Tuesday, March 13, 2018

பயங்கரம்!நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி 50 பேர் பலி
தரையிறங்கும் போது மோதி தீப்பற்றி எரிந்தது


13.03.2018

தாகா : அண்டை நாடான, வங்க தேசத்தில், தாகா நகரிலிருந்து, நேபாளத்தின், காத்மாண்டு நகருக்கு, 71 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில், 50 பேர் பலியானதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.




ஆசிய நாடான, வங்கதேச தலைநகர், தாகாவில் இருந்து, நேபாளத்தின் தலைநகர், காத்மாண்டுக்கு, நேற்று, 67 பயணியருடன், 'யு.எஸ்., - பங்ளா' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில், பைலட் உட்பட, விமான நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் இருந்தனர்.

இந்த விமானம், காத்மண்டில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, எதிர்பாராதவிதமாக தரையில் மோதி விபத்துக்கு உள்ளானது.

ஒன்பது பேர்

இதில்,50 பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து,41 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமானம் தரையிறங்கும் போது, தரையில் மோதி, அதே வேகத்தில் ஓடுபாதையிலிருந்து விலகி, அருகில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் வண்டிகளும், தீயணைப்பு வாகனங்களும், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தன.

பலி அதிகரிக்கும்

விபத்தில் சிக்கி இறந்த,41 பேரின் உடல்கள், கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில், ஒன்பது பேர் இறந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.விமான பயணியரில், 27 பேர் பெண்களும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்;மற்றவர்கள், ஆண்கள். பயணியரில், 33 பேர், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேபாளத்தின், சிவில் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர், சஞ்சீவ் கவுதம் கூறியதாவது:விபத்துக்கு உள்ளான விமானம், விமான நிலையத்தின், தெற்கு பகுதியில் உள்ள ஓடுபாதையில் இறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், வடக்கு பகுதியில் அமைந்த ஓடுபாதையில், அந்த விமானம் தரையிறங்கியது.

இறங்கும் போதே, ஸ்திரமின்றி, தள்ளாட்டத்துடன் இறங்கியதை பார்க்க முடிந்தது. தொழில்நுட்பக் கோளாறால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், விபத்துக்கான காரணம் பற்றிய ஆய்வு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நேபாளத்தில் முந்தைய விபத்துகள்

● ஆக., 22, 2002: நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில் இருந்து, பொக்காரா விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது; இதில், 18 பேர் இறந்தனர்
● ஜூன், 21, 2006: ஜும்லா விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஒன்பது பேர் இறந்தனர்
● அக்., 8, 2008: வடக்கு நேபாளத்தின் லுக்லா மாவட்டத்தில், சுற்றுலா பயணியரின் சிறிய ரக விமானம், மோசமான வானிலையால் விழுந்து நெறுங்கியது; இதில், 18 பேர் பலியாயினர்
● செப்., 25, 2011: எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலி

● மே, 14, 2012: வடக்கு நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில், தரையிரங்கிய சுற்றுலா விமானம் விபத்தானதில் 14 பேர் இறந்தனர்
● பிப்., 24, 2016: மேற்கு காத்மாண்டில் ஏற்பட்ட விமான விபத்தில், 23 பேர் பலி.


துருக்கி விமான விபத்து 10 பெண்கள் பலி

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ஷார்ஜாவில் இருந்து, மத்திய கிழக்கு நாடான, துருக்கியில் உள்ள, இஸ்தான்புல் நோக்கி, தனியார் விமானம், நேற்று பறந்து கொண்டிருந்தது. இதில், துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள், தன் தோழியர் ஏழு பேருடன் பயணித்தார். விமானத்தில், இரு பெண் பைலட்கள் மற்றும் ஓர் ஊழியர் இருந்தனர்.ஈரானின், ஜாக்ரோ மலைப் பகுதியை கடக்கும் போது, விமானம் விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்த, 11 பேரும் உயிரிழந்தனர். அதில், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஹெலிகாப்டர் விபத்து

அமெரிக்காவில் உள்ள, நியூயார்க் நகரில், ஹெலிகாப்டர் பயன்பாடு மிக அதிகம். சுற்றுலா பயணியர், தொழிலதிபர்கள், போலீஸ், ஆம்புலன்ஸ், போக்குவரத்து நிலவரம் குறித்த செய்திகள் வழங்கும் நிருபர்கள் என, பலரும், ஹெலிகாப்டர் பயணத்தைத் தான் பயன்படுத்துவர். இந்நிலையில், புகைப்படங்கள் எடுப்பதற்காக, சிலர், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர். இவர்கள், நியூயார்க் நகரின் மேலே பறந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஏரிக்கு அருகே, மிக தாழ்வாக பறந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. தண்ணீருக்குள், அந்த ஹெலிகாப்டர் மூழ்கியது. ஹெலிகாப்டரின் பைலட் மட்டும், தண்ணீரில் நீந்தி தப்பித்தார். ஹெலிகாப்டரில் பயணம் செய்த, மேலும் ஐந்து பேர், ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024