Sunday, March 18, 2018

ஏளனமா பேசுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டிட்டோம்!- ஒரு திருநம்பியின் காதல் கதை...

Published : 18 Mar 2018 07:34 IST

என்.சுவாமிநாதன்

the hindu tamil



முழுமையாகக் கட்டி முடிக்காத வீடு அது. ஆனால், பூசப்படாத ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கவிதையைச் சொல்கின்றன. காதல் மொழி பேசும் கிளிகள்... மண்ணைக் கிளறும் கோழிகள் என சூழலே அவ்வளவு அழகாய் இருக்கிறது. அழகுக்கு இன்னொரு காரணம் சிவானந்த் – செளமியா காதல் தம்பதியர்!

கேரளம், பாறசாலை அருகில் தமிழகத்தின் தோலடி பகுதியில் வசிக்கிறது இந்தக் காதல் ஜோடி. பிழைப்புக்கு சாலையோரத்தில் சர்பத் கடை நடத்துகிறார்கள். என்ன விசேஷம் என்கிறீர்களா? சிவானந்த் பிறப்பினால் பெண். அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். இவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் செளமியா!


“என்கூடப் பிறந்தது மூணு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அம்மா தவறிட்டாங்க. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் எனக்குச் சின்ன வயசுலயே ஆம்பளைப் பசங்ககூட விளையாடுறதுதான் பிடிக்கும். அப்போ என் பேரு சுபா. எட்டாம் வகுப்பு படிக்கும்போது வயசுக்கு வந்துட்டேன். அதுக்கப்புறம் எனக்குப் பொண்ணுங்க மேல ஈர்ப்பு ஏற்படவும் ஆரம்பிச்சிடுச்சு.

பத்தாம் கிளாஸ் வரை படிச்சுருக்கேன். உடல் பிரச்சினையால அதுக்கு மேல ஸ்கூலுக்குப் போக முடியலை. அப்பா, அம்மா இருந்தவரைக்கும் வீட்டுல எதுவும் பிரச்சினை இல்லை. அடுத்தடுத்து அவங்க இறந்த பின்னாடி பிரச்சினை வெடிக்க ஆரம்பிச்சது. கூட பிறந்தவங்களே என்னை மொத்தமா ஒதுக்கிட்டாங்க. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லியாகணும்.

இப்படியெல்லாம் நாங்க வேணும்னே பண்ணுறதில்லை. எங்க பிறப்பிலேயே பெண் ஹார்மோன் தன்மையை மிஞ்சி ஆண் ஹார்மோன் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். இது மனசுக்கும் உடலுக்கும் இடையே நடக்குற போராட்டம். இதைக் குடும்பத்தினரும் இந்தச் சமூகமும் சரியா புரிஞ்சிக்கிறதில்லை.

இதனாலேயே வீட்டை விட்டு ஓடி பாலியல் தொழில் செஞ்சும் பிச்சை எடுத்தும் பல திருநங்கைகள், திருநம்பிகள் வாழ்க்கையே சீரழிஞ்சுடுது. நல்லவேளை நான் இன்னிக்கு நல்லா இருக்கேன்னா காரணம் செளமியாதான்...” என்பவர் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்குகிறார். பதறியபடி ஓடிவந்த செளமியா, சிவானந்த்தின் கண்களைத் துடைத்துவிடுகிறார். “நான் இருக்கிற வரைக்கும் அழக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...” என்று செல்லக் கோபம் காட்டியவர் தொடர்ந்து பேசினார். “என் தோழி ஒருத்தி மூலமாதான் சிவானந்த் பழக்கம். அவர்தான் முதலில் எனக்கு போன் செய்தார். காதலைச் சொன்னார். கூடவே தன்னோட உடல், மனசுச் சிக்கலையும் சொன்னார். ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் அவரோட நேர்மை பிடிச்சிருந்தது. அது மட்டுமில்ல, அவருகிட்ட என்னவோ இருக்கு. சொல்லத் தெரியலை. அவரை ரொம்பப் பிடிச்சிடுச்சு...” - வெட்கத்தோடு சிரிக்கிறார் செளமியா.

“ஆனால், செளமியா வீட்டுல என் விஷயத்தைச் சொல்லலை. கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சிக்கிட்டோம். அப்படியும் என்னைப் பத்தி தெரிஞ்ச ஒருத்தர் செளமியா வீட்டுல விஷயத்தைச் சொல்லிட்டாரு.

பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளைப் பண்ணாங்க. அவ விஷம் குடிச்சிட்டா. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில சேர்த்துக் காப்பாத்தினோம். கடைசியில ஊரை விட்டு ஓடிப் போனோம். பெங்களூரு, ஹைதராபாத்னு வாழ்ந்தோம்.

ஒருகட்டத்துல எங்க உறுதியைப் பார்த்துட்டு அவங்களே விட்டுட்டாங்க. இதோ இப்போ இங்கே எங்க வாழ்க்கை அமைதியாவும் நிம்மதியாவும் ஓடுது. சர்பத் கடையில தினமும் இருநூறு, முன்னூறு ரூபாய் கிடைக்கும். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷமாச்சு. ஏளனமா பேசுன ஊருக்கு முன்னாடி சொந்தக் காலில் நின்னு வாழ்ந்து காட்டிக்கிட்டிருக்கோம்... இன்னமும் காட்டுவோம்!” - உறுதியாகச் சொல்கிறார் சிவானந்த்.

குறிப்பு: தம்பதியரில் சிவானந்த் பத்தாம் வகுப்பு வரையும் செளமியா இளநிலை வணிகவியலும் படித்திருக்கின்றனர். அரசு அல்லது தனியார் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்தால் வாழ்க்கைத் தரத்தில் இன்னும் நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள் இந்தத் தம்பதியர்!

படம்: ராஜேஷ்குமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024