Tuesday, March 13, 2018

குரங்கணி விபத்தில் புது மாப்பிள்ளை பலி

Added : மார் 13, 2018 01:04






கோபி: குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த, திருமணமாகி, மூன்று மாதங்களே ஆன, 'சாப்ட்வேர்' இன்ஜினியர் பலியானார்.

தேனி மாவட்டம், கொழுக்கு மலைக்கு சுற்றுலா மற்றும் மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள், நேற்று முன்தினம் காட்டு தீயில் சிக்கினர். இவர்களில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, எட்டு பேர் அடங்குவர். இவர்களில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நான்கு பேர், விபத்தில் சிக்கினர். பொம்மன்பட்டி, மகாத்மா புரத்தைச் சேர்ந்தவர் விவேக், 28; சாப்ட்வேர் இன்ஜினியர்; மனைவி திவ்யா, 25; இவர் கோபி, பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பணிபுரிகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 24; இவர், டி.எம்.இ., முடித்து, சென்னையில் பணிபுரிந்தார். கவுந்தப்பாடி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 26. இவர்கள் நால்வரும் பலத்த காயமடைந்தனர். இதில், விவேக், தமிழ்செல்வன் இறந்து விட்டனர். திவ்யா, கவலைக்கிடமாக உள்ளார். இறந்தவர்களில், சென்னை, டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியாற்றிய, கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் அகிலாவும், 24, ஒருவர். இதையறிந்த, இவரது பெற்றோர் கிருஷ்ண மூர்த்தி, 70, சாந்தி, 60, ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அகிலாவின் உடலை பெற்று வர, அவரது உறவினர்கள் தேனி சென்றுள்ளனர்.

தப்பிய மனைவி : கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 27; பி.டெக்., - ஐ.டி., படித்துள்ளார். கல்லுாரி காலத்தில் இருந்து, திவ்யா அடிக்கடி மலையேற்றத்துக்கு சென்று வந்தார். இதேபோல், கன்னியா குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விபின், 31, பி.டெக்., - ஐ.டி., படித்து, சென்னையில் உள்ள, ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வந்தார்.அங்குள்ள நண்பர்களுடன் அடிக்கடி மலையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது, விபின், திவ்யா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்கு பின், ஐ.டி., வேலையை விட்டு, கிணத்துக்கடவில் உள்ள திவ்யாவின் பெற்றோர் வீட்டில் தங்கி, அவர்களின் குடும்பத்துக்கு சொந்தமான மர மில் நிர்வாகத்தை விபின் கவனித்தார். ஆயினும், தம்பதி, ஆண்டுதோறும் மலையேற்றம் செல்வதை கைவிடவில்லை. நேற்று முன்தினம், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி, விபின் உயிர் இழந்தார். தீ காயங்களுடன் தப்பிய திவ்யா, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.பலியான விபின், திருமணத்துக்கு முன், தேனி, கம்பம் பகுதியிலுள்ள நண்பர்களுடன், 'புல்லட்' வாகனத்தில் குரூப்பாக, 'பாரஸ்ட் ரெய்டு' செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். விபினை நண்பர்கள், 'வனக்காதலன்' என பட்டப்பெயர் சூட்டி அழைத்துள்ளனர்.

புதுமண பெண் பலி : ஸ்ரீபெரும்புதுாரை, சேர்ந்தவர் பாலாஜி, 30. தனியார் தொழிற்சாலை அதிகாரி.இவருக்கு புனிதா, 26, என்பவருடன், இந்த ஆண்டு ஜனவரி, 28ல் திருமணம் நடந்தது. ஐ.டி., நிறுவனத்தில் புனிதா பணியாற்றி வந்தார். தோழிகளுடன், குரங்கணி மலைக்கு மலையேற்றத்திற்கு புனிதா சென்றார்.அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் உடல் கருகி பலியானார்.
அ.தி.மு.க., பிரமுகர் மகள் : கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகர, ஜெ., பேரவை செயலராக இருப்பவர் செல்வராஜ். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இரண்டாவது மகள் சுபா, 28, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில், நண்பர்களுடன் மலையேற்றத்திற்குச் சென்றவர், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று இரவு, 7:00 மணிக்கு, சுபாவின் உடல், திட்டக்குடி வந்தது; உறவினர்கள் கதறி அழுதனர். உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் தகனம் : குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களில் அருண் பிரபாகரன், 37, என்பவரும் அடக்கம். இவர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரகுராமன் நிலக்கிழார். அருண், சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். மலையேறுவதில் ஆர்வமுடைய இவர், பல்வேறு மலைகளுக்கு சென்று பயிற்சி பெற்றார். குரங்கணி மலை காட்டுத் தீயில் சிக்கி பலியானார். அவரது உடல், நேற்று, சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

தகவல் தெரிவித்தவர் : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டியைச் சேர்ந்தவர், நிஷா, 27; பி.டெக்., படித்துள்ளார். சென்னை, வேளச்சேரி, அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தார். மணப்பாக்கத்தில் உள்ள, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.'சென்னை டிெரக்கிங் கிளப்' சார்பில், மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றோரை, ஒருங்கிணைத்தவர்களில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சிக்கி தவித்த போது, மொபைல் போனில், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிஷா, நேற்று மாலை உயிரிழந்தார்.
ஒரே மகள் : ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வட்டக்கல்வலசையைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 46; விவசாயியான இவரின் ஒரே மகள் திவ்யா, 26; முதுநிலை பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். குரங்கணி காட்டு தீயில் சிக்கி பலியானார். நேற்று மாலை அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

பாதைமாறிய மீட்பு குழு : விபத்தில் காயம் அடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர் கூறியதாவது: இரவில் மீட்புப் பணிகளை கவனிப்பது சவாலாக இருந்தது. எனினும் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடந்தே சென்று அந்த இடத்தை அடைந்தனர். 'டோலி' மூலம் அந்த ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த மலையேற்றக்குழுவினர் 27 பேர் தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர், என்றார்.

ஆண் உடல் மீட்பு : காலை 8:30 மணிக்கு ஒரு ஆண் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். அது தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லையை சேர்ந்த மீட்புக்குழுவினர் மற்றும் தேனி சிறப்பு காவல் படையை சேர்ந்த 28 பேர் சிறப்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதை மாறினர் : திருநெல்வேலி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி மற்றும் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட மீட்புக் குழுவினர், தீப்பிடித்த மலைப்பகுதியை விட்டு வேறு திசையில் சென்றுவிட்டனர். பின், திரும்பி குரங்கணிக்கு வந்து மீண்டும் சரியான பகுதிக்கு சென்றனர்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...