Friday, March 9, 2018

இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறேன்!  கமல் பகிரங்க அழைப்பு: ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு

09.03.2018
சென்னை, : ''மக்கள் நீதி மையம், இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது,'' என, அதன் தலைவரும், நடிகருமான கமல் கூறினார்.





சமீபத்தில், கல்லுாரி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 'மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்; அரசியலை பற்றி அறிந்திருந்தால் போதும். என்னால், எம்.ஜி.ஆர்., ஆக முடியாது; ஆனால், அவரது ஆட்சியை, என்னால் கொடுக்க முடியும்' என, மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அதற்கு நேர்மாறாக, நேற்று சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள, எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற, கமல் பேசினார்.

சக்தி

அவர் பேசியதாவது: இங்குள்ள மாணவர்களை போல, கல்லுாரி வாழ்க்கை எனக்கு அமையவில்லை.

மறைந்த அப்துல் கலாம், மாணவர்களை நோக்கி கேட்ட கேள்வியை, நானும்கேட்கிறேன்.

மாணவர்கள், அரசியல் சார்பு, விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். அரசியலை, மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதுவே, உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கும்.

உங்களோடு ஒரு மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். மக்கள் நீதி மையம், உங்களைப் போன்ற இளைஞர்களை, அரசியலுக்கு வரவேற்கிறது. நான் ஒரு கலைஞன்; எனக்கு அரசியல் வேண்டாம் என, நினைத்திருந்தேன். ஆனால், அரசியல்வாதிகள், அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. வேறு யார் சரியாக செய்வர் என, தேடிக் கொண்டு இருப்பதை விட, நாமேகளத்தில் இறங்கலாம் என, முடிவு எடுத்தேன்.

இந்த ஒரு நாளை மட்டும், மகளிர் தினமாக கொண்டாடக் கூடாது. 365 நாட்களும் மகளிர் தினம் தான். பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் தான் மாற்றத்தை உருவாக்கும். பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்கள் இல்லாமல், நாடு முன்னேறாது. உங்கள் பின்னால் நிற்க, நான் தயாராக இருக்கிறேன்.

உறுதி

நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்கு சேவை செய்து கொண்டே, என் உயிர் போக வேண்டும். தமிழகத்தில், நீங்கள் வாழ்வதை, நான் பார்ப்பேன் என, உறுதி அளிக்கிறேன்.இங்குள்ளவர்கள், எவரையும் பின்தொடர்பவர்களாக, நான் பார்க்கவில்லை. எல்லாரையும் நாளைய தலைவர்களாகவே பார்க்கிறேன். அதனால், மக்களாட்சி தான் வேண்டும்.

மக்களாட்சி மலர வேண்டும் என்றால், நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும். பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். மாணவர்கள், அரசியலை தீவிரமாக கவனிக்க வேண்டும்; தவறாமல் ஓட்டு போட வேண்டும்.

இப்போது, நீங்கள் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில், அனைவரும் அரசியலில் இருப்பீர்கள்.இந்த கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் இருவரை, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில், நான் சந்தித்தேன். அங்கிருந்த, 17 பேர், தமிழகத்திற்காக, என்னுடைய நம்பிக்கைக்காக, திட்ட வரைவு உருவாக்குவதில் உதவியிருக்கின்றனர்.

மையம் என்பது நடுவில் நிற்பது அல்ல; அது, தராசு முள் போன்றது. நடுவில் இருந்து, இரண்டையும் கவனித்து, நேர்மையான முடிவு எடுப்பது. மையத்தில் இருந்து பார்த்தால் தான், அதன் பொறுப்பு உங்களுக்கு புரியும். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024