Tuesday, March 13, 2018

ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

Added : மார் 13, 2018 02:14

புதுடில்லி: 'முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கை, மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க முடியாது' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், ராஜிவ், 1991ல், தமிழகத்தின், ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை, 1999ல் உறுதி செய்தது.இந்நிலையில், ராஜிவ் கொலைக்கான சதித் திட்டம் குறித்து, பல்வேறு துறைகள் அடங்கிய, சி.பி.ஐ., நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, எம்.டி.எம்.ஏ., எனப்படும், பல்துறை கண்காணிப்பு குழு விசாரிக்கிறது.இது தொடர்பான விசாரணையின் போது, முன்னாள், சி.பி.ஐ., அதிகாரி, தியாகராஜன் அளித்த அறிக்கையில், 'ராஜிவை கொலை செய்வதற்கான வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான, 'பேட்டரி' களை, பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார். 'ஆனால், எதற்காக அந்த பேட்டரியை வாங்கித் தந்தோம் என்பது, தனக்கு தெரியாது என, அவர் கூறியுள்ளார். அது குறித்து, விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, 'ராஜிவ் கொலை வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம், 1999ல் அளித்த தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும்' என, பேரறிவாளன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இதற்கு பதிலளித்து, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மனு:ராஜிவ் கொலை வழக்கில் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, பேரறி வாளன் தாக்கல் செய்த மனு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜிவ் கொலை வழக்கை, முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என, பேரறிவாளன் மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அதற்கு சாத்தியமில்லை. அதனால், வழக்கை திசை திருப்பும் வகையில் உள்ள இந்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024