Saturday, March 10, 2018

கருணை கொலைக்கு அனுமதி  சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பு

10.03.2018

புதுடில்லி : தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளி கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதித்து, உச்ச நீதிமன்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.




கடந்த, 2011ல், அருணா ஷன்பக் என்பவர் தொடர்பான வழக்கில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, சுய நினைவிழந்து, உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை, அந்த கருவிகளை நீக்கி, அவர்களை உயிரிழக்கச் செய்வது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இதையடுத்து, 'காமன் காஸ்' எனப்படும், அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், 'உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை, அந்த கருவிகளை நீக்கி, உயிர் பிரியச் செய்யும் வகையில், மருத்துவக் குழு முடிவெடுக்கும் முன், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து, 2016, ஜனவரியில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கருணைக் கொலை செய்யும்போது, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்' என, சட்டக்கமிஷனின், 241வது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கருணைக் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. முக்கியத்துவம் வாய்ந்த, அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளிகளை, அவர் களுக்கு பொருத்தப் பட்டுள்ள, உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம்.

வாழ்வதற்கு விருப்பம் இல்லாத ஒரு மனிதர், செயலற்ற, முடங்கிய நிலையில் துன்புற வேண்டிய அவசியம் இல்லை. தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி, தான் இறக்க விரும்புவதை முன்கூட்டியே உயிலாக எழுதுவதும், அவர்களை கருணைக் கொலை செய்வதும், அனுமதிக்கப்படுகிறது.

அத்தகைய நோயாளி யை கருணைக் கொலை செய்யலாம் என்பதற்கான சம்மதத்தை, அவர்களின் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்கள் அளிக்கலாம்.

அதை, தகுதிவாய்ந்த மருத்துக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்படும் வரை, உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு வரையறைகள், அமலில் இருக்கும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

''மீள முடியாத நோயாளிகளை கருணை கொலை செய்யலாம் என்பதை ஏற்க முடியாது. மக்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும். கருணை கொலை செய்வதை கண்காணிக்க, அரசு, குழு அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பில் உள்ளதா என தெரியவில்லை. விதிமீறல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த உத்தரவு, பண்பட்ட சமுதாயத்திற்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர, நம் சமுதாயத்திற்கு ஏற்புடையதாக இருக்காது''
-டாக்டர் ராமலிங்கம்,பொது நல மருத்துவ நிபுணர்

''தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எந்த நிலையில் நோயாளி இருக்கும்போது, யாருடைய அனுமதி பெற்று, கருணை கொலை செய்ய வேண்டும் போன்றவை குறித்து, தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்த பின் தான் கூற முடியும்''

-டாக்டர் செந்தில்,தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர்.


அருணா ஷன்பக் யார்? மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள, கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில், நர்சாக பணியாற்றி வந்தவர் அருணா ஷன்பக். பாகிஸ்தானில், 1948ல், பிறந்த இவர், மருத்துவமனையில் சிறந்த நர்ஸ் என, பெயர் எடுத்திருந்தார். 1973ம் ஆண்டு, நவ., 27ம் தேதியன்று இரவு, பணி முடிந்து, மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள அறையில், அருணா, தன் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மருத்துவமனையின் துப்புரவு ஊழியர், அருணாவை பலாத்காரம் செய்ய முயற்சித்தான். அதிர்ச்சியடைந்த அருணா, அவனை எதிர்த்து போராடினார். நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கி, அவரை பலாத்காரம் செய்தான். இதில், அருணாவின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. கோமா நிலைக்குச் சென்ற அருணாவை, மருத்துவமனை ஊழியர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர். கோமாவிலேயே, 42 ஆண்டுகள் போராடி வந்த அருணாவின் நிலையை கூறி, அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும்படி, பத்திரிகையாளர், பிங்கி விரானி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அருணாவை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி, மூன்று பேர் அடங்கிய டாக்டர் குழுவை நியமித்தது. அருணாவை பரிசோதித்த குழுவினர், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறி, 'அவரை கருணை கொலை செய்ய தேவையில்லை' என, கூறிவிட்டனர். ஆனால், அதன்பின், சில மாதங்களில், 2015ல், அருணா இறந்து விட்டார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...