குரல்கள்-லிவிங் டு கெதர் யதார்த்தமாகி வருகிறதா?
2018-03-15@ 15:38:50
நன்றி குங்குமம் தோழி
ஒருவர் மீது ஒருவர் விருப்பும், சரியான புரிதலும் கொண்டு ஓர் உறவுக்குச் செல்ல விரும்பினால் எவர் அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்பதே லிவிங் டுகெதர் உறவு முறையாகும். காதலையே பெரும் கலாச்சார சீரழிவாகக் கருதும் இந்த பிற்போக்கான சமூகம், லிவிங் டுகெதர் உறவு முறையை பெரும் கசப்புடனேயே அணுகுகிறது. ஒவ்வொரு மதம்/இனம்/சாதி ஆகியவற்றுக்கான முறைப்படி திருமணம் செய்து வாழ்வதையே நம் கலாச்சாரமாகக் கருதுபவர்கள் இந்த உறவு முறையை எதிர்க்கவே செய்கிறார்கள். கலாச்சார மீறல் என்பதையெல்லாம் கடந்து ஆண் - பெண் உளவியல் அடிப்படையில் இந்த உறவை எப்படிப் பார்க்கலாம்? இது வெற்றிகரமான உறவாக நீடிப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்று சில பெண்களிடம் கேட்டேன்...
ஜெயராணி, எழுத்தாளர்
இந்தியா போன்ற கலாச்சார மதிப்பீடுகள் நிறைந்த சமூகத்தில் திருமண உறவே நிரந்தரம் இல்லாத உறவாகத்தான் இருக்கிறது. லிவிங் டுகெதர் உறவு முறை திருமண முறையின் தோல்வியையே சுட்டுகிறது. இரண்டு சுதந்திரமான மனிதர்கள் ஒரு குடையின் கீழ் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவர் மீது மற்றொருவர் புரிந்துணர்வோடும், சமத்துவத்தோடும் அந்த வாழ்வை எடுத்துச் செல்வதுதான் லிவிங் டுகெதர் உறவு முறை. ஆனால் இந்த உறவு முறைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான புரிதலுடன் அந்த உறவை மேற்கொள்ளவதில்லை.
அவர்களின் சௌகரியத்துக்காக தொடரப்படும் நிலையில் இந்த உறவில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கவே செய்யும். லிவிங் டுகெதர் மட்டுமல்ல திருமண உறவிலும் அப்படித்தான். இந்த உறவின் மீதான ஆழ்ந்த புரிதல் என்பது பிரிந்து செல்வதும் அவர்களின் உரிமை சார்ந்ததே என்பதை புரிந்து கொண்டு மரியாதையுடன் அதை ஏற்றுக் கொள்வது. அது போல ஒவ்வொன்றிலும் சம உரிமை கொடுத்து நடத்துவது. ஆண் - பெண் உறவு குறித்த சரியான புரிதலோடு மரியாதைக்குரிய உறவுக்குள் செல்கிறவர்கள் வெற்றிகரமாக வாழ்வார்கள்.
இந்திய ஆண்களுக்கு உறவு முறை குறித்த சரியான புரிதலே இல்லை. லிவிங் உறவுக்குள் இருந்தாலும் பெண் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது சமத்துவமான உறவுக்கு அடிகோலாது. இந்திய சூழலில் பாலியல் சுதந்திரம் கிடையாது. எதிர்பாலினருடன் பழகுவதற்கான வாய்ப்பு கூட மறுக்கப்படும் நிலைதான் புரிதலற்ற உறவு முறைக்குள் தள்ளுகிறது. லிவிங் உறவோ, திருமண உறவோ எதுவாக இருந்தாலும் ஆண் - பெண் இருவரும் மனமொத்து, சமத்துவத்தை நிலைநாட்டி மேற்கொள்ளப்படும் நிலையில்தான் அது வெற்றிகரமான உறவாக இருக்கும்.
திலகவதி, தொழில் முனைவோர்
ஆண் - பெண் இருவரும் சேர்ந்து வாழப்போகிறார்கள் என்பதனை ஊருக்கு அறிவிக்கும் நிகழ்வுதான் திருமணம். ஆனால் எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் வாழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இருவருக்கும் ஒத்துப் போகும் நிலையில் தாராளமாக அவர்கள் வாழலாம். அதே போல் இருவருக்கும் அந்த உறவு உவப்பானதாக இல்லையென்றால் பிரிந்து செல்லலாம். ஊரைக்கூட்டி தாலி கட்டி திருமணம் புரிவதாலோ, பதிவு செய்வதாலோ மட்டும் யாராலும் இணைந்து வாழ முடியாது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்துவது மட்டுமே அந்த உறவைத் தக்க வைக்கும். சத்தியமங்கலம் அருகே ஒரு பழங்குடி கிராமத்தில் ஆண் - பெண் விரும்பினால் தாராளமாக தனியே விடு கட்டி வாழலாம். திருமணம் செய்ய வேண்டும் என்பதில்லை. இந்த முறை பழங்காலத்தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. மேற்கத்திய தாக்கம் என்று நினைக்கத் தேவையில்லை. லிவிங் டுகெதர் உறவில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த உறவு உண்மையான உறவாக இருக்க வேண்டும்.
வெண்பா கீதாயன், கல்லூரி மாணவி
திருமண வாழ்க்கையை விடவும் சிக்கலானது லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை. வெறும் காதலும் காமமும் மட்டுமே அங்கு பங்குகொள்வதில்லை. திருமணமானால் வருகின்ற அத்தனை பொறுப்புகளையும் திருமணம் செய்யாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்களில் காட்டுகிற மாதிரி தினமும் ஊர் சுற்றிவிட்டு இரவில் கட்டிப்பிடித்து தூங்குவது அல்லது ஒரே வீட்டில் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பது மட்டுமே லிவிங் உறவு கிடையாது. பாலியல்ரீதியான உறவு இருந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமைப்பது, துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை ஒழுங்குசெய்வது என எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயங்களிலேயே சண்டை வரத்துவங்கிவிடும்.
காதலர்களாக இருக்கும்போது காதல் மட்டுமே இருந்த உறவு லிவிங் வாழ்க்கைக்குள் செல்லும்போது புரிதல், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு தொடர்வதாக இருக்கும். மேலும் இந்த உறவில் பொருளாதாரம் முக்கியப்பங்கு வகிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் உறவு முறிவுகள் இந்த உறவில் அதிகம். திருமணம் செய்து கொள்வதை விடவும் அதீத பக்குவம் இருந்தால் மட்டுமே இந்த உறவுக்குள் செல்ல வேண்டும். இதனை கலாச்சார சீரழிவு என்று நாம் பார்க்க முடியாது. திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்தாகி, மறுமணம் செய்வதை விட இது போன்ற உறவில் ஒருவருடன் வாழ்ந்து பார்த்து பிடிக்கவில்லையெனில் நிம்மதியாக விலகுவதே நல்லது. இந்த வாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடர முடியும் என்கிற நம்பிக்கை வரும்போது திருமணத்தை நோக்கி நகரலாம்.
விபீஷிகா, ஊடகவியலாளர்
வீட்டில் பார்த்து திருமணம் நடந்தாலும் சரி, காதல் திருமணமானாலும் சரி முன் போல தற்போதைய உறவுமுறை இல்லை. திருமணம் ஆனாலும் மனதுக்கு ஒப்பவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுகின்றனர். அப்படி இருக்கும்போது தற்போதைய காலக்கட்டத்தில் லிவ்-இன் இருப்பதும் திருமணம் செய்துகொண்டு இருப்பதும் ஒன்றுதான். ஆகவே இந்த உறவு முறையை சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்க வேண்டிய தேவை இல்லை.
விஜி பழனிச்சாமி, தனியார் நிறுவன ஊழியர்
என் 25வது வயதில்தான் சென்னைக்கு வந்தேன். 16 வயதிலேயே திருமணமாகி அந்த உறவு தோல்வியில் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன். இள வயதுத் திருமணத்தில் காதல், பாலியல் உறவு என எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். உறவின் மீது நம்பிக்கை அற்று, சிதைக்கப்பட்டவளாக இருந்தேன். எனது நண்பர்கள் என்னை மறுமணம் செய்து கொள்ளும்படி சொன்னதோடு மாப்பிள்ளையும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் என் உடல் மீதும், எனது வருவாயின் மீதும்தான் குறிக்கோளாக இருந்தார்கள்.
என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் உறவாக அது இல்லை. காரணம் நாம் சிவில் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமூகம் பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் கட்டிய கணவனுடன் வாழ்ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இங்கு புனிதம் என்று பார்க்கப்படுகிற எல்லாமே பெண்களை மனதளவில் பாதிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருகிறது. ஒரு சிங்கிள் மதராக நான் என் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எல்லா குடும்பங்களைப் போலவும், குழந்தைகளின் படிப்பு, மற்ற செலவுகள் என எல்லாம் சரிசமமாகத்தான் இருக்கிறது. எனக்கு லிவிங் டுகெதர் உறவு முறையே ஏற்ற ஒன்றாக நான் கருதுகிறேன்.
லிவிங் டுகெதர் உறவு முறை என்பது குடும்ப அமைப்புக்கு எதிரானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது குடும்ப அமைப்பின் இன்னொரு வடிவம் என்றே நாம் பார்க்க வேண்டும். இது உறவுக்குள் நிலவும் இறுக்கத்தைத் தளர்த்தும். குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகள், கொலைகள் தவிர்க்கப்படும். ஆணும் பெண்ணும் தங்களின் சுய அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் சேர்ந்துவாழ இதில் மட்டுமே சாத்தியமுள்ளது. சமூகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், இது திருமண உறவைவிட சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை என்னை பொறுத்த வரை யாரையும் புண்படுத்தாத அல்லது குறிப்பாக பெண்களை உடைமையாக பார்க்காத உறவாக இருக்கிறது. இந்த உறவு முறையில் பெண்ணின் ஆளுமை எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. சரியான புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில் இருவரும் சீராக வளரமுடியும். இந்த வாழ்க்கை முறைக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை என்கிறார்கள்.
சாதியை ஒழிக்க இந்த முறை முக்கியப் பங்கு வகிக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு இந்த உறவு முறையைத்தான் பரிந்துரைக்கிறேன். பெண்ணின் உடல்ரீதியான தேவைகளை இந்த சமூகம் புரிந்து கொள்வதே இல்லை. நான் சிங்கிள் மதராக இருப்பதனால் ஆரம்ப காலக்கட்டங்களில் எனக்கு பாதுகாப்பு இல்லாமல், பல்வேறு தொல்லைகளை அனுபவித்தேன். ஆனால் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் பாதுகாப்பாகவும், தன்னைம்பிக்கை நிறைந்தவளாகவும் இருக்கிறேன்.
- கி.ச.திலீபன்
No comments:
Post a Comment