Thursday, March 15, 2018

தூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின



தூத்துக்குடியில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின.

மார்ச் 15, 2018, 04:45 AM

தூத்துக்குடி,

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலையில் மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 200.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் பிளஸ்-2 பொதுத்தேர்வு வழக்கம்போல நடந்தது. தூத்துக்குடியில் 40 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் 7 வீடுகள் சேதம் அடைந்தன. பலத்த மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி ரெயில்நிலைய ரோட்டில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதியில் இருந்த பள்ளத்தில் லாரி ஒன்று சிக்கியது. மழைநீர் வடிந்த பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வ.உ.சி. துறைமுக நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ரெயில் நிலையத்துக்குள் ரெயில்கள் வர முடியாத நிலை உருவானது. சென்னையில் இருந்து வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள், தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்திலேயே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதேபோன்று மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாகவும், நெல்லை-தூத்துக்குடி பாசஞ்சர் ரெயில் 3 மணி நேரம் தாமதமாகவும் வந்து சேர்ந்தது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் இணைப்பு ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மழையால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், செங்கோட்டை, கடையம், அம்பை பகுதிகளில் நேற்று முன்தினம் விடியவிடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. எனவே பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் பிளஸ்-2 தேர்வு வழக்கம்போல நடந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து உள்ளது. சேர்வலாறு அணையில் புனரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டிருப்பதால் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேறி வருவதால் முண்டந்துறை பாலம், கல்யாணதீர்த்த அருவி மற்றும் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்யாண தீர்த்த அருவிக்கரை மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் 62 ஆண்டுகளில் இல்லாத மழை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் கனமழை பெய்து உள்ளது. குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 200 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. இது வரலாறு காணாத மழை ஆகும். இதற்கு முன்பு 1955-ம் ஆண்டு 188 மில்லி மீட்டர் மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று இரவு தூத்துக்குடியில் பலத்த மழை பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் எடுத்த துரித நடவடிக்கையால் எந்த விதமான உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. தற்போது, ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பொதுமக்கள், மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024