Sunday, March 18, 2018

தூக்கமின்மையை போக்கும் மல்லிகை

2018-03-13@ 14:25:58

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், அன்றாடம் ஒரு மூலிகை அன்றாடம் ஒரு மருத்துவம் என மிகவும் எளிய பயனுள்ள மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் மல்லிகையின் பயன்கள் குறித்து பார்க்கலாம். மல்லிகை மணம் நிறைந்தது. தலையில் சூடத்தக்கது என்பது மட்டும் இன்றி அதன் மலர், இலை என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மல்லிகை மலர்கள் பல வகைப்பட்டாலும் ஏறத்தாழ அனைத்து பூக்களிலும் குணங்கள் ஒன்றாகவே உள்ளது. வாசம் தரும் மல்லிகை பூக்களை பெண்கள் தலையில் வைத்துக்கொண்டாலோ அல்லது தலையணையின் அடியில் வைத்தாலோ மன இறுக்கம் விலகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளை பற்றி இனி அறிந்து கொள்வோம். மல்லிகை பூக்களை பயன்படுத்தி தூக்கமின்மையை போக்கும் மருந்து செய்யலாம். தேவையான பொருட்கள்: மல்லிகை பூ, பனங்கற்கண்டு பொடி.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது மல்லிகை பூவை போட்டு அதன் மீது பொடித்து வைத்துள்ள பனங்கற்கண்டு பொடியை தூவவும். இதே முறையில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக போட்டு அந்த பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியால் மூடி இறுக கட்டி அதை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் வைத்து வர அது குல்கந்து பதத்திற்கு வரும். இதனை நன்கு கிளறி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு படுக்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்ைன தீரும்.

இதனை சிரப்பாகவும் குடித்து வரலாம். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டை தவிர்த்து வெறும் மல்லிகையை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவரலாம். மல்லிகை இலையை பயன்படுத்தி பொடுகை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மல்லிகை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: தேவையான மல்லிகை இலையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு பங்கு விழுதுக்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் இந்த விழுதை போட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு கிளறி கொதிக்க விடவும். நல்ல தைல பதம் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் இதனை தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து சீகக்காய் போட்டு குளித்துவர பொடுகு பிரச்னை நீங்கும். படை, சொரி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக  இந்த எண்ணெய் அமைகிறது.

காது வலி, சீழ் வடிதல், பூஞ்சை காளான் பிரச்னைகளுக்கும் இந்த எண்ணெயில் 2 சொட்டு விட எளிய தீர்வு கிடைக்கும். மேலும் மல்லிகை இலையை விளக்கெண்ணெயில் இட்டு வதக்கி பற்றாக போட்டு வர வீக்கம் மற்றும் வலி கட்டுப்படும். இளம் தாய்மார்களுக்கு பால் கட்டும் பிரச்னைக்கு மல்லிகை பூவை மார்பில் வைத்து இரவு முழுவதும் கட்டினால் பால்கட்டு கரையும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ள இயற்கையின் கொடையான மல்லிகையை பயன்படுத்தி பயன்பெறுவோம்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...