Thursday, March 15, 2018

தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்பட அனைவரும் விடுவிப்பு



தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்பட 7 பேரை விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 15, 2018, 04:45 AM

சென்னை,

தயாநிதிமாறன் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதிமாறன் நிறுவனமான சன் குழுமத்திற்கு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 700-க்கும் மேற்பட்ட அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கினார் என்றும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

அதன்படி சி.பி.ஐ. போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொதுமேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி உள்பட 7 பேரை குற்றவாளியாக சேர்த்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள 14-வது சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் குற்றப்பத்திரிகையில் இல்லை என்றும், அதனால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்பட அனைவரும் மனு தாக்கல் செய்தனர்.

அனைவரும் ஆஜர்

இந்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.நடராஜன் விசாரித்தார். அப்போது தயாநிதி மாறன், கலாநிதிமாறன் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் கபில் சிபல், சிராஜ் கிஷன் கவுல், ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ. தரப்பு வக்கீல் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.நடராஜன், நேற்று பிற்பகலில் உத்தரவு பிறப்பித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்பட 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

ஆதாரம் இல்லை

இதையடுத்து நீதிபதி எஸ்.நடராஜன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் தயாநிதிமாறன் மோசடி செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சன் குழுமத்துக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டை சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை. கலாநிதிமாறன் சன் குழுமத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கும் அடிப்படை ஆதாரமில்லை.

சன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்காத நிலையில், அந்த நிறுவனத்தில் பணி புரிந்த ஊழியர்களை இந்த வழக்கில் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல.

நிரூபிக்கவில்லை

அதேபோல பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எல்லாம் சிடி வடிவில் உள்ளது என்று சி.பி.ஐ. தரப்பில் கூறினாலும், அந்த சி.டியை கடைசி வரையிலும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. சி.பி.ஐ. தனது குற்றச்சாட்டை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டதால், இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தொலைத்தொடர்பு இணைப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொய்யான வழக்கு

7 ஆண்டுகளுக்கு முன்பு என் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்தார்கள். அப்போதே நான் இது பொய்யான வழக்கு. என்னுடைய பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், சட்டரீதியாக இந்த வழக்கை சந்தித்து நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றும் நான் தெரிவித்தேன். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

இந்த வழக்கு தொடருவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை மேல் விசாரிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் கூறி இருக்கின்றனர். இதன் மூலம் எப்படிப்பட்ட பொய்யான வழக்கு இது என்பது தெரிய வந்து இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், என் சகோதரர் மீதான தொழில் போட்டி காரணமாகவும் இந்த வழக்கை பிரபலப்படுத்தி, எங்கள் தரப்பு வாதங்கள் மக்களுக்கு தெரியவிடாமல் தடுத்தார்கள். இப்போது அதில் நாங்கள் வெற்றி அடைந்து விடுப்பு பெற்று இருக்கிறோம்.

நீதி வென்று இருக்கிறது

தி.மு.க. மீது பழி போடவேண்டும். தயாநிதிமாறன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவேண்டும், தொலை தொடர்பு துறையில் பொதுமக்களுக்காக நான் கொண்டு வந்த திட்டங்களை களங்கப்படுத்த வேண்டும், அதனாலேயே தொலைதொடர்பு துறையிலே என் மீது ஒரு வழக்கு போடவேண்டும் என்று போட்டார்கள். 7 வருடங்களாக எங்களை காயப்படுத்தினார் கள். கடைசியில் பாருங்கள் ஒன்றும் இல்லையே.

இந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தேவையில்லாமல் நானும், என் குடும்பத்தாரும் தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகியுள்ளோம். இதேபோல நிகழ்வு, மற்றவர் கள் யாருக்கும் வரவேண்டாம். என்னை பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்கினால் முன்னாள் உயர் அதிகாரிகள் 2 பேரும், மேலும் சிலரும் துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இறுதியில் நீதி வென்று இருக்கிறது. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...