Tuesday, March 13, 2018

தலையங்கம்

வனப்பகுதியில் நடந்த துயர சம்பவம்





தேனி மாவட்டத்தில் குரங்கணி அருகே, நடந்த தீவிபத்து 9 பேரை பலிவாங்கி, எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

மார்ச் 13 2018, 03:15 AM

வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளால் காடுகள் பெருமளவில் சேதம் அடைந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் தேனி மாவட்டத்தில் குரங்கணி அருகே, கொழுக்குமலை பகுதியில் நடந்த தீவிபத்து வெறும் விபத்தாக மட்டுமல்லாமல், 9 பேரை பலிவாங்கி, 17 பேரை கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாக்கியது எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. மலை ஏறும் பயிற்சிக்காக, சென்னையில் இருந்தும், கோவை, ஈரோடு பகுதிகளிலிருந்தும் 39 பேர் கொழுக்குமலை பகுதிக்கு சென்றிருந்திருக்கிறார்கள். இரவில் கூடாரம் அமைத்து தங்கியவர்கள், காலையில் திரும்புவதற்காக மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். 3 பேர் மலையிலிருந்து இறங்கமுடியாது என்று ஜீப்பில் திரும்பிவிட்டனர். 36 பேர் மட்டும் மலைப்பாதையில் நடந்து வந்திருக்கிறார்கள். இதில், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.


அந்தநேரத்தில், திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியதால் உயிர் பிழைக்க ஆங்காங்கு ஓடிச் சென்றிருக்கிறார்கள். இதில் 9 பேர் பயத்தில் ஒரு பெரியபள்ளத்தில் விழுந்து உயிர் இழந்துவிட்டார்கள். மீதமுள்ள 27 பேர் இப்போது மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு காயம் எதுவும் இல்லை. 17 பேர் பலத்த தீக்காயங்களோடு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். உயிர் இழந்தவர்களில் சென்னையை சேர்ந்த 4 பெண்களும், கோவையை சேர்ந்த 2 ஆண்களும், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 2 பெண்களும், ஒரு ஆணும் ஆவார்கள். மீட்புப்பணியில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மிகத்தீவிரமாக ஈடுபட்டு உடனடியாக ஹெலிகாப்டர்களையும், கமாண்டோ படையினரையும் அனுப்பி வைத்தார். தமிழக அரசின் சார்பில் மிகத்தீவிரமாக மீட்புபணிகள் நடந்தது. துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் அங்கேயே இருந்து பணிகளை முடுக்கி விட்டனர். முதல்–அமைச்சர் நேற்று மாலையில் மதுரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்த்தார்.

பொதுவாக மலை ஏறும் பயிற்சிக்கு செல்பவர்கள் இதுபோன்ற காலக்கட்டத்தில் செல்லக்கூடாது. மழை பெய்து முடிந்தவுடன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் எல்லா இடங்களும் பச்சைப்பசேல் என்று ஈரப்பதத்தோடு இருக்கும் நிலையில்தான் செல்லவேண்டும். அப்போது தீக்குச்சியை கொழுத்திபோட்டாலும் தீப்பற்றாது, பரவாது. இதுமட்டுமல்லாமல், வனத்துறையினரிடம் முறையான அனுமதியை பெற்றுச் சென்றிருந்தால் துணைக்கு அந்தப்பகுதியைப்பற்றி நன்றாக தெரிந்த வனத்துறை அலுவலர் மற்றும் காட்டுக்குள் வசிக்கும் மலைவாசி போன்றவர்களை அனுப்புவார்கள் என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கணேசன். இதுமட்டுமல்லாமல், இவ்வளவு பேர் ஒரு குழுவாக மலைப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் நடமாடி இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். கோடைநேரத்தில் இதுபோன்ற காட்டுத்தீ பரவாமல் இருக்க ஆங்காங்கு தீ தடுப்பு கோடு (பயர்லைன்) என்று கூறப்படும் வகையில், 5 மீட்டர் அகலத்தில் எல்லாப்பகுதிகளிலும் ஆங்காங்கு புல் பூண்டுகளைவெட்டி வெறும்தரையாக அமைப்பது வழக்கம். அப்படி அமைத்திருந்தால் அந்த தீ தடுப்புகோட்டை தாண்டி தீபரவாமல் இருக்கும். மொத்தத்தில், இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும், அப்படியே தீவிபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கவும், மலை ஏறும் பயிற்சிக்காக யாரும் அனுமதியில்லாமல் செல்வதை தடுக்கவும் தீவிரமான நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...