Thursday, March 22, 2018

மாணவர் மனம் நலமா? 13: சவுகரியமான வட்டத்திலிருந்து வெளியேறுங்கள்!

Published : 20 Mar 2018 11:05 IST

டாக்டர் டி.வி. அசோகன்

THE HINDU TAMIL




சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு அங்கேயே மேற்படிப்பை மேற்கொள்ள விருப்பம். பிளஸ் டூவில் ஆங்கிலத்தில் 193 மதிப்பெண்கள் பெற்றதால் சென்னை அல்லது கோயம்புத்தூர் அல்லது திருச்சி சென்று அங்கு பி.ஏ.ஆங்கிலம் படிக்கும்படி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள். எனக்கோ என் ஊரிலேயே படிக்கத்தான் ஆசை. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. பெருமைக்காக நகரத்துக்குச் சென்று படிக்கச் சொல்வது சரிதானா?

சகாதேவன், தருமபுரி மாவட்டம்.

சமூக மேம்பாட்டுக்குக் கல்வி வழிகோலும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதில் கல்வி கற்கும் சூழலுக்கும் முக்கிய இடம் உள்ளது. கிராமத்திலிருந்து நகரத்துக்கு மேற்படிப்பு படிக்க வரும்போது, நகரத்துக்கே உரித்தான பன்முக கலாச்சாரம் உங்களுக்கு அறிமுகமாகும்.

சரியான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும்பட்சத்தில் பெருநகரத்தில் உங்களுக்குத் தரமான கல்வி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதற்கு மேற்படியாகச் சமூக ஊடகங்கள், புதிய நண்பர்கள் குழு போன்றவற்றின் மூலமாகக் கிடைக்கும் செய்திகளும் அனுபவங்களும் நிச்சயமாகக் கிராமப்புறச் சூழ்நிலையிலிருந்து வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இணையம், கணினி, கைபேசி மூலமாகச் செய்திகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் என்பது உண்மைதான். ஆனாலும், நகரத்தில் கல்வி கற்பது நேரடியான அனுபவம். படித்தவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் சற்று அதிகமாக இருப்பது கூடுதல் அனுகூலம்.

கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு வறுமை பெரும் இடையூறாக இருக்கிறது. கிராமப்புறக் கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் அத்திபூத்தாற்போலத்தான் தங்களைப் புதுப்பித்துக்கொள்கின்றன. விதிவிலக்குகளைத் தவிர, கிராமப்புறங்களில் ஆங்கிலத்தில் உரையாடுவோர் எண்ணிக்கை குறைந்தேதான் இருக்கிறது. நகர்ப்புறத்தில் ஆங்கிலத்தில் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம். நகரத்தில் வகுப்புத் தோழர்களும் ஆங்கிலத்தில் பேசுவதால், அம்மொழியை எளிதில் கற்கலாம்.

வாய்ப்பு கிடைக்கும்போது, பெற்றோர் சம்மதிக்கும்போது, பொருளாதாரச் சுமை இல்லாதபோது, நீங்கள் பெருநகரத்துக்குச் சென்று மேற்படிப்பை மேற்கொள்வது நல்ல யோசனை . இது குறித்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம்.

“கற்கை நன்றே கற்கை நன்றே,

பிச்சை புகினும் கற்கை நன்றே”

- என்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: நல்ல தரமான கல்வி பெற, யாரிடமாவது கெஞ்சிக் கூத்தாடியாவது, முயல வேண்டும். என்னைக் கேட்டால் உங்களுடைய பெற்றோரைப் போலவே அனைவரும் தங்களுடைய குழந்தைகள் பெருநகரங்களுக்குச் சென்று படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

முக்கியமாகப் புதிய இடத்துக்குச் செல்வது என்பது உங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கான அற்புத வாய்ப்பு. Comfort zone, என்று நாம் நினைக்கும் சவுகரியமான வட்டத்திலிருந்து அவ்வப்போது நம்மை விடுவித்துக்கொள்வது நம்முடைய ஆளுமை பரிணமிக்க உதவும். நாமே புடம்போடச் சவாலான சூழல்களில் நம்மைப் புகுத்திப் பார்க்கப் பழக வேண்டும். புதிய இடங்களுக்குப் பயணிப்பது என்பது வெளி உலகைக் குறித்த அறிவை மட்டுமல்ல மனதளவிலும் உங்களை மேம்படுத்தும். உற்சாகத்தோடு பெருநகரத்துக்குப் புறப்படுங்கள்!

‘மாணவர் மனம் நலமா?’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...