ரேஷன் கடையில் பொருள் வாங்கவிரல் ரேகை பதிவு கட்டாயம்
03.03.2018
ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் முதல், இத்திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; மற்ற பொருட்கள், குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. இதனால், கடை ஊழியர்கள், விற்பனை செய்தது போல, பதிவேட்டில் பதிந்து, முறைகேடாக, வெளிச்சந்தையில் விற்கின்றனர்.
இந்த விபரம், கார்டுதாரர்களுக்கு தெரிவதில்லை. இதனால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டு, பொருட்கள் விற்பனை, இருப்பு என, அனைத்து விபரங்களும், அதில் பதிவு செய்யப்படுகிறது. விற்பனை விபரம், கார்டுதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள், பொருட்கள் வாங்காமல், எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே புகார் அளிக்கலாம்.
இருப்பினும், பாதிக்கப்படுவோர், புகார் அளிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ரேஷன் முறைகேட்டை கட்டுப்படுத்த முடியாமல், அதிகாரிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், மத்திய அரசு, பயோமெட்ரிக் எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை அறிவுறுத்தியது.
இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவி வழங்குவதற்கான அறிவிப்பை, 2017ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். ஆனால், அத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்காமல், நிதித்துறை இழுத்தடித்தது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் கருவி பொருத்தி, அதன் வாயிலாக, பொருட்கள் வழங்குவதற்கு, தமிழக அரசு, தற்போது, அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 34 கோடி ரூபாய் செலவில், பயோமெட்ரிக் கருவிகள் வாங்குவதற்காக, விரைவில், இணையதள, 'டெண்டர்' கோரப்பட உள்ளது. டெண்டர் பணிகளை கண்காணிக்க, ஓரிரு தினங்களில், தனி குழு ஏற்படுத்தப்படும்.
ஏற்கனவே, ஸ்மார்ட் கார்டுக்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனால், பயோமெட்ரிக் கருவி வந்த பின், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள், கடைக்கு வந்தால், அவர்களிடம், விரல் ரேகை பதிவு செய்யப்படும். கருவியில், விரல் ரேகை விபரம், ஏற்கனவே உள்ள ஆதார் கைரேகையுடன் ஒத்து போனால், பொருட்கள் வழங்கப்படும்.
எனவே, இனி, ரேஷன் கார்டு எடுத்த வர வேண்டிய அவசியம் இல்லை. இதனால், தகுதி உடையவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ஏப்., மே மாதங்களில், இதுதொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பணிகளை முடித்து, ஜூன் முதல், இத்திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மானியம் ரூ.5,500 கோடி! :
தமிழக அரசு, ரேஷன் பொருட்களுக்காக, உணவு மானியமாக, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அரிசி கார்டு வைத்திருப்பவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க விருப்பம் இல்லை எனில், பொது வினியோக திட்ட இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' என்ற மொபைல் போன் செயலியில், அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதி உள்ளது. இருப்பினும், பொருட்கள் வாங்காத, வசதி படைத்தவர்கள், தங்கள் வீட்டு வேலையாட்களை வாங்கி கொள்ள கூறுகின்றனர். பயோமெட்ரிக் வந்தால், இனி, அவ்வாறு செய்ய முடியாது என்பதால், ரேஷன் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்படும்.
No comments:
Post a Comment