Saturday, March 17, 2018

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்

2018-03-16@ 19:05:26   dinakaran



வேலூர்: ரயில்வே வழங்கும் பயண சலுகைகள் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை. இதுகுறித்து ரயில் நிலையங்களில் அறிந்து பயன்பெறலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மனநலன், பார்வை குறைவு, பேச்சு, செவித்திறன் குறைபாடுடையவர்கள், நடக்க இயலாதவர்கள் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களில் முதல், 2ம் வகுப்பு, ஏசி 3 டயர், ஏசி சேர் கட்டணத்தில் 75 சதவீதமும், முதல் ஏசி, 2 டயர் ஏசி பெட்டிகளில் 50 சதவீதமும், ராஜதானி, சதாப்தி ரயில்களில் 3 டயர் ஏசி சேர்களில் 25 சதவீதம், எம்எஸ்டி மற்றும் கியூ எஸ்டியில் 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஏசி சேரில் 75 சதவீதம், ஸ்லீப்பர் மற்றும் 3 டயர் ஏசியில் 100 சதவீதமும், முதல் ஏசி, 2 டயர் ஏசியில் 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் இதயம், கிட்னி பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பு, முதல் வகுப்பு, 3 டயர் ஏசி, ஏசி பெட்டிகளில் 75 சதவீதம், ஸ்லீப்பர் மற்றும் முதல் ஏசியில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

ரத்தம் உறையாமை, காசநோய், தொழுநோய் பாதிப்பு உடையவர்களுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு, மூன்றாம் ஏசி, ஏசி சேர்களில் 75 சதவீதம், ஆஸ்துமா, எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பில் 50 சதவீதம் என கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.மேலும், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு 25 முதல் 75 சதவீதம், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் வளாக தேர்வுக்கு செல்லும் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு 50 முதல் 100 சதவீதம், விவசாயிகள், சினிமா தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்களுக்கு வெவ்வேறு வகுப்புகளில் பயணம் செய்ய 50 முதல் 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு துணையாக ரயில்களில் பயணிக்கும் ஒருவருக்கு இச்சலுகைகள் பொருந்தும். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறைவாகவே உள்ளது. எனவே ரயில்நிலையங்களில் இதுபற்றி அறிந்து பயன் பெறலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024