Thursday, March 22, 2018

வேலை வரும் வேளை 12: தாதியரை வரவேற்கும் அயல்நாடுகள்!

Published : 20 Mar 2018 11:06 IST

இரா. நடராஜன்



நான் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு அதற்குரிய வேலை கிடைக்காததால் ஜவுளித் துறையில் மூன்று வருடங்களாக வேலைபார்த்துவருகிறேன். இதே துறையில் நீடிக்க விருப்பமாக உள்ளது. ஆனால், எனக்கு நிறையப் பொறுப்புகள் இருப்பதால் சொந்தமாகத் தொழில் செய்யலாமா என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

சிவா, காங்கேயம்.

மின்னணுத் துறையில் பி.இ. படித்திருந்தாலும் ஜவுளித் துறையில் வேலைசெய்வது பிடித்திருப்பதாகச் சொல்கிறீர்கள். நிறையப் பொறுப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறீர்கள். எனவே, தற்போது வேலை பார்க்கும் துறையிலேயே தனித்திறனை வளர்த்துக்கொண்டு முன்னேறுவது புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும். அதற்கு முதற்கட்டமாக வார இறுதியில் படிக்கும்விதமாகச் சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் வழங்கும் எக்ஸ்சிகியூடிவ் எம்.பி.ஏ படிப்பை மேற்கொள்ளலாம். இதே துறையில் உயர்ந்த நிலையை அடைந்து போதிய அனுபவமும் பணமும் சேர்த்த பிறகு புதிய தொழில் தொடங்க முயலுங்கள்.

எம்.எஸ்சி. ஐ.டி. படித்துவிட்டு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலைசெய்துவருகிறேன். புதுச்சேரியில் எல்.எல்.பி. படிக்க இடம் கிடைத்தது. ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தொடர முடியவில்லை. என்ன செய்யலாம்?

சுரேஷ் ராமதாஸ், புதுச்சேரி.

சட்டம் படிக்க விரும்பும் நீங்கள் அதற்கான கால அவகாசத்தையும் உங்களுடைய வயதையும் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது. அதற்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயின்று தொழில் திறனை மேம்படுத்திக்கொண்டு அத்துறையில் வளரலாம். இப்படிச் செய்தால் உங்களுடைய பொருளாதாரச் சூழலுக்குப் பங்கம் வராது.


பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு ஓராண்டுக்கும் மேலாகத் தாதியாகப் பணியாற்றி வருகிறேன். ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வேலை செய்ய விருப்பம். இதற்கு எங்கு ஏஜென்சி உள்ளது, எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற தகவல்களை அளிக்க முடியுமா?

பெரியசாமி, சேலம்.

அயல்நாடுகளில் தாதிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு நிச்சயம் ஆங்கிலத் திறன் அத்தியாவசியம். தமிழக அரசின் ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்’ என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சென்னை கிண்டியில் செயல்பட்டுவருகிறது. அங்கு உங்களுடைய தகுதியைப் பதிவுசெய்யலாம்.

அவர்கள் அயல் நாடுகளில் அறிவிக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு நபர்களைத் தெரிவுசெய்து முறைப்படி அனுப்புகிறார்கள். இது தவிர அயல்நாடுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன.


கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலைசெய்ய வேண்டுமானால் டோஃபெல் (TOEFL) என்ற ஆங்கிலத் தகுதி தேர்வில் உயர் மதிப்பெண் பெற வேண்டும். பின்னர், CGFNS என்ற செவிலியருக்கான தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் கைநிறையச் சம்பளத்துடன் நல்ல பணியை உடனடியாகப் பெறலாம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஐ.இ.எல்.டி.ஸ் (IELTS) என்ற ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான பயிற்சியை சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்குகிறது.

‘வேலை வரும் வேளை’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024