Wednesday, March 7, 2018

அலைபேசி இணைப்புகள் தாரை வார்ப்பு : கல்வித்துறையில் அலையடிக்குது சர்ச்சை

Added : மார் 07, 2018 01:39

மதுரை: கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் 6500க்கும் மேற்பட்ட ஏர்செல் அலைபேசி இணைப்புகளை, மீண்டும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கே மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 'மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்,, நிறுவனத்திற்கு மாற வேண்டும்,' என்ற 6 ஆயிரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் கோரிக்கையை கல்வித்துறை புறக்கணித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் போலீஸ், வங்கிகள், எல்.ஐ.சி., உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், அலுவலர்களின் அலைபேசி இணைப்புகள் பெரும்பாலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., ஆக தான் இருக்கும். கேரளா உட்பட பல மாநிலங்களிலும் இந்நிலை தான் உள்ளது. ஆனால் கல்வித்துறை மட்டும் ஏர்செல்லில் சி.யு.ஜி., முறையில் நான்கு ஆண்டுகளாக உள்ளது. இந்த இணைப்பு செயலிழந்ததால் அவற்றை மொத்தமாக பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டதில் ஒரு தனியார் அலைபேசி நிறுவனத்திற்கு மாற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: ஏர்செல்லின் ஆரம்ப இணைப்பிற்காக, ஒன்றுக்கு 2040 ரூபாய் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நிதியில் இருந்து வழங்கப்பட்டது. தற்போது ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்துடன் எவ்வகை திட்டம் பின்பற்றப்படுகிறது என தெரியவில்லை. தலைமையாசிரியர்களின் கருத்து கேட்க வேண்டும். ஒப்பந்தம் செய்த அதிகாரிகள் 'பயனடைந்தார்களா' என விசாரணை நடத்த வேண்டும், என்றனர்.

பி.எஸ்.என்.எல்., கூறுவது என்ன : பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இணைப்புகள் பெற, கார்ப்பரேட் நிறுவனங்களை கையாளும் அதிகாரிகள் குழு, கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியது. பல வசதிகள் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டு, ஆரம்ப இணைப்பு ஒன்றுக்கு 25 ரூபாய்க்கு 'டாப் அப்' செய்ய வலியுறுத்தினோம். கல்வி அதிகாரிகள் மறுத்து விட்டனர்,' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024