Sunday, March 18, 2018

பாடலின் பொன்வரி எனப்படும் முதலடி!

- கவிஞர் மகுடேசுவரன் 
 
ஒரு திரைப்படப்பாடல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கவேண்டும் என்றால் அது கருத்துச் செறிவோடு இருக்க வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் காண்கின்ற ஒரு சூழ்நிலையை நினைவூட்டும் தன்மையோடு அதன் கருத்துகள் அமைய வேண்டும். நடைமுறைக்கு ஒவ்வாத எந்தத் திரைப்படப் பாடலும் காலத்தில் நிலைத்து நிற்பதில்லை. காதலுணர்ச்சிக்கு எல்லார் மனங்களிலும் இடமிருக்கிறது என்பதாலேயே காதல் பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. வாழ்க்கையில் காதலுக்கு இடந்தராதவர்கூட தம் மனத்தின் ஓரத்தில் அதற்குரிய இடத்தை விட்டுவைத்திருப்பார். ஒரு காதல் பாடல் நம்முடைய நினைவுகளைப் பசுமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

புகழ்பெற்ற பாடல்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. ஒரு பாட்டுக்கு முதல் வரியாய் அமைய வேண்டியது மிக மிக வலிமையாக இருக்க வேண்டும். அந்தப் பாடலின் முழுமையான கருத்து என்னவோ அதனை அந்த முதல் வரியிலேயே சொல்ல வேண்டும். இதனைச் சிலர் மேலும் விரிவுபடுத்தி பாடலுக்குப் பல்லவி நன்றாக அமையவேண்டும் என்பார்கள். பல்லவி என்பது இரண்டு மூன்று நான்கு வரிகளால் அமையும். நான்கு வரிகள் வரைக்கும் செல்ல வேண்டியதில்லை. பாடலில் முதல் அடி சிறப்பாக அமைந்துவிட்டாலே போதும். அந்தப் பாடலின் ஒட்டுமொத்தச் சாரம் விளங்கிவிடும். பாடலுக்குள் சுவைஞர்கள் திளைக்கத் தொடங்குவர். பாட்டு தன் முதல்வரியிலிருந்தே மக்களின் எண்ணத்தில் இடம்பிடிக்கத் தொடங்கும். ஐயத்திற்கிடமின்றி அந்தப் பாடல் வெற்றி பெறும். 'ஹிட் ஆகும்' என்பது வெற்றிக்குத் திரைத்துறையினர் பயன்படுத்தும் மொழி.

'மன்மத லீலையை வென்றார் உண்டோ ?' என்று பாட்டு தொடங்குகிறது. இதுதான் பாடலின் முதல் வரி. யாப்பிலக்கணத்தில் பாடலின் முதல் வரியை 'அடி' என்பார்கள். பாடலின் முதல் வரியை எப்படித் தொடங்குவது என்பது தெரியாமல் புலவர் தவிக்கும்போது யாரேனும் ஒருவர் எதையாவது கூறிச்செல்ல அதனையே முதல் வரியாக்குவார். அதற்கு 'அடியெடுத்துக் கொடுத்தல்' என்று பெயர். ஒரு திரைப்பாடல் வெற்றி பெறவேண்டுமானால் முதல் அடியைத் தங்கவரிபோல் அமைக்கவேண்டும். அந்தப் பாடலின் உயிரை அந்த ஒற்றை அடிக்குள் பொதிக்க வேண்டும். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ ?' என்று முதல் அடி தொடங்கியதும் பாடல் எடுத்துக்கொண்ட பொருள் விளங்கிவிடுகிறது. மன்மதன் செய்யும் திருவிளையாடலை யார்தான் வெல்ல முடியும் ? பாட்டின் சாரம் முதல் அடிக்குள்ளேயே முழுமையாகக் கிடைத்துவிட்டது. இனி பாடலின் மீதப் பகுதிகள், அந்த முதல் அடி என்ன கூறிற்றோ அதை விளக்கி விரித்து அமையும். பாடலைக்கூட மறந்துவிடுவார்கள். பாடலின் முதலடியை மறக்கவே மாட்டார்கள். எத்துணை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பாடலுக்கு அடையாளமாவதும் முதலடிதான். 'அந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டைப் போடுங்க' என்றுதான் கூறுவார்கள். ஒரு பாட்டுக்கு அதன் முதலடி வகிக்கும் தலைமைப் பண்பை மறந்துவிட்டு எழுதப்பட்ட பாடல்கள் எழுந்து நிற்கவே இல்லை.

'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ?' என்னும் பாடல் முதலடி சிறப்பாக அமைந்த பாடல்களில் ஒன்று. முதலடியில் பாடலின் பொருள் திரட்டு மட்டுமன்று, படத்தின் பொருளும் அமைந்துவிட்டது. இதுதான் ஒரு பாடல் இடம்பெற வேண்டிய வலிமையான சூழல். படத்தின் முழுப்பொருளையும் ஒரு பாடலில் புகுத்தித் தருகின்ற மேதைமை. படத்தின் முழு விளக்கமாக ஒரு பாடலின் முதலடியும் அமைந்துவிட்டால் அந்தப் பாட்டு படத்தையே தூக்கி நிறுத்தும். எல்லாச் சூழ்நிலையிலும் படத்தின் விளைபொருள் அமைந்த பாட்டுச்சூழல் அமையாது. ஆனால், கட்டாயம் ஒரு பாடலேனும் அந்தச் சூழ்நிலையில் அமையும். படத்தின் இறுதிக் கட்டத்தில் அமையும் பாடலானது அந்தப் படத்தின் முழுப்பிழிவையும் கொண்டிருக்கும். தற்காலத்தில் அவ்வளவு அடர்த்தியான கதைகளைத் தேர்வதில் நம்மவர்கள் தோற்றதனால்தான் பொருளடர்த்தியுள்ள இறுதிப் பாடல்கள் அமையவில்லை.

'அன்னக்கிளி உன்னைத் தேடுதே...' என்பது முதலடி. பாடலின் முழுப்பொருளும் அதுதான். அன்னக்கிளி தனக்கு மணவாளனாக வருபவனைத் தேடுகிறாள். அவனைப் பற்றிய கனவில் மிதக்கிறாள். என்னவன் யார் என்ற தேடலில் கன்னியானவள் காத்திருக்கிறாள். அம்மனநிலையைப் பாடலின் முதலடி கூறிவிட்டது. 'சொன்னது நீதானா ?' என்பது இரண்டே சொற்களால் ஆன முதலடி. 'நீயா சொன்னாய் ?' என்று அவன் சொன்னதை நினைத்துப் பாடுகிறாள். அழுது அரற்றுகிறாள். 'நீ சொல்லலாமா ?' என்று தவிக்கிறாள். 'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ?' என்பது முதலடி. நினைவை வாட்டி வதக்கும் காதலை மறந்து தொலைய மாட்டாயா என்று மனத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. மனத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றையும் கூட்டிச் சொல்கிறது அந்தப் பாடல். 'பூங்காத்து திரும்புமா ?' என்றதும் முழுப்பாடலுக்கும் உயிர் வந்துவிடுகிறது. 'நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா...' என்னும் பாடலின் முதலடியிலேயே அந்தச் சூழல் விளக்கப்பட்டுவிடுகிறது. நீ கேட்டுவிட்டால் நான் மாட்டேன் என்றே சொல்லமாட்டேன்.... எல்லாவற்றையும் கொடுத்துவிடுவேன்... எனக்கு உயிரானவன் நீ... அனைத்தையும் தந்துவிடுவேன் என்பதில் அவளுடைய பெருங்காதல் வெளிப்படுகிறது.
ஒரு பாடல் தேறுமா தேறாதா, சிறப்பாக இருக்குமா இராதா, மனங்கவருமா கவராதா என்பதை அதன் முதலடியிலேயே அறியலாம். முதலடியே தடுமாறினால் அந்தப் பாட்டு காலத்தை மீறி நில்லாது. கண்ணதாசனும் வாலியும் பாடலின் முதலடியைச் சிறப்பாக அமைத்தவர்கள். கண்ணதாசன் அத்தகைய முதலடிகளை அமைப்பதில், அதன் வழியே பல்லவியை எடுத்துச் செல்வதில் இலக்கியப் புலமையைக் காட்டுவார்.

 'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்.. நான் வாழ யார் பாடுவார் ? என்பாடல் நான் பாடப் பலராடுவார்... இனி என்னோடு யார் ஆடுவார் ?' என்னும் பாடலில் பயின்றுள்ள சொற்களைப் பாருங்கள். எல்லாமே எளிய சொற்கள். முதலடியிலேயே பாடற்சூழ்நிலை கூறப்பட்டுவிட்டது. ஆனால், எவ்வெளிய சொற்களால் ஆக்கப்பட்டுள்ள சொற்றொடர் எளிமையானதன்று. இன்னொரு கவிஞரால் இயற்ற முடிவதுமன்று. இனிமேல் பாடலைக் கேட்கத் தொடங்கினால் அந்தப் பாடலின் முதலடியைக் கூர்ந்து கேளுங்கள்.

source: filmibeat.com
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024