பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்துவிட்டால் அப்பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகிய இரண்டுக்கும் கணவனே முழுப்பொறுப்பு ஆவார்.

தன்னைத் திருமணம் செய்துகொள்பவரின் மீது முழு நம்பிக்கை வைத்துதான் தன் பெற்றோர் வீட்டைவிட்டு பெண் கணவன் வீட்டுக்கு வருகிறார். அப்படிப்பட்டவரை பாதுகாப்பது கணவனின் பொறுப்பு.

ஆனால், திருமணமாகிச் செல்லும் வீட்டில் வரதட்சணை மரணங்கள், தற்கொலைகள் போன்றவை நடக்கின்றன. இந்த வழக்கிலும் கணவன் தன் மனைவியை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்பதை உணரவில்லை. மனைவியை கொலை செய்திருக்கிறார். மேலும், இதன் மூலம் அவர்களின் குழந்தைக்கும் தாயின் அன்பு கிடைக்காமல் போய்விட்டது.

இக்கொலையை மறைக்கவும், கொலை செய்யப்பட்ட மனைவியின் வீட்டாரை சமாதானம் செய்யவும், மனைவியின் அம்மாவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் கொடுப்பதாகக் கூறி, விசாரணையை திசைதிருப்பப் பார்த்துள்ளார்' என்று கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதோடு, கீழ் கோர்ட் கொடுத்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை தீர்ப்பை உறுதிசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தந்தையின் இரண்டாவது திருமணத்தை மகள் எதிர்க்க முடியும்!

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு, நீதிபதிகள் தனுகா மற்றும் ஜி.பிஜித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. 66 வயதாகும் வத்சலா என்ற பெண், தன் தந்தையின் இரண்டாவது திருமணத்தை எதிர்த்து மனு செய்ய தனக்கு உரிமை இல்லை என்று குடும்ப நீதிமன்றம் தெரிவித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனு அது. அம்மனுவில், 'என் தந்தை 2003-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2016-ம் ஆண்டு என் தந்தை இறந்துவிட்டார். அவரின் இரண்டாவது மனைவி, தனது முதல் திருமண கணவரை முறைப்படி விவாகரத்து செய்யாமல் என் தந்தையைத் திருமணம் செய்து இருக்கிறார். எனவே, இத்திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கேட்டு இருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், 'மனுதாரர் தந்தையின் இரண்டாவது மனைவி, முறைப்படி தன் முதல் திருமணத்தை விவாகரத்து மூலம் முறித்துக்கொள்ளாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அது குறித்து தெரிய வந்தவுடன் உடனே கோர்ட்டை அணுகி இருக்கிறார் மனுதாரர். இதுபோன்ற சூழ்நிலையில் தந்தை இறந்திருப்பதால், அவரின் மகள் தந்தையின் இரண்டாவது திருமணத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. எனவே, மனுதாரரின் மனுவை புதிதாக பரிசீலிக்கும்படி குடும்ப நல நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது' என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024