Saturday, March 17, 2018

பணம் கொடுத்து ‘ஃபாலோயர்’ஸை வாங்கும் பிரபலங்கள்!

Published : 16 Mar 2018 09:56 IST

ஸ்ரீராம் சீனிவாசன் 

the hindu tamil 



‘ட்விட்ட’ரில் உங்களைப் பின்தொடர்பவர்களைப் (‘ஃபாலோயர்ஸ்’) பெறுவதற்குப் பல வழிகள் உண்டு. நீங்கள் இணையத்துக்கு வெளியிலும் பிரபலமான ஆள் என்றால், ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கி, நீங்களும் ட்விட்டரில் இணைந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் போதும். நீங்கள் பிரபலமானவரல்ல என்றால், இருக்கவே இருக்கிறது பழைய பாணி வழிமுறை. உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் தொடர்பாகத் தொடர்ந்து பதிவுகளை எழுதி, ட்விட்டரில் உங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இன்னொரு வழியும் உண்டு. ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப் பதுபோல், பின்தொடர்பவர்களை உருவாக் கும் நிறுவனத்துக்குப் பணம் கொடுத்து, அதை நிறைவேற்றிக்கொள்ளலாம். போலி யான கணக்குகளில் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் உங்களுக்குக் கிடைப்பார்கள். விஷயம் எளிதானதுதான். ஆனால், அது மோசடி!

சமூகத்தில் தாக்கம் செலுத்துபவர்கள் என்று கருதப்படும் பல அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இயல்பாகவே பின்தொடர்பவர்கள் இருப்பார்கள் என்றாலும், மேலே சொன்ன வழிமுறையைப் பயன்படுத்தித் தான் ஏகப்பட்ட ஃபாலோயர்’ஸை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று தெரிகிறது.

‘தி ஃபாலோயர் ஃபேக்டரி’ எனும் அந்தக் கட்டுரையின் தலைப்பு சொல்வதுபோலவே, ‘டெவுமி’ எனும் ஒரு நிறுவனம் தனது பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இதுவரை மொத்தம் 20 கோடி ஃபாலோயர்ஸை வழங்கியிருக்கிறது. அந்நிறுவனம் உரு வாக்கியிருக்கும் 35 லட்சம் போலிக் கணக்கு களிலிருந்துதான் இத்தனை ஃபாலோயர்ஸை வழங்கியிருக்கிறது. இப்படி ஃபாலோயர்ஸ் விற்பனையைச் செய்வது நிச்சயம் இந்த ஒரு நிறுவனம் மட்டுமாக இருக்க முடியாது.

இது, தன்னை மிகப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்வதற்காக எதையும் செய்ய நினைக்கும் மனிதரின் ஆசைதான் அல்லவா! வழக்கம்போலவே, இதைச் சாத்தியமாக்குகிறது தொழில்நுட்பம். சுருக்கமாகச் சொன்னால், தாக்கம் செலுத்தக்கூடிய விஷயம் ஒன்றைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள ஒருவர் விரும்பினால் இப்படித்தான் நடக்கும்.

சிறிய அளவிலானது என்றாலும், ட்விட்டரின் தாக்கம் மிகப் பெரியது. வெறும் 330 மில்லியன் பயனாளர்கள் கொண்ட ட்விட்டர், ஏழு பில்லியன் மக்கள்தொகை கொண்ட உலகில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது.

பெரிய அளவில் புதிய செய்திகளை வெளியிடும் தளமாக இருக்கும் ட்விட்டரில், செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்திகளைப் பதிவேற்றுகின்றன. எனவே, ட்விட்டரில் என்ன நிகழ்ந்தாலும் அது உலகெங்கும் பிரபலமாகிவிடுகிறது.

ட்விட்டர் பெரிய அளவில் பேசப்படும் சமூக வலைதளம்தான் என்றாலும், முதன் முதலில் காலாண்டு லாபம் மிகச் சமீபத்தில் தான் அந்நிறுவனத்துக்குக் கிடைத்தது. செலவைக் குறைக்கும் நடவடிக்கைதான் இந்த லாபத்துக்குக் காரணம் என்று கூறும் ஆய்வாளர்கள், ட்விட்டர் போதுமான பயனாளர்களைச் சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். தனது பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழலில், போலிப் பயனாளர்களைத் தேடித் தேடிக் களைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது ட்விட்டர்.

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஃபேஸ்புக், கூகுள் போலவே ட்விட்டரும் தனது பயனாளர்கள் குறித்த விவரங்களை ஆராய்ந்துவருகிறது. சந்தேகத்துக்குரிய பயனாளர்களை நீக்கிவருகிறது. எனினும், செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

ட்விட்டர் தொடங்கப்பட்டு 11 ஆண்டு களுக்கும் மேலாகிறது. இந்தக் காலகட்டத்தில், வெறுமனே நிலைத்தகவலைப் பதிவிடும் தளம் எனும் நிலையிலிருந்து, சுய விளம்பரச் சாளரமாகியிருக்கிறது; அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றவர்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தளம் எனும் நிலையிலிருந்து, அதிகாரவர்க்கத்தினர் விரும்பும் ஒரு தளமாகியிருக்கிறது. தாக்கம் செலுத்தும் திறன்தான் ட்விட்டரின் மிகப் பெரிய பலம்.

நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினைகள் அந்தப் பலத்தைச் சிதைப்பது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை ட்விட்டரும் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறது!

தமிழில்:

வெ.சந்திரமோகன்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024